செய்திகள்

உலக பல்கலைக்கழக தரவரிசையில் 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

டெல்லி, ஜூன் 10–

உலகத்தின் தலைசிறந்த 200 பல்கலைக் கழகங்களில் இந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளது.

குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS), உலகெங்கும் உள்ள உயர்படிப்புகள் குறித்த தகவல்களையும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்களையும் வழங்கும் புகழ்பெற்ற நிறுவனமாகும். மேலும் இந்த நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டு, தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

3 பல்கலைக்கு இடம்

அந்த வகையில் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசை–2022 ஐ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,300 பல்கலைக் கழகங்களை மதிப்பீடு செய்த வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசையில், முதல் 200 இடங்களுக்குள் மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்கள் வந்துள்ளன.

இந்த தரவரிசையில் ஐ.ஐ.டி. பம்பாய் 177வது இடத்தையும், ஐ.ஐ.டி. டெல்லி 185 வது இடத்தையும், ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு 186 வது இடத்தையும் பிடித்துள்ளன. உலக அளவில் சிறந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக, ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 200 இடங்களுக்குள் இடம் பெற்ற இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஐ.ஐ.எஸ்.சி. பெங்களூரு, ஐ.ஐ.டி. பம்பாய் மற்றும் ஐ.ஐ.டி. டெல்லிக்கு வாழ்த்துகள். இன்னும் அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பல்கலைக் கழகங்களும் கல்வி நிறுவனங்களும் உலகளாவிய சிறப்பை பெறுவதை உறுதி செய்யவும், இளைஞர்களிடையே அறிவுசார் வலிமையை ஆதரிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *