மே 7-ந் தேதி முதல் அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவு
சென்னை, ஏப்.30-
கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ‘இ–பாஸ்’ கட்டாயமாக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை மே 7-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.
ஏராளமானோர் வந்து குவிந்து விடுவதால், அங்கு வாகனங்களால் போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.
இந்தநிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் தொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலமாக ஆஜராகினர்.
அவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலங்களில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது ஊட்டிக்கு தினமும் சீசன் நேரங்களில் கார், வேன் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வருகின்றன. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5 ஆயிரத்து 620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் உள்ளன. இதுதவிர 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன. இதேபோல கொடைக்கானலில் சீசன் நேரங்களில் 5 ஆயிரத்து 135 வாகனங்களும், சீசன் இல்லாத நேரங்களில் 2 ஆயிரத்து 100 வாகனங்களும் வருகை தருகின்றன.
கொடைக்கானலில் 13 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3 ஆயிரத்து 325 அறைகள் உள்ளன. கொடைக்கானலில் வாகன நிறுத்துமிடங்கள் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. ‘லேக் ஏரியா’ பகுதியில் ஒரு நிரந்தர வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி மற்றும் வட்டக்கானல் பகுதிகளில் 4 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதைப்படித்துப் பார்த்த நீதிபதிகள், “இவ்வளவு வாகனங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சென்றால் உள்ளூர் மக்களின் நிலைமை என்னாவது? இதனால், பொதுமக்கள், சுற்றுச்சூழல் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். சார்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை இடைக்கால நடவடிக்கை எடுப்பது அவசியம்” என்று கருத்து கூறினர்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பாதவது:-
கொரோனா காலகட்டத்தில் பின்பற்றப்பட்டது போல கோடை காலத்திலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் வரும் மே 7ந் தேதி முதல் ஜூன் 30ந் தேதி வரை இ–பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். இ–பாஸ் வழங்கும் முன்பாக எந்த மாதிரியான வாகனங்களில் எத்தனை பேர் வருகை தருகின்றனர்? அவர்கள் எத்தனை நாட்கள் தங்கப்போகின்றனர்? எங்கு தங்கவுள்ளனர்? போன்ற விவரங்களையும் பெற்றுக்கொண்டு, சுற்றுலா தலங்களில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளையும் தெரிவிக்க வேண்டும்.
கண்டிப்பாக இ–பாஸ் உள்ள பயணிகள், வாகனங்கள் மட்டுமே மலையேற அனுமதிக்க வேண்டும். இதில் உள்ளூர் வாகனங்களுக்கும், அன்றாட தேவைகளுக்காக செல்லக்கூடிய வாகனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும். இந்த இ–பாஸ் நடைமுறை குறித்து விரிவான விளம்பரங்களை அரசு கொடுக்க வேண்டும்.
இதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு சுற்றுலா பயணிகளுக்கு செய்து கொடுக்க வேண்டும். அத்துடன் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்கும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.