ஆர்.முத்துக்குமார்
அடுத்த நான்கு வாரங்கள் இந்தியாவின் செயல்பாடுகளை உலகமே மிக உண்ணிப்பாக கவனிக்க இருக்கிறது. ஆகஸ்ட் 22 சந்திரனில் நாம் விண்கலத்தை தரையிறக்க இருக்கிறோம்.
மேலும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் 15 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தயாராகி வருகிறார். அம்மாநாடு ஆகஸ்ட் 22 முதல் 24–ந் தேதி வரை நடைபெறும்.
இம்முறை மாநாடு கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய கட்டுப்பாடுகள் அறவே நீங்கிட, தற்போது பிரிக்ஸ் தலைவர்கள் நேரில் பங்கேற்க இருக்கிறார்கள். ஆக பிரதமர் மோடிக்கு பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களை சந்தித்து மனம் விட்டு பேசி ஆலோசிக்க நல்ல நேரம் இது.
ரஷ்ய அதிபர் புதின் நேரில் வந்து பங்கேற்க வாய்ப்பு இல்லை என்றாலும் அவருக்கு இணையான தலைவர் கண்டிப்பாக அனுப்பி தன் சார்பில் முடிவுகளை எடுக்க அனுப்பி வைப்பார்.
மொத்தத்தில் இந்த மாநாட்டில் பேசப்பட இருக்கும் கருத்துக்களை விட இம்முறை கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு மகத்துவம் பொருந்தியது ஆகும். இம்முறை மைய கருத்து ‘பரஸ்பர வேகமான வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் பலதரப்பு கூட்டு’ அதாவது Partnership for Mutually Accelerated growth, sustainable development and inclusive multilateralism.
இன்று உலக அமைதிக்கும் சர்வதேச வர்த்தகமும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் உலக அமைப்புகளான ஐ.நா. சபையும் உலக வர்த்தக மையமும் அமெரிக்க கெடுபிடி அரசியலால் செய்வது அறியாது கையை பிசைந்து திகைத்து நிற்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் உலக ஜனத்தொகையில் 44 சதவிகிதத்தை கொண்ட ஐந்து பெரிய நாடுகளின் தலைவர்களும் ஜி20 அமைப்பின் தலைமையில் இருக்கும் இந்தியாவும் மூன்று நாட்களுக்கு பலதரப்பட்ட சிக்கல்கள் பற்றி தீவிரமாக கலந்தாலோசித்து பல முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.
இந்த அமைப்பில் இந்தியாவின் குரல் வலிமையானது, எடுக்க இருக்கும் புது முடிவுகளால் உலக நடப்புகள் மீண்டும் சீராகி விடும் என்ற எதிர்பார்ப்பு நிரம்பவே இருக்கிறது.
சீன, ரஷ்ய தலைவர்களை சந்தித்து விட்டு நாடு திரும்பும் பிரதமர் மோடியை அடுத்த 10 நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நேரில் வந்து சந்திக்க இருக்கிறார்.
கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. இதன்படி 2023–-ம் ஆண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. வரும் செப்டம்பர் 9, 10–-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 8-ம் தேதி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தர உள்ளனர். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி விமானத்தில் புறப்பட்டு 8-ம் தேதி டெல்லியில் தரையிறங்குவார். அவரோடு சுமார் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் டெல்லிக்கு வருகை தர உள்ளனர். அவர்களை மிகச் சிறந்த நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றது.
மொத்தத்தில் உலக நடப்புகளில் இந்தியாவின் கருத்துக்களை உலகத் தலைவர்கள் காதுகளில் உறுதிபட தெரிவிக்க வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்புகளை பிரதமர் மோடி அடுத்தடுத்து பெற இருப்பதால் உலக ஊடகங்களில் இந்தியாவின் பங்களிப்பை தலைப்பு செய்திகளாய் பிரதிபலிக்கும்!