திருச்செந்தூர், செப். 23–
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக்டோபர் 2–ந் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. தசரா திருவிழாவுக்காக இன்று காலை கொடியேற்றப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது. கொடிப்பட்டம் கோவிலை வந்து சேர்ந்ததும் அதிகாலை 5.36 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிக்கத் தொடங்கினர்.
அக்டேபார் 2–ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்குப் பின்னர், அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரா் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசுரனை சம்ஹாரம் செய்கிறர். தொடா்ந்து, கடற்கரை வளாகம், சிதம்பரேஸ்வரா் கோயில் முன் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். 3–ந் தேதி காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்ததும் காப்புக் களைதல் நடைபெறும். பக்தர்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வர்.
தசரா திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், ஆய்வர் முத்துமாரியம்மாள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் ரவீந்திரன் குமரன், மகாராஜன், கணேசன், வெங்கடேஸ்வரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகமும் தசரா விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.
![]()





