செய்திகள் நாடும் நடப்பும்

உலக வர்த்தக அரசியலில் இந்திய – ரஷ்ய உறவுகள் ஏற்படுத்தும் புது நம்பிக்கை


ஆர்.முத்துக்குமார்


உக்ரைனில் ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாள் முதலாய் இந்தியாவின் பொருளாதாரம் புதிய திசையில் தலைநிமிர்ந்து நடைபோட பல காரணங்கள் உண்டு.

அதிமுக்கியமாய் கச்சா எண்ணை மிக குறைந்த விலையில் கிடைப்பது உண்மை. ஆனால் அதுமட்டுமா காரணம் என்றால் அதுமட்டுமில்லை என்று உறுதிபட கூறலாம். உக்ரைன் கலவரத்தின் போதும் தற்போது இஸ்ரேல் உரசல்கள் அதிகரித்து வரும் நேரத்திலும் நாம் ஐ.நா. சபை உட்பட எல்லா சர்வதேச அமைப்புகளின் விவாதங்களில் அமெரிக்கா உட்பட எந்த வல்லரசுக்கும் சாதகமாக கருத்துக்களை வெளியிடாமல் நாம் விரும்பும் அணிசேரா கொள்கையில் ஆணித்தரமாக இருந்து நடுநிலை காக்கின்றோம்.

இது நிச்சயம் ஐரோப்பிய நாடுகளும் குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான நாட்டோ அணி நாடுகளுக்கும் எதிரான வியூகம் என்று பார்க்கப்படுவதால் நாம் ரஷ்யாவின் நிழலாக தெரிகிறோம்.

உலக அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இருக்க முடியாது! மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் நிச்சயம் உண்டு.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் நமது எல்லாத் தரப்பு வளர்ச்சிகளிலும் துணையிருந்து வழிகாட்டிய வல்லரசு ரஷ்யாவாகும்.

தற்போது உலக நாடுகள் அமெரிக்க கெடுபிடி சர்வாதிகார போக்கால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து மிக தீவிரமாக அதை அமுல்படுத்தி ரஷ்யாவை வளர வழியின்றி தடுத்து வருவதை காண்கின்றோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவை உலக வர்த்தகத்தில் பங்கேற்க வழியின்றி தடுத்து விட்டனர். குறிப்பாக உலக வர்த்தகத்திற்கு அடித்தளமாக இருக்கும் வங்கிகள் நெட்ஒர்க்கில் இருந்து வெளியேற்றி விட்டனர்.

அதாவது ரஷ்யாவின் கரன்சியான ரூபிளை செல்லாக்காசாக மாற்றி வருகிறார்கள். மேலும் ரூபிளில் வர்த்தகம் புரியும் நாடுகளை கண்டித்து தண்டிக்கவும் தயங்காத நிலையில் வம்பு வேண்டாம் என்று பல நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிய வழியின்றி செய்து வருவதை அறிவோம்.

இதையெல்லாம் மீறி இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகத் தொடர்பை வலுவாகவே வைத்திருப்பது உலக அரசியல் தலைவர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகவே இருக்கிறது.

ரஷ்யாவை எதிர்த்து குரல் கொடுக்கும் முன்னணி பொருளாதாரங்கள் கொண்ட ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை டெல்லியில் வெற்றிகரமாக நடத்தி முடித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டாலும் இந்தியாவின் கொள்கைகள் பல வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய ஈர்ப்பாகவே இருப்பதை கண்டோம்.

ஆனால் மூன்றாவது ஆண்டில் நுழைய இருக்கும் உக்ரைன் கலவரம் நீடித்துக் கொண்டிருக்கையில் நாட்டோ அணி நாடுகளும் சலித்து பேச ஆரம்பித்து விட்டனர்.

போர் காட்சிகள் மேலும் அதிகரித்தால் ஏற்பட இருக்கும் இழப்புகள் உக்ரைன், ரஷ்ய ராணுவ தரப்பில் இருப்பதுடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

மாதாமாதம் பல லட்சம் டாலர்கள் உக்ரைனுக்கு ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி வருவதால் அவரவர் நாட்டு பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீண்டு எழ வழியின்றி தத்தளிப்பதும் புரிகிறது.

அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய சவாலாக மாறி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுகடன் வட்டி விகிதம் 2 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதத்திற்கும் மேல் என உயர்ந்து விட்டது.

பண வீக்கத்தை எதிர்த்து போராட அமெரிக்காவின் நிதி திட்ட மேலாளர்களின் ஒரே ஆயுதம் வங்கிக்கடன் வட்டி உயர்த்துதல் என முடிவெடுத்து இருப்பதால் 2024ன் முடிவில் ஜனாதிபதி தேர்தலை சந்திக்க பைடன் தயாராக இருப்பார். ஆனால் மக்களின் ஆதரவு மிகக் குறைவாக இருப்பதால் மீண்டும் தேர்தலில் போட்டியிட பைடனுக்கு வாய்ப்பு தரப்படுவது விவாதத்திற்கு உரியதாக இருக்கப்போகிறது.

இதுமட்டுமின்றி இஸ்ரேலுக்கும் நிதிஉதவிகள் தரத் துவங்கி விட்டால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் புதுப்புது சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும்.

மொத்தத்தில் ரஷ்யா, அமெரிக்கா இரண்டுமே இந்தியர்களுக்கு புதுப்புது வாய்ப்புகளை 2024 துவக்கம் முதலே தர இருக்கிறது.

குறிப்பாக ரஷ்யாவின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு தரும் நாடுகள் சீனா, வடகொரியா, பிரேசில் என்ற பட்டியலில் இலங்கையும் இருக்கிறது.

அப்பட்டியலில் இந்தியாவின் பங்களிப்பு கச்சா எண்ணை வாங்குவதில் மட்டும் என்று இருப்பதை மாற்றி மேலும் பல இதர துறைகளிலும் இருக்க வேண்டும்.

அதை உறுதிப்படுத்த இந்தியா தயங்கிவிடக் கூடாது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கட்டாயமாக இருநாட்டு வர்த்தக கூட்டமைப்பு நடத்திய கூட்டங்களில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதும் நமது பிரதமர் மற்றும் ஜனாதிபதி அரசு முறை பயணமாக ரஷ்யா செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

சமீபமாக ஏற்பட்டு வரும் உலக நடப்புகளின் பிரதிபலிப்பாக இப்படி இருநாட்டு தலைவர்களும் நேரில் சந்திக்க முடியாத நிலை நீடிக்கிறது.

இனி வரும் நாட்களில் இப்படி சர்வதேச பயணங்கள் மேற்கொண்டு தான் சந்தித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமோ, நிர்பந்தமோ கிடையாது. காரணம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகக் கூட மனம் விட்டு பேசிக் கொள்ளலாம்.

அதைத் தொடர்ந்து ஏற்படும் ஒப்பந்தங்கள், முடிவுகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த உரிய கட்டுமானம் மேலும் விரிவாக இருக்கவேண்டும்.

தற்போது இருப்பது ராணுவம், விண்வெளி போன்ற கனரக கட்டுமானங்கள் ஏதுவாக இருக்கலாம். அன்றாட தேவைகளாக இருக்கும் உணவு, உடை, அணிகலன்கள் போன்றவற்றின் வர்த்தகங்கள் அதாவது இந்திய தயாரிப்புகள் ரஷ்யாவில் விற்பனைக்கு செல்லவும் ரஷ்ய தயாரிப்புகள் நம் நாட்டில் கிடைக்கவும் ஏதுவாக ஆலோசனைகள், வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்தும் அமைப்புகள் உருவாகிட வழிகண்டால் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிகளுக்கு இந்தியா தயாராகி விடும்.

இது நமது பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரஷ்யாவின் தேவைகளை பூர்த்தி செய்த நட்பு நாடு என்ற நேசக்கரத்தை நீட்டிய பெருமையும் நமக்கு வரலாற்றுப் பக்கங்களில் கிடைத்து விடும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *