சிறுகதை

உள்ளம் தொட்ட உத்தமி -கரூர். அ. செல்வராஜ்

வயது முதிர்ந்த காலத்திலும் வேலை செய்து பிழைப்பதைப் பெரிதும் விரும்பினாள் விஜயலட்சுமி.

பேருந்து நிலையத்துக்கு வெளியே பூ வியாபாரம் செய்து வந்தாள்.

சாலையோரத்தில் குடையை விரித்து அதன் நிழலில் உட்கார்ந்து கொண்டு பூ விற்பதைத் தொடர்ந்து செய்து வந்த விஜயலட்சுமி அம்மாளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்தனர்.

காலை நேர விற்பனை குறைவாக இருந்தாலும் மாலை நேர விற்பனை சற்றே அதிகரிக்கும். பூ விற்பனை தொடங்கிய மாலை நேரத்தில் வழக்கமான வாடிக்கையாளர்கள் பூவை வாங்கிச் சென்றனர்.

அப்போது ….

புதிய முகம் ஒன்று விஜயலட்சுமி அம்மாளின் கண்ணில் பட்டது.

பூ வாங்க வந்த வாலிபன் விஜயலட்சுமி அம்மாளின் அருகில் நெருங்கி வந்து தனது கரகரப்பான குரலில் ‘பாட்டி, மல்லிகைப்பூ ரெண்டு முழம் குடுங்க’ என்று கேட்டான்.

மல்லிகைப்பூவில் ரெண்டு முழத்தை அளந்து அதை வாலிபனிடம் கொடுத்து விட்டுப் பேசினாள்.

‘தம்பி! 30 ரூபாய் கொடுப்பா’ என்றாள்.

பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்சை எடுத்த வாலிபன் அதிலிருந்து 200 ரூபாய் பணத்தாளை நீட்டினான்.

அதைப் பார்த்த விஜயலட்சுமி அம்மாள் வாலிபனிடம் ‘தம்பி! 30 ரூபாயைச் சில்லறையா குடுப்பா. உனக்கு மீதிப்பணம் 170 ரூபாயைக் கொடுக்க என்னிடம் இப்ப சில்லறை இல்லியேப்பா’ என்றாள்.

பூக்கார பாட்டியின் பதிலை கேட்ட வாலிபன்,

‘‘பாட்டி! எங்கிட்ட இந்த 200 ரூபாயை விட்டா அப்புறம் மத்த நோட்டுகள் எல்லாம் 500 ரூபாய்களாத்தான் இருக்குது. சரி பாட்டி, நீங்கள எனக்கு மீதிப்பணம் எதுவும் இப்பத் தர வேண்டாம். நாளைக்கு சாயந்திரம் நானே நேரில் வந்து வாங்கிக்கிறேன்’’ என்று சொன்னான்.

வாலிபனின் பதிலைக் கேட்ட விஜயலட்சுமி அம்மாள் ‘தம்பி! உன் பேரும் தெரியலே, உன் ஊரும் தெரியலே, இந்த நிலைமையிலே, சரியான ஞாபகம் வச்சுகிட்டு நான் எப்படி அடையாளம் கண்டுபிடிச்சு 200 ரூபாயை எப்படித் திருப்பித் தர்றது’ என்று கேட்டாள்.

பூ விற்கும் பாட்டியின் பேச்சில் நியாயம் உள்ளதை உணர்ந்து கொண்ட வாலிபன் ‘பாட்டி! என் பேரு சந்தோஷ்குமார். நான் இந்த ஊர்க்காரன் தான். அதிலும் புதுசாக் கல்யாணம் ஆனவன். உங்க மேலே எனக்கு முழுசா நம்பிக்கை இருக்குது. என்னை நீங்க ஏமாத்த மாட்டீங்க. அதனாலே நாளைக்கு சாயந்திரம் கட்டாயம் நேரில் வந்து மீதிப் பணத்தை வாங்கிக்கிறேன். நேரில் வரும்போது கருப்புக் கலர் பேன்ட்டும். வெள்ளை நிறத்திலே சட்டையும் போட்டுகிட்டு வர்றேன்’ என்றான்.

வாலிபன் சந்தோஷ்குமாரின் பேச்சைக் கேட்ட விஜயலட்சுமி அம்மாள் ‘தம்பி சந்தோஷ்! நானும் உன்னை நம்பறேன். அதனாலே நீ வாங்கிய மல்லிகைப்பூவுக்கு இப்ப பணம் எதுவும் தர வேண்டாம். புது மாப்பிள்ளையா இருக்கிற நீ இந்த 200 ரூபாயை இப்ப வாங்கிட்டு போ. சில்லறையை மாத்திகிட்டு நாளைக்கு வரும்போது எனக்குத் தர வேண்டிய 30 ரூபாயைக் கொடுப்பா’ என்றாள்.

பணத்தை வாங்கிப் பர்சில் வைத்த சந்தோஷ்குமார் பூக்காரப் பாட்டியின் நல்ல உள்ளத்தை மனதில் நினைத்துப் பாராட்டிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். பூக்காரப் பாட்டி அவனின் உள்ளம் தொட்ட உத்தமி ஆனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *