செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள்: அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்

விழுப்புரம், மே 8–

விழுப்புரம் மாவட்டத்தில் 143 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்களை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டம் உணவு உற்பத்தியில் தமிழக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தப் பணியில் 96 சதவீதம் சிறு, குறு விவசாயிகளின் பங்களிப்பு உள்ளதால், இவர்கள் தங்களது விவசாய சாகுபடி பணிகளை காலத்தே செய்வதற்காக பல்வேறு வேளாண் இயந்திரங்களை பண்ணைக் குழுக்கள் மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது.வேளாண் குழுக்கள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்கி சிறு, குறு விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கில், கூட்டுப் பண்ணைத் திட்டத்தின்கீழ், அரசு இதை செயல்படுத்தி வருகிறது.

இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில், மானிய விலையில் ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான 593 பண்ணை இயந்திரங்கள், 143 விவசாய உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று உழுவு கருவிகளான ரொட்டவேட்டா, டிராக்டர், மினி டிராக்டர், பவர் டிரில்லர், நடவு இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை வேளாண் குழுவினருக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், வேளாண் இணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார், துணை இயக்குநர்கள் ஏழுமலை, செல்வபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *