சிறுகதை

உழைப்பு – முயற்சி – நம்பிக்கை | ராஜா செல்லமுத்து

ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தான் ராஜேஷ்.

கண்டிப்பாக ஒருநாள் இந்த உலகத்தில் நாமும் ஜெயித்து வசதியோடு மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதுதான் ராஜேஷின் அளப்பரிய அலாதியான விருப்பம்.

அவனின் விருப்பத்திற்கு ஒருபோதும் மனதில் தடை வந்ததே இல்லை தான்.

நினைப்பதை சாதித்தே ஆக வேண்டும் என்று அடி மனதில் கங்கணம் கட்டி உழைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய நம்பிக்கையில் சிறிதளவும் சந்தேகமில்லை. அவன் உழைப்பிலும் சிறிதளவும் சந்தேகமில்லை. அவன் முயற்சியிலும் சிறிதளவும் சந்தேகமில்லை. உழைப்பு முயற்சி நம்பிக்கை இந்த மூன்றும் ராஜேஷுக்கு முத்தாய் அமைந்திருந்தன. அதனால் அவனின் வெற்றி என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் அவனது வாழ்க்கையில் அவனது அப்பா பொன்னையா அவன் சாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு ஜோதிடம் காண்பித்தார்.

அந்த சோதிடர் அந்த சாதகத்தை பார்த்து மேலும் கீழும் எத்தனையோ முறை வாசித்தார். பக்கங்களை புரட்டினார். புரட்டிப் புரட்டி அத்தனையையும் பக்கம் பக்கமாக படித்து பார்த்தார். கணித்தார். அவர் மூளையில் என்ன தென்பட்டதோ தெரியவில்லை. இந்த சாதகத்தில் இருக்கும் நபர் எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வளவுதான் வேலை செய்தாலும் அவருடைய வருமானம் என்பது வயிற்றுக்கும் வாய்க்கும் மட்டுமே. வசதியான வாழ்க்கைக்கு அவனுடைய வேலையும் அவனுடைய சம்பளமும் அடித்தளம் அமைத்துக் கொடுக்காது என்று அந்த சாதகத்தை கணித்த சோதிடர் அப்பாவிடம் அடித்துச் சொன்னார்.

ஐயாவிற்கு என்னவோ போல் ஆனது.

என்ன இது பையன் நல்லா வேலை செஞ்சுகிட்டு இருக்கான் நல்லாப் படிச்சி இருக்கான். நல்லா சம்பாதிக்கிறான். இவர் இப்படி சொல்கிறாரே என்று பொன்னையா நொந்து போனார். அந்த சோதிடரை விட்டுவிட்டு இன்னொருவரிடம் சென்றார். அந்த ஜோதிடரும் அந்த ஜாதகத்தை முழுக்க முழுக்க படித்துவிட்டு இந்த சாதகக்காரர் எவ்வளவுதான் உழைத்தாலும் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவருடைய வருமானம் அவருடைய இலக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் இருக்கும். அதை மீறிப் போக முடியாது என்று அவரும் அடித்துச் சொன்னார் .

அப்போது பொன்னையாவிற்கு பிடிபடவில்லை . மற்றொரு சோதிடரை சந்திக்கப் போனார். அந்த சோதிடரும் ராஜேஷின் சாதகத்தை பார்த்து இந்த ஜோதிட இந்த ஜாதகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வளவு தான் திட்டினாலும் ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் தான் இருக்க முடியும். அவரால் பெரிதாக முன்னேற முடியாது என்றும் அவர் சொன்னார்.

இப்படி மூன்று சோதிடர்களும் தன் மகனின் ஜாதகத்தை குறிப்பிட்டு சொன்னதை நினைத்து உடைந்து போனார் பொன்னையா.

மகனிடம் அதை சொல்லக் கூடாது அவன் மனமுடைந்து போவான் என்று ஜாதகத்தை கணித்த சோதிடர்களின் வார்த்தையை அவர் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து வைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் தன் மகனிடம் சோதிடர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக எத்தனையோ விஷயங்களைச் சொன்னார். உன்னால் ஜெயிக்க முடியும் உன்னால் இந்த உலகத்தில் பெரிய ஆளாக வர முடியும்; நீ ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்து கொண்டு நிறைய நபர்களுக்கு வேலை கொடுப்பாய். உன்னால் எத்தனையோ குடும்பங்கள் பிழைக்கப்போகிறது. அப்படி ஜாதகத்தை கணித்த அவர்கள் சொன்னார்கள் என்று அவர்கள் சொன்னதற்கு எதிர்மாறாக எதிர்மறையாக எத்தனையோ விஷயங்களைச் சொன்னார் பொன்னையா.

அதைச் சற்றும் எதிர்பார்க்காது மெல்லிய புன்முறுவலுடன் இயல்பாக எடுத்துக் கொண்டான். வேறு எதுவும் பேசவில்லை. அவனுடைய உழைப்பும் முயற்சியும் போய்க்கொண்டே இருந்தது . ஒரு கட்டத்தில் அப்பா இரண்டாவதாகச் சொன்ன பெரிய இடத்திற்கு வந்தான் ராஜேஷ்.

கட்டிடங்கள் கட்டினான்; அலுவலகம் திறந்தான்; வேலை வாய்ப்புகளை உருவாக்கினான்; நிறைய நபர்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி வைத்தான். இன்னும் எத்தனையோ நபர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தான். அப்பாவிற்கு இது ஒன்றும் புரியவில்லை.

என்ன இது சோதிடர்கள் சொன்னது பொய்யாக இருக்கிறதே ? ஏன் இப்படி சொன்னார்கள் என்று அவருக்கு அவரே கேள்வி கேட்டுக் கொண்டார். இப்பொழுது சாதகத்தை மீறிய சக்தியில் மகன் ராஜேஷ் முன்னால் போய் கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்தது.

மறுபடியும் அதே பழைய சோதிடகாரர்களிடம் போய், அந்த சோதிடத்தை எடுத்து காட்டியபோது அவர்களும் ராஜேஷின் வளர்ச்சியைப் பற்றி தெரியாமல் மறுபடியும் பழைய பஞ்சாங்கத்தை சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்ட பொன்னையாவிற்கு கோபம் வந்தது. அந்த இடத்திலேயே . மகனின் சாதகத்தை கிழித்துப் போட்டார்.

நீங்கள் கணித்து சொன்ன சாதகத்திற்கு உரிய என்னுடைய மகன் இப்பொழுது நீங்கள் சொன்னதற்கு எதிர்மாறாக உயர்வாக இருக்கிறான். நிறைய பேருக்கு வேலை கொடுக்கிறான். ஒரு நிறுவனத்தின் தலைவனாக இருக்கிறான். எத்தனையோ குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கொண்டிருக்கிறான்.

ஒரு பலவீனமான மனிதர்களிடம் இதை சொல்லி இருந்தால் சாதகத்தில் சொன்னது தான் மனித வாழ்க்கையில் நடக்கும் என்று அடுத்த இடத்திற்கு போகாமல் முடங்கிப் போய் விடுவார்கள் .ஆனால் நீங்கள் சொன்ன எதையும் என் மகனிடம் சொல்லவில்லை.

அவனுடைய உழைப்பும் முயற்சியும் நம்பிக்கையும்தான் அவனை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. அதனால் சோதிடம் என்பது உண்மையோ பொய்யோ என்பது தெரியாது.

மனித மனங்களின் நேர்மைக்கும் உண்மைக்கும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் நம்பிக்கைக்கும் முன்னால் நீங்கள் சொல்வது சும்மா என்று பொன்னையா சொன்னபோது,

அவர்கள் தங்களது இடத்தைக் காலி செய்து விட்டு இன்னொரு இடத்துக்கு சென்றுகொண்டிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *