நியூயார்க், நவ. 14–
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட்டை, அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக நியமனம் செய்து, டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தேர்தலுக்கு முன்பாக, அளித்த வாக்குறுதியின்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் அரசு திறன் துறையின் தலைமை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட்டை நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கட்சி மாறியவர்
முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 43 வயதான துளசி கப்பார்ட், 2022 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 20 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார். கமலா ஹாரிஸ் உடன் டிரம்ப் நேருக்கு நேர் விவாதம் நடத்தவும் துளசி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நியமனம் பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க மக்களின் பாதுகாப்பு, சுதந்திரம் உள்ளிட்ட அம்சங்களை பாதுகாக்க, உங்களின் அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று, அதிபர் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.