செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் பாபர் அஜாம் சதம்: பாகிஸ்தான் வெற்றி; தொடரில் முதல் தோல்வியை சந்தித்த நியூசிலாந்து

பர்மிங்காம், ஜூன் 27–

பாபர் அஜாம் மற்றும் ஹாரிஸ் சோகைல் ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வியை தந்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–பாகிஸ்தான் அணி கள் மோதின. இதில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணி 26.2 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. குப்தில் (5), முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதம் (1), கேன் வில்லியம்சன் (41) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 6-வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் நீஷம்முடன் கிராண்ட்ஹோம் கைகோர்த்தார்.

இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி தங்களது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். இந்நிலையில் 64 ரன்கள் எடுத்த கிராண்ட்ஹோம் ரன் அவுட்டானார். பின்னர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் நீஷம் 97 ரன்களுடனும், சான்ட்னெர் 5 ரன்னுடனும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

238 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக் மற்றும் பஹார் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். அதில் பக்கார் ஜமான் 9 ரன்கள், இமாம் உல்-ஹக் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின் பாபர் அஜாம் மற்றும் முகமது ஹபீஸ் ஜோடி சேர்ந்தனர். சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஹபீஸ் 32 ரன்களில் கேட்ச் கொடுத்தார்.

அடுத்ததாக பாபர் அஜாமுடன், ஹாரிஸ் சோகைல் ஜோடி சேர்ந்தார். சிறப்பான ஆட்டத்தால் இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். பாபர் அஜாம் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். கடைசியில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹாரிஸ் சோகைல் (68) ரன் அவுட் ஆனார்.

இறுதியில் பாபர் அஜாம் 101 ரன்களும், சர்ப்ராஸ் அஹமது 5 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 49.1 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் நியூசிலாந்தை தோற்கடித்தது.

1992 உலக கோப்பையில் நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. அதேபோன்று இந்த தொடரிலும் நியூசிலாந்து அணியின் தொடர் வெற்றிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *