நாடும் நடப்பும்

உலக பாரம்பரிய நாள்: வரலாற்றை மீட்டுருவாக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!


ஆர். முத்துக்குமார்


உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான மரபார்ந்த பெருமைகளை காப்பதற்காக, ஏப்ரல் 18 ந் தேதி உலக பாரம்பரிய தினமாக (World Heritage Day) கொண்டாடப்படுகிறது.

1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18ஆம் நாள் சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) தினமாக கொண்டாட பரிந்துரைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக மரபு தினமாக மாறியது.

7 வது இடத்தில் இந்தியா

இத்தினம் மக்களிடையே தங்களது சமூக பண்பாட்டு மரபுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 936 இடங்கள் மரபார்ந்த, பண்பாட்டுச் சின்னங்களாக யுனஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 725 இடங்கள் கலைப் பண்பாட்டு இடங்களாகவும் 183 இயற்கை மரபார்ந்த இடங்களாகவும் 18 இடங்கள் இரண்டும் சேர்ந்தவையாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் உலக அளவில் அதிக மரபார்ந்த சின்னங்களை கொண்ட நாடாக, இந்தியா 7 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற மரபார்ந்த பெருமை கொண்ட இடங்களை பாதுகாப்பதும் அவற்றின் மீது அக்கறை செலுத்துவதுடன் அதனைக் காப்பதும் கூட நமது கடமை என்பதை பொதுமக்களுக்கும் உணர்த்தும் வகையில் இந்த நாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 85 கட்டிடங்கள்

தமிழ்நாட்டில் பாரம்பரிய மற்றும் புராதான பழமை வாய்ந்த கட்டிடங்கள் பொதுப்பணித்துறையின் மேற்பார்வையில் 85 கட்டிடங்கள் உள்ளது. அதில், முதல் கட்டமாக 35 கட்டிடங்கள் சுமார் ரூ.150 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதிலும் சேப்பாக்கம் கலச மகால், எழும்பூர் நீதிமன்றக் கட்டடம், எழும்பூர் அருங்காட்சியகம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு மீட்டெடுத்து உள்ளது என்று நடப்பாட்டின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டள்ளது.

அதேபோல் கோவையில் உள்ள குதிரைவண்டி நீதிமன்ற கட்டடம், கோவையில் உள்ள பழைமையான ஆளுநர் மாளிகை, கொடைக்கானலில் உள்ள கோகினூர் ஷேக் அப்துல்லா அரண்மனை உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை பராமரித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும் சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலையில், 250 ஆண்டுகளுக்கு முன்பு 1764–1768 இல், ஆற்காடு நவாப் முகமது அலிக்கான் வாலாஜா என்பவருக்காக, ஆங்கிலேய கட்டட கலைஞர் பால்பென் பீல்டு என்பவரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த புராதான கட்டிடமான ‘ஹீமாயூன் மஹால்’ புதுப்பிக்கும் பணி 85 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள பாரம்பரிய இடமாக விவேகானந்தர் பாறை திருவள்ளுவர் சிலைகள் உள்ளது. பயணிகளின் வசதிக்காக விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு ரூ.37 கோடியில் 140 மீட்டர் தூர கடல் மீது தொங்கு பாலம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது போன்ற செயல்பாடுகளை குறிப்பிடலாம்.

புதிய கட்டுமானம்

மேலும் இருக்கின்ற பழம்பெருமை வாய்ந்த தொன்மையை காப்பது மட்டும் ஒரு அரசின் கடமையல்ல, எதிர்கால நமது வழித்தோன்றல்களுக்காக பதிதாக அதுபோன்ற கட்டுமானங்களை உருவாக்குவதும் கூட கடமைதான் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வள்ளுவர் கோட்டத்தை அமைத்துத் தந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு அமைந்துள்ளது.

அதன்படி, சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அண்ணா சாலையையும் சென்னை மாநகரையும் பிரித்துப் பார்க்க இயலாது. மாநகரின் மிக முதன்மையான சாலை என்பதால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் மிகுதியாக காணப்படும். குறிப்பாக தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுமார் 4 கி.மீ நீளத்தைக் கடக்கவே சராசரியாக 30 முதல் 40 நிமிடங்கள் ஆகின்றது.

இந்நிலையில் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தேனாம்பேட்டையிலிருந்து – சைதாப்பேட்டை வரையிலான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தியாகராயா சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, தியாகராயர் நகர், உஸ்மான் சாலைகளை இணைக்கும் சந்திப்புகள், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் – ஜோன்ஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றை கடக்கும் வகையில் ரூ.485 கோடி மதிப்பில் 3.20 கி.மீ நீளத்திற்கு நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கும் திட்டம் போன்றவை, இன்னும் சில நூறு ஆண்டுகள் சென்ற பிறகு, இந்த கால தொன்மையை பேசும் வகையில் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், இன்று செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி, மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நூலை வெளியிடுகிறார். அத்துடன் இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட மரபுவாய்ந்த தொன்மை சின்னங்களை இன்று மாலை 6 மணி வரை இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள், மரபார்ந்த தொன்மங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் தமிழ்நாடு அரசின் ஆக்க நிலையிலான செயல்கள் என்பதை பாராட்டாமல் இருக்க முடியாது.

கல்விக் கட்டுமானம்

இது போன்ற கட்டுமான பாதுகாப்பு செயல்களில் தமிழ்நாடு அரசு ஒரு பக்கம் தனது பார்வையை செலுத்தி உள்ள அதேவேளையில், எதிர்கால தலைமுறையை வடிவடைப்பதிலும் தனது கவனத்தை செலுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அதன்படி, சென்ற ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில்‌, “தமிழ்நாட்டின்‌ வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக்‌ குறிக்கோள்களுக்கு ஏற்ப மாநிலத்திற்கெனத்‌ தனித்துவமான மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள்‌ மற்றும்‌ வல்லநர்களைக்‌ கொண்ட உயர்‌ மட்டக்‌ குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்‌” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதனை செயல்படுத்தும்விதமாக, தமிழ்நாட்டிற்கான புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க நீதியரசர் த.முருகேசன் தலைமையில் முன்னாள் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள், தேயி கணித அறிவியல் நிறுவனத்தின் கணினி பேராசிரியர், மாநில திட்டக்குழு உறுப்பினர், பல்வேறு துறைசார்ந்த கல்வியாளர்கள் உள்ளிட்ட 13 பேரில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளது எதிர்கால குறிக்கோள்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் வரலாற்று மரபுடன் கூடிய கலைப் பண்பாட்டுக்கும் இந்த கல்விக்கொள்கையில் இடம் இருப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி செய்திருக்கிறார் என்றே கொள்ள வேண்டி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.