போஸ்டர் செய்தி

உள்ளாட்சி துறைக்கு 3 தேசிய விருதுகள்

புதுடெல்லி, செப்.11–

தமிழ்நாட்டில் 2017–-18–ம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மத்திய அரசின் மூன்று தேசிய விருதுகளை மத்திய ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து ராஜ் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமரிடமிருந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.

மத்திய அரசின், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஊரக குடும்பங்களுக்கும் ஒரு நிதியாண்டில் சராசரியாக 100 நாட்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தை வழங்கும் மிகச்சிறந்த சமூக பாதுகாப்பு திட்டமாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளர் மதிப்பீட்டினை எய்துவதில் 84% பெண்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. நடப்பு நிதியாண்டில், தமிழ்நாட்டிற்கு 25 கோடி மனித சக்தி நாட்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தேசிய அளவிலான மாநில விருதுகள்

1) தமிழ்நாட்டில் 2017-–18–ம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 58 லட்சம் பணியாளர்களுக்கு 23.89 கோடி மனித சக்தி நாட்களுக்கு ரூ.5,344 கோடி ஊதியம் வழங்கியதற்கும், தமிழக அரசால் வடிவமைக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறையை பின்பற்றி 15 நாட்களுக்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் 99.18% எட்டியுள்ளமைக்கும், நிதி மாற்று ஆணையை விடுவிப்பதிலும், குறித்த காலத்திற்குள் ஊதியம் வழங்குதல் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஊதியத்திற்கு இழப்பீடு வழங்குவதில் சிறந்த செயல்பாட்டிற்கும் தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும்

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு

2) 2017–-18–ம் நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 16,89,480 சொத்துக்களில் 16,83,863 சொத்துக்கள் அதாவது 97.89% புவிக்குறியீடு செய்யப்பட்டு தேசிய அளவில் அதிகமாக புவிக்குறியீடு செய்த சாதனைக்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்படும் சொத்துகளுக்கு புவி குறியீடுதலில் சிறந்த முயற்சிகளுக்கு தேசிய அளவில் முதலிடத்திற்கான விருதும்
3) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2017-–18–ம் நிதி ஆண்டில் 85,64,587 தொழிலாளர்களில், 84,99,273 தொழிலாளர்களின் ஆதார் எண்கள் அதாவது 99.23% ஆதார் எண்கள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டு நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் ஆதாருடன் இணைந்த ஊதியம் செலுத்தும் முறை மற்றும் ஊதியம் ஈடுசெய்யப்படும் முறையில் ஊதியம் செலுத்துதலில் சிறந்த செயல்பாட்டிற்காக தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான விருதும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக் கொண்டார்.

2 மாவட்டங்களுக்கு விருது

தேசிய அளவிலான மாவட்ட விருதுகள் விவரம்

4) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாவட்ட அளவில் சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்ட 18 மாவட்டங்களில், தமிழகத்தின் திருவண்ணாமலை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு, 2016-–17 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறந்த செயல்படுத்தியமைக்காக, தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை மற்றும் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தஞ்சாவூர் மாவட்டம்) ப.மந்திராசலம், ஆகியோர் பெற்று கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 2016–-17–ம் ஆண்டு, ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் சிறப்பு முயற்சியாக தடுப்பணை கட்டுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மீள் நிரப்புத் தண்டு அமைத்தல் போன்ற இயற்கை வள மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டதற்காகவும் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரஷாந்த் வடநேரே, (முன்னாள் மாவட்ட கலெக்டர், திருவண்ணாமலை) மற்றும் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) க.லோகநாயகி ஆகியோர் இந்த தேசிய விருதுகள் பெற்றுக் கொண்டனர்.

5) மத்திய அரசின், கிராம ஸ்வராஜ் அபியான் இயக்கத்தின் கீழ், குறிப்பிட்ட 7 முக்கிய திட்டங்களில் தன்னிறைவு எய்தி சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, மாவட்டங்களுக்கான தேசிய விருது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை, தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் அத ன்கலெக்டர் நந்திப் நந்தூரியும் மற்றும் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி) எஸ்.எஸ்.தனபதி ஆகியோர் பெற்று கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *