சிறுகதை

உழவும் தொழிலும் – ராஜா செல்லமுத்து

படித்து முடித்து வேலையில்லாமல் அலைந்து கொண்டிருந்த ஐந்து ஆறு இளைஞர்களைப் பார்த்த சங்கருக்கு வருத்தம் மேலிட்டது.

இந்தக் காலத்து படிப்பெல்லாம் ஏட்டுச் சுரக்காய்; கறிக்கு உதவாது ; அப்படின்னு சொல்ற மாதிரி இந்த பசங்க எல்லாம் படிச்சிட்டு சும்மா அலையுறானுங்க. படிச்ச படிப்புக்கு வேலை இல்ல. செலவுக்கு கைல காசு இல்ல. கல்யாணம் காட்சி முடிச்சு அந்த வயசுல வாழ வக்கில்ல. என்ன செய்வான். கையில பணம் புரண்டா தான வாழ்க்கையே இனிப்பா இருக்கும். இவனுங்கள சொல்லி குத்தம் இல்லை என்று சங்கர் அந்த தெருவில் இருந்த இளைஞர்களைப் பார்த்து ரொம்பவே வருத்தப்பட்டார்

அந்த இளைஞர்கள் பற்றி சங்கர் பேசுவதை கேட்ட சேது

‘‘ஆமா ஐயா நீங்க சொல்றது உண்மைதான் . என்ன பண்றது. வேற வழி இல்ல. இல்ல நடுத்தர குடும்பத்தில பிறந்துட்டாேம். எந்த வேலை செய்றதுன்னு தெரியல. புதுசா தொழில் தொடங்குறதுக்கும் வழி இல்ல. நீங்க ஏதாவது வழி காட்டுனீங்கன்னா அத நாங்க செய்வோம். படிச்சிட்டோம் அப்படிங்கிற பந்தா எங்களுக்கு இல்ல. எந்த வேலை கொடுத்தாலும் நாங்க செய்வோம். நாங்க தயாரா இருக்கிறோம் என்று சேதுவும் அவர் நண்பர்களும் சங்கரிடம் முறையிட்டார்கள்.

எந்த வேலை கொடுத்தாலும் செய்வீங்களா ? என்று உறுதியாக கேட்டார் சங்கர்.

ஆமா ஐயா நீங்க எது கொடுத்தாலும் நாங்க செய்ய தயாரா இருக்கோம் என்று சங்கரிடம் நண்பர்கள் உறுதிப்படக் கூறினார்கள்.

அப்படின்னா நான் ஒன்னு செய்றேன். நீங்க படிச்சவன் அப்படிங்கற கௌரவம் பார்க்க கூடாது. அதையும் மீறி நீங்க செஞ்சீங்கன்னா உங்க வாழ்க்கையில ஒசந்த இடத்துக்கு வர முடியும் என்றார் சங்கர்.

நீங்க எது சொன்னாலும் பரவாயில்லய்யா. அடுத்தவங்க கிட்ட கை நீட்டி காசு வாங்க கூடாது. அப்படிங்கிற கொள்கையில் இருக்கிறதினால தான் நாங்க இன்னும் வறுமையில் இருக்கம். நாங்க இறங்கி தொழில் செய்வதற்கு தயாரா இருக்கோம். என்ற போது

சபாஷ் என்று தட்டிக் கொடுத்தார் சங்கர்.

நாளைக்கு என்னைய வீட்டில் வந்து பாருங்க

என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் சங்கர்.

என்ன வேலை தரப் போகிறார். நம்மை என்ன நினைத்து இதைச் சொல்லி இருக்கிறார்?

என்று குழம்பிப் போயிருந்தார்கள் சேதுவும் நண்பர்களும்

மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் சங்கர் வீட்டுக்கு சென்றார்கள் .

குட், சொன்னது மாதிரியே வந்துட்டீங்க. இப்படி உக்காருங்க என்றார். உட்கார்ந்தார்கள். அனைவருக்கும் காபி வரவழைத்தார். காபி வந்தது. குடித்துக் கொண்டே

தம்பி வானவில் அப்படின்னு ரியல் எஸ்டேட் ஒன்னு நான் பண்ணிட்டு இருக்கேன் . அத நிறைய பேருக்கு பிளாட் போட்டு வித்திட்டேன். அந்த இடத்தை வாங்கினவங்க அப்படியே சும்மாதான் போட்டு இருக்காங்க. எப்படியும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு தான் அதெல்லாம் வீடாக கட்ட போறாங்க. அப்படி சும்மா கிடக்கிற நிலத்தை நீங்க ஏன் அதுல விவசாயம் பண்ணி பணம் சம்பாதிக்க கூடாது

என்று சங்கர் கேட்டபோது ‘அது எப்படிய்யா அவங்க அனுமதிப்பாங்களா? என்று சேது கேட்டான்.

நான் கேட்கிறேன்.அவங்க அனுமதிப்பாங்க. ஏன்னா மொத்த இடமும் என்னுடையது.எல்லா பத்திரமும் என்கிட்ட தான் இருக்குது. நீங்க விவசாயம் பண்ணுங்க .அதுக்கு நான் கேரண்டி . தண்ணீர் இருக்குது. ஆளுக்கு ஒரு பக்கமா நீங்க என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ. அந்த ரெண்டு வருஷத்துக்குள்ள செஞ்சி உங்க வாழ்க்கை சீர் படுத்திக்கொள்ளுங்க என்றார் சங்கர்

அவர் சொன்னது தான் தாமதம் சீர்படுத்தப்பட்ட அந்த நிலத்தை பண்படுத்தி விவசாயத்திற்கு தயார் செய்தார்கள்.

சில மாதத்திற்கு எல்லாம் அவர்கள் பயிரிட்ட பயிர்கள் காய்ப்புக்கு வந்தது .

அத்தனையும் வெளிச்சந்தையில் விற்றார்கள் .பணம் கொட்டியது. நிலத்தை வாங்கியவர்களுக்கு பங்கும் கொடுத்தார்கள்.

தம்பி உங்க உழைப்பு இது உங்களுக்கு உரியது .எங்களுக்கு வேண்டாம் . அந்த நிலம் சும்மா தான் கிடக்கு. நீங்க விவசாயம் பண்றதுனால அந்த நிலம் ஒன்னும் குறைஞ்சு போறது இல்ல .

நீங்க நல்ல நிலைமைக்கு வந்தாலே அது போதும் என்று அவர்களிடம் பணம் வாங்க மறுத்தார்கள் நிலத்திற்குச் சொந்தக்காரர்கள் .

அந்த இரண்டு வருடத்தில் சேதுவும் அவன் நண்பர்களும் வானவில் நிலத்தைப் போல பெரிய நிலப்பரப்பை வாங்கும் அளவிற்கு பணத்தை சேகரித்தார்கள் .

இது அத்தனைக்கும் காரணம் சங்கர்தான் அந்த அய்யாவை நாம் மறக்கக்கூடாது என்று அத்தனை பேரும் நெடுஞ்சண்டையாக அவர் காலில் விழுந்தார்கள்.

தம்பி எல்லா மனுசனுக்குள்ளேயும் திறமை இருக்கு . ஆனா வழிகாட்டத்தான் இங்க ஆளு இல்ல. பாருங்க சும்மா கிடந்த நிலத்தை விவசாயம் பண்ணுனீங்க. உங்களுக்கு அது பலமா அமைஞ்சது.

அந்த விவசாய நிலமும் குறைய போறதில்லை. உங்களை உங்களுக்கு அது வாழ்க்கை கொடுத்தது .

இதை நீங்களும் அப்படியே கடைபிடிக்கணும் தம்பிகளா

உங்கள மாதிரி வேலை இல்லாம இருந்த ஆளுகளை நான் எப்படி கண்டு பிடிச்சு உங்களுக்கு வேலை கொடுக்கணும்ன்னு நெனச்சனாே அது மாதிரி நீங்களும் வேலையில்லாத ஆளுகள கண்டுபிடிச்சு அவங்களுக்கு வேலை கொடுங்க . அப்படி செஞ்சீங்கன்னா. அது தான் எனக்கு கொடுக்கிற மரியாதை என்று சொன்னார் சங்கர்

நிச்சயமா செய்கிறோம் ஐயா என்று சொல்லி என் நண்பர்கள் அவர்கள் வாங்கிய நிலத்தில் அவர்களைப் போல இப்போது வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலையை ஏற்படுத்தினார்கள்.

அவர்களும் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள்.

உழவும் தொழிலும் அவர்களுக்கு வாழ்வில் வளத்தை அள்ளித் தந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *