செய்திகள்

உலக பணக்காரர் பட்டியலில் 7 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதானி

பங்குச் சந்தை, கடன் நிதி முறைகேடுகள் கண்டுபிடிப்பு

மும்பை, ஜன. 28–

பங்குச் சந்தையிலும், கடன்களிலும் நிதி முறைகேடுகள் செய்துள்ளது குறித்த அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை காரணமாக, அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து, உலக பணக்காரர் பட்டியலில் 7ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

உலக அளவில் இரண்டாவது பணக்காரராகவும், ஆசியாவின் முதல் பெரிய பணக்காரராகவும் இருந்தவர் அதானி. கொரோனா காலத்தில் அனைத்து மக்களின் செல்வம் குறைந்தபோது அதானி, அம்பானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்களின் செல்வம் அதிகரித்ததாகவும், இந்தியாவின் வளங்கள் அதானிக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தநிலையில் பங்கு சந்தையில் அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதானி குழுமத்தைப் பற்றி பல்வேறு புகார்கள் அடங்கிய நீண்ட 103 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை இரண்டு ஆண்டுகளாக தான் தயாரித்து வந்ததாகவும், இந்த ஆய்வறிக்கை தொடர்பாக அதானி குழுமத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களிடம் பேசி தகவல்களை திரட்டிதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமது பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

போலி கம்பெனிகள் மூலம் மோசடி

மொரீஷியஸ், ஐக்கிய அரபு நாடுகள் (அமீரகம்) மற்றும் கரீபியன் தீவுகள் போன்ற வருமான வரி சொர்க்கபுரியான நாடுகளிலிருந்து போலியாக கம்பெனிகளைத் தோற்றுவித்து அதன் பங்குகளை விலை ஏற்றியதாகப் பல்வேறு சான்றுகளை அந்த ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மேலும் அதானி குழுமத்தில் பெரும்பாலான பங்குகள் அந்த நிறுவனத்தின் குடும்பத்தைச் சார்ந்த நபர்களிடம் மட்டும் இருப்பது பற்றியும் பல்வேறு சான்றுகள் தரப்பட்டிருந்தன. அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பிலிருந்து தற்போதைய பங்குகளின் விலை 85 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் மொத்தமாக பல்வேறு விதமான 88 கேள்விகளை அதானி குழுமத்திடம் அந்த ஆய்வறிக்கை முன் வைக்கிறது.

அதானி நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 முதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், அதானி குடும்பத்துக்கு அரசிடம் கிடைத்துள்ள சலுகைகள் பற்றியும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இந்தத் தவறுகளைக் கண்டும் காணாது இருப்பது பற்றியும் அந்த ஆய்வறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ஆய்வறிக்கை பற்றி உடனடியாகக் கருத்து வெளியிட்ட அதானி நிறுவனம், நம் நாட்டிலோ, அமெரிக்காவிலோ ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக இது தொடர்பாக வழக்கு தொடுப்பதற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றிய ஹிண்டன்பர்க் நிறுவனம், வழக்கு பதிவு செய்ய சவால் விட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து வருகின்றன. இந்த நிலையில் பங்குகள் சரிவு காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *