செய்திகள்

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகும் அமெரிக்காவின் நடைமுறைகள் துவக்கம்

நியூயார்க், ஜூலை 8-

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான நடைமுறைகளை அதிபர் டிரம்ப் துவங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தில் சீனாவைப் பொறுப்பாக்குவதில் உலக சுகாதார நிறுவனம் தோல்வியடைந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அந்த அமைப்புடனான அமெரிக்காவின் உறவைத் துண்டிப்பதாகக் கடந்த மே மாதமே அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் கேட்டுக்கொண்டபோதும், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிதி, மற்ற அமைப்புகளுக்கு வழங்கப்படும் என்று டிரம்ப் கூறினார். உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிக நிதி அளிக்கும் ஒற்றை நாடான அமெரிக்கா, கடந்த 2019இல் மட்டும் 400 மில்லியன் டாலர்களுக்கு மேல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து விலகும் அமெரிக்காவின் முடிவை ஐ.நாவுக்கும், அமெரிக்க நாடாளுமன்றத்துக்கும் தற்போது டிரம்ப் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கான நடைமுறைகள் முடிய குறைந்தது ஒரு ஆண்டு ஆகும்.

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான அறிவிக்கையை அமெரிக்கா அனுப்பியுள்ளது. 2021 ஜூலை 6-ம் பிறகு அமெரிக்கா விலகும் என ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

“கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்க அதிகாரப்பூர்வமாக விலகுவது குறித்த அறிவிக்கையை வெள்ளை மாளிகை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது” என வெளியுறவுக் குழுவின் உறுப்பினரும், ஜனநாயக கட்சியின் முன்னணி செனட்டருமான ராபர்ட் மெனண்டெஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த முடிவு, அமெரிக்கர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன், நான் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்ற முதல் நாள், மீண்டும் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்கா இணையும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *