முனிச், பிப்.19–
உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் மென்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே பறந்த ராட்சத பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இது சீனாவின் உளவு பலூன் என்று அமெரிக்கா தெரிவித்தது.
ஆனால் அதை மறுத்த சீனா, அந்த பலூன் வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்டது என்று தெரிவித்தது. பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்தது. இவ்விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜெர்மனியில் முனிச் நகரில் நடந்த சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனாவின் மூத்த வெளியுறவு கொள்கை அதிகாரியான லாங் யீ ஆகியோர் சந்தித்து பேசினர்.
உளவு பலூன் விவகாரத்துக்கு பிறகு இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது சீனாவுக்கு அமெரிக்க அமைச்சர் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் வழங்கினால் தடைகள் மற்றும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் உளவு பலூன் விவகாரத்தால் அந்த பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.