செய்திகள்

ஊட்டி நகரில் சுற்றித்திரியும் குதிரைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தீவிரம்

Spread the love

ஊட்டி, ஜூன் 19

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் முதல் முறையாக குதிரைகளுக்கு மைக்ரோசிப் பொருத்தப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தலமாக உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நகரின் முக்கிய இடங்களில் குதிரை, பசு மாடு, ஆடு ஆகியவை சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

குதிரைகளால் மக்கள் அச்சத்துடன் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

இதையடுத்து நகரில் உலாவரும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மூன்று முறை அபராதமாக ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய் என விதிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

கண்காணிக்க வசதி

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துடன் கால்நடை பாதுகாப்பு அமைப்பான ஐபான் அமைப்பு இணைந்து, நகரில் சுற்றித் திரியும் குதிரைகளை பிடித்து அதன் உடலில் மைக்ரோசிப் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறிப்பிட்ட குதிரைகள் எங்கு சென்றாலும் அதனை கண்காணிக்க முடியும்.

கால்நடை பாதுகாப்பு நிறுவன தலைவர் நைஜில் கூறுகையில், குதிரை உள்ளிட்ட வன விலங்குகளுக்கு மைக்ரோசிப் பொருத்தும் போது விலங்கின் அங்க அடையாளம் முதல் அனைத்து விவரங்கள் இடம் பெறுகிறது. திருட்டு மற்றும் காணாமல் போனால் கண்டுபிடிக்க முடியும். மேலும், நகரில் எந்த பகுதியில் சுற்றினாலும் அதன் உரிமையாளர்கள் அதனை கண்காணித்து பிடித்து வர முடியும்.

மைக்ரோசிப் பின் உள்ள எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்து பார்த்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும். உதகை நகராட்சியில் முதன் முறையாக இந்த பணி நடந்து வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *