செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் 13,357 மாற்றுத்திறனாளிகள் நியமனம்: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, ஜூன்.22-–

உள்ளாட்சி அமைப்புகளில் 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் நியமனங்களில் ஜூலை 1-ந் தேதி முதல் முதல்கட்ட நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1974-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் தற்போது ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அங்கு முதல் நிகழ்ச்சியாக உள்ளாட்சி பொறுப்புகளில் மாற்றுத்திற னாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியமைக்காக மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் சிங்கம் சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

விழாவில் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் நாதன், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் தங்கம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்க தலைவி ஜான்சிராணி, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிம்மசந்திரன், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர் முதலமைச்சரை பாராட்டி பேசினர்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்று எனக்கு உணர்ச்சிப்பூர்வமான நாள். இந்த விழாவிற்காக மட்டுமல்ல; இந்த இடத்திற்காகவும் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். உங்களுக்கெல்லாம், மாற்றுத்திற னாளிகள் என பெயர் வைத்த தாய் கருணாநிதி. இந்தப் பெருமைமிகு வள்ளுவர் கோட்டத்தில் இந்த விழா நடைபெறுகிறது. நீங்கள் எல்லாம் இணைந்து இந்த பாராட்டு விழா நடத்துவதில் மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன்.

வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் கருணாநிதி சூட்டிய புகழ்மாலைகளில் மிக முக்கியமானது, 1974-ல் அவர் அடிக்கல் நாட்டிய இந்த வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவர் சிலையும், திருவாரூர் தேரும் அமைந்துள்ள இந்தக் கோட்டம், தலைவர் கருணாநிதியின் கனவுப் படைப்பு. இந்தக் கலைக் கருவூலத்தை தான் நாம் இப்போது ரூ.80 கோடியில் புதுப்பித்திருக்கிறோம்.

இங்கே பேசியவர்கள், கோரிக்கை ளையும் வேண்டுகோளாகவும் சொல்லி யிருக்கிறீர்கள். என்றும் நான் உங்களில் ஒருவன். உங்களுக்கான அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றியே தீருவேன். இத்துடன் முத்தாய்ப்பாக தான் உங்களுக்கான கோரிக்கையை நீங்களே ஒலிக்கவேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாற்றுத்திறனாளி உறுப்பினர் இடம் பெறுவார் என்று மாபெரும் சமூகநீதி உரிமையை சட்டமாக்கி இருக்கிறோம். இதன் மூலம், 13 ஆயிரத்து 357 மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

நகர்ப்புறத்தில் 650 பேர்

தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 650 மாற்றுத்திறனாளிகளும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 2 ஆயிரத்து 984 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள். மாவட்ட வாரியாக, ஜூலை 1-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்படும். மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கின்ற உறுப்பினர் ஒருவர் இடம் பெற்றிருப்பார். நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு வழங்கப்படுவது போல மதிப்பூதியம் வழங்கப்படும். உறுப்பினர்களுக்கு உள்ள கடமைகள் மற்றும் அதிகாரங்களை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. அதனால், உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!

இங்கே வருகை தந்திருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகளின் சேவைகளுக்காக அயராது பணி செய்கின்ற நல்ல உள்ளங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டுகிறேன். இது எல்லாருக்குமான ஆட்சி, எல்லாரையும் முன்னேற்றுகின்ற ஆட்சி. அதனால் தான் சில வகுப்புவாத சக்திகளால் அவர்களுக்கு துணை போகின்ற கொத்தடிமைக் கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சமத்துவம் உருவாகக் கூடாது என்று நினைக்கின்ற வகுப்புவாதிகள் தான் தி.மு.க. அரசு மீது பாய்கிறார்கள். அதையெல்லாம் அரசியல் களத்தில் முறியடிக்கக்கூடிய வலிமையை தருவது நீங்களும், மக்களும் தருகின்ற அன்புதான். அந்த வகையில், என் மனதுக்கு இதமாக இத்தகைய விழாவை ஏற்பாடு செய்திருக்கின்ற மாற்றுத்திறனாளி சகோதார சகோதரிகள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. வள்ளுவம் வாழ்வியல் நெறியாக மாறட்டும். சமுதாயம் குறள் சமுதாயமாக மலரட்டும் என்று கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன் மற்றும் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *