செய்திகள்

உலக பணக்காரர்கள் வரிசையில் உங்கள் குடும்பம் இடம் பெற்றது எப்படி? ஸ்டாலின் பதில் சொல்ல தயாரா? எஸ்.பி.வேலுமணி சவால்

கோவை, மே 11–

திருக்குவளையில் இருந்து வெறும் கையோடு வந்த கருணாநிதி குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தது எப்படி? ஸ்டாலின் பதில் சொல்லத் தயாரா? என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சவால் விடுத்தார்.

சூலூர் சட்டமன்ற தொகுதி கருமத்தம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடனிருந்தார்.

பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

கழக ஆட்சியில் இத்தொகுதியில் பல்வேறு பணிகளை நிறைவேற்றியுள்ளோம். கருமத்தம்பட்டியில் மட்டும் உள்ளாட்சித்துறை மூலம் ரூ.36 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டு காலத்திற்கு குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் 3-ம் குடிநீர் திட்டப்பணிகளும், ஆனைமலை நல்லாறு திட்டப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

பதில் சொல்ல முடியுமா?

ஆனால் தமிழகத்திற்கு எதையும் செய்யாமல் அவதூறு பிரச்சாரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின் கோவைக்கு வந்தபோது தி.மு.க. ஆட்சியில் சூலூருக்கோ, கோவைக்கோ ஏதாவது திட்டத்தை கொண்டு வந்தோம் என்று பேசினாரா? பேசமுடியாது. ஆனால் முதல்வர் மீதும், துணை முதல்வர் மீதும், என் மீதும் அவதூறு பரப்பும் வகையில் பேசி சென்றுள்ளார். ஸ்டாலினிடம் ஒரே ஒருகேள்வி கேட்கிறேன். பதில் தரமுடியுமா? திருவாரூரிலிருந்து சென்னைக்கு வந்தபோது உங்களது குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருந்தது? ஆனால் இன்று உலகில் உள்ள 10 பணக்காரர் வரிசையில் உங்கள் குடும்பம் இடம் பெற்றுள்ளது. என்ன தொழில் செய்தீர்கள். பதில் தரமுடியுமா? எங்களை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு சினிமா எடுப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது? ஸ்டாலினுடைய ஒரே கொள்கை, கனவு நம் ஆட்சியை கலைக்க வேண்டும், முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்பது மட்டுமே. ஈழத் தமிழர்களை இலங்கையில் கொன்று குவித்த போது நீங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தை மக்கள் மறந்து விட மாட்டார்கள். தமிழகத்திற்கு துரோகத்தை செய்துவிட்டு இலங்கை சென்று பரிசு பெற்று வருகிறார் கனிமொழி.

ஸ்டாலினுக்கு 2 ஜி வழக்கில் உள்ள தொடர்பு என்ன? சாஹித் பல்வா யார்? ஸ்டாலினை ஏன் அவர் சந்தித்தார்? சாதிக் பாட்சா மரணம் எப்படி நடந்தது? இப்படி ஆயிரம் கேள்விகள். எதற்கும் உங்களால் பதில் தரமுடியாது. சாதிக் பாட்சாவின் மனைவி தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என புகார் அளிக்கிறார். அராஜகம், ஊழல், நில அபகரிப்பு என்றாலே தி.மு.க. ஆட்சிதான். ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு அராஜகம். உங்கள் ஆட்சியின்போது தமிழகத்தின் நிலையை அவ்வளவு சீக்கிரம் மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

ஸ்டாலின் அபாண்ட பொய்

அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை கொண்டு வந்தது பொங்கலூர் பழனிசாமி என்று மாபெரும் அபாண்டமான பொய்யை ஸ்டாலின் சொல்லி விட்டு சென்றுள்ளார். அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை கொண்டு வர முழு முயற்சி எடுத்து விவசாயிகளின் பாதுகாவலனாக விளங்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். இவர் தான் திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்திற்கும், சூலூர் தொகுதிக்கும் பல்வேறு திட்டப்பணிகளை செய்துள்ளோம். ஒவ்வொரு வீட்டிலும் அம்மா கொண்டு வந்த திட்டங்களில் ஏதாவது ஒன்றாவது பெற்று பயனடைந்திருப்பார்கள். ஆகவே திட்டங்களை நிறைவேற்றியுள்ள நமக்கு மட்டுமே வாக்கு கேட்க உரிமை உள்ளது.

களத்தில் உள்ள வேட்பாளர்களில் யார் சிறந்த வேட்பாளர் என சிந்தித்து பார்க்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவர் மக்கள் சேவை செய்ய வேண்டும். மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். கூப்பிட்ட நேரத்தில் ஓடோடி வந்து மக்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

களத்தில் உள்ள கழக வேட்பாளர் வி.பி.கந்தசாமியை பொறுத்தவரை மறைந்த கனகராஜ் எப்படி இத்தொகுதிக்காக சிறப்பாக பணிபுரிந்தாரோ அதுபோல கந்தசாமியும் சிறப்பாக பணியாற்றுவார்.

வேட்பாளர் வி.பி.கந்தசாமி மட்டுமே உள்ளூரை சேர்ந்தவர். இத்தொகுதியை சேர்ந்தவர். மேலும் 2 முறை ஊராட்சித் தலைவராக இருந்தவர். ஆகவே மக்களின் பிரச்சினைகளை நன்றாக அறிவார். ஆனால் தி.மு.க. வேட்பாளர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் கோவையில் இருக்கிறார். இன்னொருவர் பொள்ளாச்சி, உடுமலைபேட்டையில் இருக்கிறார். இவர்கள் 19-ந் தேதி வரை மட்டுமே உங்களை சந்திப்பார்கள், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்குவார்கள்.

அதற்குபிறகு உங்களை சந்திக்க மாட்டார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களை பார்க்கவும் முடியாது.ஆகவே விவசாய குடும்பத்தை சேர்ந்த அண்ணா தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

பிரச்சாரத்தின் போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, ஒன்றிய செயலாளர் மாதப்பூர் பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் தோப்பு க.அசோகன், பேரூராட்சி செயலாளர் ஏ.சி.மகாலிங்கம், தே.மு.தி.க. பனப்பட்டி தினகரன், பா.ஜ.க. மாணிக்கவாசகம், பரமசிவம், சூப்பர் காட்டன் தங்கவேல், கருப்புசாமி, சி.கே.மணி, கிருஷ்ணகுமார், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *