புதுடில்லி, நவ. 27–
ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. அவருக்கு வயது 30. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் கடந்த மார்ச் 10ம் தேதி தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவித்தார். இதனால் இவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பஜ்ரங் புனியா மேல்முறையீடு செய்தார்.
‘நான் வேண்டும் என்று சிறுநீர் மாதிரியை வழங்க மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்களது செயல்முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால் மறுப்பு தெரிவித்தேன்’ என பஜ்ரங் புனியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்தது.
இந்த காலகட்டத்தில் பஜ்ரங் புனியா போட்டிகளில் பங்கேற்கவோ, மல்யுத்த பயிற்சி அளிக்கவோ கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் பஜ்ரங் புனியாவும் ஒருவர். இவர், ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.