செய்திகள்

ஊட்டி கல்லட்டியில் முதல் முறையாக குறிஞ்சி விழா

ஊட்டி, செப் 12–

நீலகிரி மாவட்டம் உதகை கல்லட்டி பகுதியில் முதல் முறையாக குறிஞ்சி விழா கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அ.சாந்திராமு ஆகியோருடள் படுகர் இனமக்களின் பாரம்பரிய நடனமான படுகர் நடனத்தில் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவினை பொதுமக்களுக்கு வழங்கினர்.

இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:–

மலைகளின் அரசியான இம்மாவட்டம் மிகவும் பசுமையும், இயற்கை அழகும் நிறைந்த மாவட்டமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. எனவே இங்கு வருடாவருடம் கோடை காலத்தில் கோடை விழா மற்றும் பழக்கண்காட்சி, மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அழகும் சிறப்புமிக்க இம்மாவட்டத்தில் மேலும் இம்மாவட்டத்திற்கு அழகு சேர்த்து பார்ப்பவர்களை கவரும் வண்ணம் குறிஞ்சி மலர் இங்குள்ள கல்லட்டி, கீழ்கோத்தகிரி மலைப்பகுதிகளில் வெகு அழகாக பூத்து குலுங்குகின்றன.

இப்பூக்கள் 12 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் என்பதையும் இப்பூவின் சிறப்பு என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முதல்முறையாக இந்த வருடம் குறிஞ்சி விழா நடத்தப்படுகிறது. குறிஞ்சி பூவானது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பழனி, ஆனைமலை, நீலகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூக்கும் எனவும், செப்டெம்பர் மாதங்களில் தான் அதிகமாக பூக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கல்லட்டி மற்றும் கீழ்கோத்தகிரி பகுதிகளில் பூத்திருக்கும் குறிஞ்சி பூக்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க சிறப்பு பேருந்துகள் இயக்க பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கோழிப்பண்ணை வைக்க காட்டு நாயக்கர் முன்னேற்ற சங்கத்திற்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும், வீட்டுத்தோட்டம் அமைக்க கற்பூவ் தோடர் இயற்கை வேளாண்மை நல சங்கத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், மாவட்ட விளையாட்டு நலத்துறை சார்பில் நமது மாநிலம் தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு 50 வருடத்தில் காலெடி எடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு பொன் விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி 19.7.2018 அன்று நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் சுரேஷ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேல், சமூக நலத்துறை அலுவலர் தேவகுமாரி, முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *