ஊசி, பாசி விற்கும் இரண்டு பெண்கள் காலை வியாபாரத்தை முடித்துவிட்டு கையில் ஊசி, பாசி அடங்கிய பைகள், மடித்து வைக்கும் இரண்டு பிளாஸ்டிக் சேர்கள் சட்டை டவுசர் அணியாத அம்மணமான நான்கு வயது சிறுவன் என்று உச்சி வெயில் அடிக்கும் மதிய வேளையில் பேருந்து ஏறுவதற்காக வேக வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார்கள் .
இரு பெண்களின் தலையிலும் சின்னக் கூடைகள். இடுப்பில் தொங்கும் ஊசிமணி பாசி பைகள். ஒரு பெண்ணின் விரலை பிடித்து உடை இல்லாமல் நடந்து போகும் சிறுவன் என்று அவர்கள் நடந்து போகும் காட்சியைப் பார்த்து ஏளனமாக சிரித்தார்கள் சாலையில் நின்று கொண்டிருந்த மனிதர்கள்.
அவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்களுடைய மொழியில் பேசிக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் பேருந்து நிலையத்தை அடைந்தவர்கள், வரும் பேருந்தை எதிர்பார்த்து நின்றார்கள்.
அவர்கள் வந்து நின்றதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது. கொஞ்சம் கூட்டம் நிறைந்த பேருந்தாக வந்து நின்ற பேருந்தில் கையில் இருந்த நீளமான பிளாஸ்டிக் சேர்கள், ஊசி பாசி அடங்கிய பைகள் ஒருபாெட்டு துணி அணியாத அம்மணமான அந்தச் சிறுவன் அத்தனையும் ஏற்றிக்கொண்டு பேருந்தில் ஏறினார்கள் .
அவர்கள் பேருந்தில் ஏறும்போதே ஏற்கனவே பேருந்தில் இருந்தவர்கள் முகம் சுளித்தார்கள்; சிலர் சிரித்தார்கள். சிலர் வருந்தினார்கள். சிலர் வருத்தப்பட்டார்கள். அந்த பெண்கள் இருவரும் அவர்களுடைய மொழியில் ஏதோ பேசிக் கொண்டார்கள்.
ஒரு பெண் ஓட்டுநரின் அருகே நின்று கொண்டாள். இன்னொரு பெண் பேருந்து முன் பக்கம் நின்று கொண்டாள். அம்மணமான அந்தச் சிறுவனைப் பார்த்து சிரிக்காதவர்கள் பாவம் செய்தவர்கள் என்ற கணக்கில் அந்த பேருந்தில் இருந்தவர்கள் எல்லாம் அந்தப் பெண்களின் உடை, அந்தச் சிறுவனின் நிலை அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் பார்த்து அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டார்கள்.
இரக்கமுள்ள ஒரு ஆண்மகன் உடையில்லாத அந்தக் குழந்தைக்கு இடம் அளித்து உதவினார் .
அந்தச் சிறுவனிடம் ஏதோ சொல்லிய அந்தப் பெண் சிறுவனை அமரச் சொன்னாள் . சிறுவனும் அந்த ஆண் மகனிடம் ஒட்டி உட்கார்ந்தான்.
நடத்துனர் கூட ஏன் இப்படி ஏறுகிறீர்கள்? என்று எதுவும் சொல்லவில்லை . மாறாக சிரித்துக்கொண்டே அவர்களுக்கு பயணச்சீட்டை வழங்கினார். அதிலும் பெண்களுக்கான இலவச பயணச்சீட்டு வழங்கினார். ஆனால் அவர்கள் கொண்டு வந்திருக்கும் பொருட்களுக்கு லக்கேஜ் போட்டு பணத்தை வாங்கிக் காெண்டார்.
இரண்டு நிறுத்தங்கள் சென்ற பேருந்து கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தது. மூன்றாவது நிறுத்தத்தில் ஏறிய ஒரு யாசகர் பேருந்தில் ஏறி யாசகம் கேட்டுக் கொண்டே சென்றார் .சிலர் யாசகம் கேட்பவருக்கு பணம் கொடுத்தார்கள். சிலர் திட்டினார்கள்.
அந்த யாசகரிடம் ஒரு பெண்மணி கேட்டாள்.
எதுக்காக நீங்க எல்லார்கிட்டயும் யாசகம் கேக்குறீங்க. உங்களுக்கு தான் கைகால் நல்லாத்தானே இருக்கு . வேல செஞ்சு சாப்பிடலாமே. அந்தா பாத்தீங்களா அந்த பெண்களை யாரும் அவங்கள பார்த்துச் சிரிக்கிறாங்க. பார்க்கிறாங்க பார்த்து ஏளனம் செய்றாங்க. அப்படிங்கறது இல்லாம தன்னோட குழந்தைக்கு டிரஸ் கூட வாங்கி கொடுக்க முடியாத நிலையில் அந்த குழந்தையை தூக்கிட்டு தன்னுடைய கையே தனக்கு உதவி அப்படின்னு தன்னம்பிக்கையோட யாருகிட்டயும் யாசகம் கேட்காம வேலை செஞ்சு சாப்பிடுறாங்க. நல்லா இருக்கிற உடம்ப வச்சிட்டு யாசகம் கேட்கிறீங்க . இது தப்பு போங்க. ஏதாவது வேலை செய்யுங்க. அதுதான் நீங்க மனுசனா பிறந்ததுக்கு இருக்கிற சுயமரியாதை. அதை விட்டுட்டு யார்கிட்டயும் இப்படி காசு கேட்காதீங்க என்று அந்தப் பெண்மணி நெற்றிப்பாெட்டில் அடித்தது போல அந்த யாசகம் கேட்பவரிம் சொன்னாள்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை அந்த யாசகம் கேட்பவர். ஓடும் பேருந்து என்று கூட நினைக்காமல் ஓடியவர் ஒரு வளைவில் பேருந்து கொஞ்சம் வேகம் குறைக்க டமால் என தாவினார். தாவியவர் தனக்குப் புத்திமதி சொன்ன பெண்ணை பார்த்துக் கையெடுத்து கும்பிட்டார்.
பேருந்து விரைந்தது ஊசி பாசி விற்கும் பெண்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
யாசகம் கேட்பவரிடம் ஞானம் விதைத்த அந்தப் பெண்மணியை பார்த்து
அம்மா நீங்க சரியா சொன்னீங்க : யார் கிட்டயும் நாம யாசகம் கேட்க கூடாது. உசுரு இருக்கிற வரைக்கும் ஒழைச்சு தான் சாப்பிடணும். அதுதான் மனுஷனுக்கு அழகு என்று கும்பிட்டார்.
அந்த ஊசி பாசி விற்கும் பெண்கள் வரும் நிறுத்தத்தில் இறங்கி ஊசி பாசி பைகளையும் மடக்கும் பிளாஸ்டிக் சேரையும் நிர்வாணமாக இருக்கும். அந்த பிஞ்சு குழந்தையையும் பிடித்துக் கொண்டு வீதி வெளியே நடந்தார்கள்.
அவர்களைப் பேருந்தில் இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அந்தப் பெண்களின் ஒவ்வொரு காலடியிலும் தன்னம்பிக்கையின் தடம் பதிந்திருந்தது.