செய்திகள்

உலக கோப்பை வில்வித்தை: 3 தங்கம் வென்று தீபிகாகுமாரி சாதனை

பாரீஸ், ஜூன் 28–

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கணை தீபிகாகுமாரி ஒரே நாளில் 3 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

உலக கோப்பை வில்வித்தை போட்டி (3-ம் நிலை) பாரீஸ் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5–-1 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

கலப்பு பிரிவில் இந்தியாவின் நட்சத்திர தம்பதியான அதானு தாஸ்- தீபிகா குமாரி ஆகியோர் 5-–3 என்ற கணக்கில் நெதர்லாந்தின் செப் வான் டென் பெர்க்-கேப்ரியலா கூட்டணியை சாய்த்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர்.

தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் ரீகர்வ் பிரிவின் இறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி 6-–0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா ஒசிபோவாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கப்பதக்கத்தை வென்ற சாதனை படைத்துள்ளது இந்தியாவையே பெருமைப்பட வைத்துள்ளது. இதன் மூலம் உலக வில்வித்தை தரவரிசைப் பட்டியலில் ரஷியாவின் எலினா ஒசிபோவாவை, அமெரிக்காவின் மேக்னிசி ப்ரெளன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளார்.

அடுத்த மாதம் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை ஒற்றையர் பிரிவுக்கு தீபிகா குமாரி ஏற்கனவே தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்ததுக்கது. இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், ஒலிம்பிக்கில் இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் யாரும் இதுவரை பதக்கம் வென்றதில்லை. எனவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது லட்சியம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *