செய்திகள்

உள்நாட்டு உற்பத்தியில் 3-வது இடத்தில் தமிழகம்: தனிநபர் வருமானத்திலும் முன்னேற்றம்

Makkal Kural Official

சென்னை, செப்.18-–

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோன்று, தனிநபர் வருமானத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்பது ஜி.டி.பி. எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் இருக்கிறது.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதத்தை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மாநிலங்களின் உற்பத்தி அடிப்படையில்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளை ஒப்பிட்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது.

அதன்படி, கடந்த 1961-ம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணகக்கிடப்பட்டு மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2023-–24-ம் நிதியாண்டின் பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாநில வாரியாக எப்படி உள்ளது? என்ற விவரங்களை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர்களான சஞ்சீவ் சன்யால் (பொருளாதார மேதை), ஆகன்க்‌ஷா அரோரா (நிதி ஆயோக் துணை இயக்குனர்) ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டு இந்த மாதம் (செப்டம்பர்) மத்திய அரசிடம் அளித்துள்ளது.

தென் மாநிலங்கள் 30% பங்களிப்பு

2023–-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்களிப்பை தென்மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அளித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

தனிநபர் வருமானத்தை பொறுத்தமட்டில் தேசிய சராசரியை ஒப்பிடும்போது தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ‘தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 3-வது இடத்தில் உள்ளது.

மராட்டிய மாநிலம் 13.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரா 9.7 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், தமிழகம் 8.9 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் இருக்கிறது.

1991-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை.

1991-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கைக்கு பிறகு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென்மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

மேற்கு வங்கம் பின்னடைவு

ஒட்டுமொத்த மாநிலங்களும் சராசரி வளர்ச்சியை எட்டிய போதிலும், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் பின்னடைவை சந்தித்து உள்ளது.

அதாவது, 1961-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் 10.5 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உற்பத்தி தற்போது 5.6 சதவீதமாக குறைந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தென்மாநிலங்கள், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மேற்கு மாநிலங்கள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகின்றன. வடமாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளது.

மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் வளர்ச்சி கவலை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக பொருளாதார பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது.

பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தனிநபர் வருமானம் மிக குறைவாக இருப்பதால் இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள தென்மாநிலங்களை நோக்கி வருகிறார்கள்’ என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *