செய்திகள் நாடும் நடப்பும்

உலக நன்மைக்கு சூரிய சக்தியை திரட்டும் பிரதமர் மோடி சோலார் கட்டமைப்பு


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


தமிழகம் எங்கும் பொங்கல் கோலாகலம் பல புதுப்புது எண்ணங்களுக்கு வித்திட்டதை காண முடிந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் . புது வீடுகள் வாங்குவோர், புது மணத்தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது அதன் தாத்பரியத்திற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

பொங்கல் திருநாள் என்றாலே சூரிய வழிபாடும். உழவர்களை போற்றுவதுமாகும். இயற்கையை வணங்கும் நாம் கண்முன் நாள் முழுவதும் தோன்றும் சூரியனை பகவானாய் பார்த்து வணங்குவது ஆனந்த பரவசத்தை தருகிறது. மேலும் உழவர்களை போற்றி வணங்குவதும் தெய்வீகமான ஒன்றாகும்.

இப்பாரம்பரியம் மேலும் பல நூற்றாண்டுகளுக்கு தொடரும். தொடர வேண்டும்! அது மட்டுமின்றி உழவர் பாரம்பரியம் என்றென்றும் மேம்பட்டு மனிதனோடு இணைந்து இருக்க வேண்டும்.

அதுபோன்றே நம் வாழ்வின் முக்கிய பங்காற்றும் சூரியனின் உபயோகமும் அதிகரித்து வருவது தான் உண்மை. நமது விண்வெளிப் பயணங்கள், அங்கு ஆய்வுகள் போன்ற பல சமாச்சாரங்களுக்கு சூரியஒளி மிக அவசியமான ஒன்றாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதன் பயன் உலக மின்தேவையை முற்றிலும் பூர்த்தி செய்யும் சக்தியைக் கொண்டு இருக்கிறது.

இதன் பெருமையை உணர்ந்தே பிரதமர் நரேந்திர மோடி 2013-–ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாட்டின் சோலார் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர், “சோலார் கட்டமைப்பு சார்ந்து உலக நாடுகளை ஒருங்கிணைத்து, இந்தியா அதற்கு தலைமை தாங்கவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகளை (சோலார் பேனல்) அமைக்கும் நோக்கில் பிரதமர் மோடி கடந்த வாரம் ‘பிரதமரின் சூர்யோதயா’ திட்டத்தை அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி அறிவித்த முதல் திட்டம் இதுவாகும்.

2014-ம் ஆண்டே வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டுக்குள் 40 ஜிகாவாட்ஸ் அளவுக்கு சோலார் கட்டமைப்பை உருவாக்க அப்போது இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த இலக்கு எட்டப்படவில்லை.

இதையடுத்து இலக்கை அடைவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2022–-ம் ஆண்டிலிருந்து 2026-ம் ஆண்டுக்கு நீட்டித்தது. இந்நிலையில் இந்த இலக்கை எட்டும் புதிய முயற்சியாக மத்திய அரசு ‘பிரதமரின் சூர்யோதயா’ திட்டத்தை தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி 1 கோடி வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் வசதி உருவாக்கப்படும்.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி, மின்சாரத் துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய காலகட்டத்தில் புவி வெப்பமயமாதல் என்பது மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஜி8, ஜி20, ஒபெக் போன்று சோலார் கட்டமைப்பு சார்ந்தும் நாடுகள் அணி அமைக்க வேண்டும். அதற்கு இந்தியா தலைமை வகிக்க வேண்டும். இதன் வழியே, இந்தியாவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பில் உலகின் முக்கிய நாடாக நிலைநிறுத்த முடியும்.

2023 டிசம்பர் மாத நிலவரப்படி நாட்டில் 73.31 ஜிகாவாட்ஸ் அளவுக்கு சோலார் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் வீட்டு மாடிகளில் அமைக்கப்பட்டி ருக்கும் கட்டமைப்பு 11.08 ஜிகா வாட்ஸ் ஆகும்.

சூரியனை வணங்கி பொங்கலைக் கொண்டாடிய நேரத்தில் சோலார் கட்டமைப்புக்கு உந்துதல் தர பிரதமர் மோடி எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *