செய்திகள் போஸ்டர் செய்தி

உள்நாட்டு விமான போக்குவரத்து 61 நாட்களுக்கு பிறகு இன்று துவங்கியது

தெர்மல் ஸ்கேனர், முழு கவச உடைகளில் விமான ஊழியர்கள் 

உள்நாட்டு விமான போக்குவரத்து 61 நாட்களுக்கு பிறகு இன்று துவங்கியது

முழு பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி

 

சென்னை, மே. 25–

61 நாட்களுக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து இன்று துவங்கியது. முழு கவச உடைகளில் இருந்த விமான ஊழியர்கள் பயணிகளை முழுவதுமாக பரிசோதனை செய்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 31ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று முதல் 1,050 உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து விமான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.

61 நாட்களுக்கு பிறகு இன்று உள்நாட்டு விமான சேவை துவங்கியது.

உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

முதல் உள்நாட்டு விமானம் டெல்லியில் இருந்து புனேவுக்கு அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டது. டெல்லி விமான நிலையத்திற்கு முதல் விமானம் காலை 7:45 மணிக்கு வந்தது. முதல் விமானங்களில் துணை ராணுவ வீரர்கள், ராணுவ வீரர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய தவறிய புலம்பெயர்ந்தோர் பயணம் செய்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக இருப்பதால் விமான பயணங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அனைத்து இடங்களிலும் சமூக விலகல், பயணிகளின் உடலை தொட்டு பரிசோதனை செய்யாமல் வெப் செக்இன் உள்ளிட்ட அம்சங்கள் தீவிரமாக பின்பற்றப்பட்டன. விமான ஊழியர்கள் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருந்தனர்.

சென்னை

சென்னையில் இருந்து முதல் விமானமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் டெல்லி புறப்பட்டது.

மாஸ்க்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்க்கையும் பயணிகள் அணிந்திருந்தனர். விமானத்தில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக 260 பயணிகளுக்கு பதிலாக 111 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர்.

விமான நிலையம் வரும் பயணிகள் அனைவரின் பொருள்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பயணிகள் கை கழுவுவதற்காக தானியங்கி யந்திரம் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் காலணிகள் மூலம் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட தரை விரிப்பில் காலணிகள் சுத்தம் செய்து, பயணிகள் அனைவருக்கும் தர்மல் ஸ்கேனிங் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

தற்போது உள்ள விமான சேவைகள் 30ம் தேதி வரை எந்த ஒரு மாற்றம் இல்லை என்றும் 31ம் தேதிக்கு பிறகு விமானங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை

மதுரை விமான நிலையத்தில் இருந்து மதுரை சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவைகள் தொடங்கியது.

மதுரை விமான நிலையத்திற்குள் மருந்தகங்கள், உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தது.

மதுரை விமான நிலையத்தில் இன்று முதல் விமான சேவையாக சென்னையிலிருந்து காலை 7.05 மணிக்கு இண்டிகோ விமானம் மதுரைக்கு வந்தது. மீண்டும் 7.35 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது. பெங்களூர், டெல்லி, திருவனந்தபுரத்துக்கு மதுரையிலிருந்து விமானங்கள் புறப்பட்டு சென்றன. மதுரை விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு கையுறைகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னை செல்ல 38 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானம் இன்று காலை ரத்து செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சியில் இருந்து சென்னைக்கு இன்று முதல் விமான சேவை இயக்கப்பட உள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. பயணிகளும் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் திருச்சி – சென்னை இடையேயான விமான சேவை மே 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த அளவில் விமானங்கள் இயங்கின

உள்நாட்டு விமான சேவையை முழுமையாக அனுமதிக்க மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தமிழகம் போன்ற மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு மாநில அரசுகள் விமானப் பயணத்தின் மூலம் வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விதியை தீவிரமாக அமல்படுத்தியிருப்பதால் பயணிகளிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. இதனால் ஏராளமானோர் ஏற்கெனவே டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டனர். இதனால் விமானங்கள் தங்கள் இயக்கத் திட்டமிருந்த விமானங்களின் அளவில் மூன்றில் ஒருபகுதி மட்டுமே இன்று இயக்கப்பட்டன.

மேற்கு வங்கத்தில் உம்பன் புயல் தாக்கத்தால் கொல்கத்தா மற்றும் பக்தோரா விமான நிலையங்கள் இன்னும் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை எந்த விமானமும் மேற்கு வங்கத்துக்கு இயக்கப்படாது. ஆனால், 28-ம் தேதி முதல் நாள்தோறும் 20 விமானங்களை மட்டும் இயக்கினால் போதும் என மாநில அரசு விமானப்போக்குவரத்து துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேபோல மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் விமானங்கள் இயக்கம் இன்று குறைக்கப்பட்டுள்ளன.

இதேபோல ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம், விஜயவாடா நகரங்களுக்கு குறைந்த அளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.கேரள, பஞ்சாப், அசாம் அரசும் தங்கள் மாநிலத்துக்குள் வரும் விமானப்பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அரசின் தனிமை முகாமுக்கு அனுப்பப்படுவார்கள், மற்றவர்கள் அவர்களின் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பில் 7 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக அரசின் தனிமை முகாமுக்கு 7 நாட்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதியானால் அடுத்த 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த தனிமைப்படுத்தும் விதிமுறைகளால் பயணிகளிடையே அச்சம் எழுந்து பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

* * *

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் தனியாக பயணம் செய்துள்ளான்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. இதில் 5 வயது சிறுவன் ஒருவன் தனியாக பயணம் செய்துள்ளான். விமான நிலையத்தில் சிறுவனை அழைத்துச் செல்ல வந்த சிறுவனின் தாயார் இதனை உறுதி செய்துள்ளார். எனது 5 வயது மகன் விஹான் சர்மா டெல்லியில் இருந்து தனியாகப் பயணம் செய்துள்ளான். அவன் 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூருவுக்கு வந்துள்ளான் என தெரிவித்தார்.

* * *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *