போஸ்டர் செய்தி

உலக கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரை இறுதிக்குள் நுழைந்தது

Spread the love

லண்டன், ஜூன் 26–

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தார். ஜேசன் பெஹ்ரென்டோர்ப் (5 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (4 விக்கெட்) ஆகியோர் அபாரமாக வந்து வீசி இங்கிலாந்தை சுருட்டினர்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன், முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் ஆட வந்தனர். நல்ல துவக்கத்தை தந்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 123 ரன்களாக இருந்தபோது பிரிந்தது. அரை சதம் அடித்த வார்னர் (53) அவுட்டானார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 23- ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் கிளீன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து ஆரோன் பிஞ்சுடன் ஸ்மித் கைகோர்த்தார். ஒருமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரோன் பிஞ்ச் தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். இந்த உலக கோப்பையில் அவர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 8 ரன்னிலும், பின்னர் ஸ்மித் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதி கட்டத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 38 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 286 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. ஜேம்ஸ் வின்ஸ் (0), ஜோ ரூட் (8 ரன்), கேப்டன் இயான் மோர்கன் (4 ரன்), ஜானி பேர்ஸ்டோ (27 ரன்) ஆகியோர் வரிசையாக ஆட்டமிழந்தனர். அப்போது அந்த அணி 53 ரன்களை மட்டுமே தத்தளித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஜோஸ் பட்லரும், பென் ஸ்டோக்ஸும் கைகோர்த்து போராடினர். 25 ரன் எடுத்திருந்தபோது பட்லர் கேட்ச் ஆனார். அணிக்காக தொடர்ந்து போரராடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸும் (89 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் குறைந்த ரன்களே எடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹ்ரென்டோர்ப் 5 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதுவரை ஆடிய 7- ஆட்டங்களில் 6-வது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து, உலக கோப்பையில் முதல் அணியாக அரை இறுதியை எட்டியது. அதே சமயம் 7-வது லீக்கில் களம் கண்ட இங்கிலாந்துக்கு இது 3-வது தோல்வியாகும்.

வார்னர் 500 ரன்

நேற்றைய ஆட்டத்தில் வார்னர் 53 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்த உலக கோப்பை போட்டியில் அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 500-ஐ எட்டியது. நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் வார்னர் 2 சதம், 3 அரைசதம் உள்பட 500 ரன்கள் குவித்திருக்கிறார். ஒரு உலக கோப்பை தொடரில் 500 மற்றும் அதற்கு மேல் ரன்கள் சேர்த்த 3-வது ஆஸ்திரேலிய வீரர் வார்னர் ஆவார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் மேத்யூ ஹைடன் (2007-ம் ஆண்டு உலக கோப்பையில் 659 ரன்), ரிக்கிபாண்டிங் (2007-ம் ஆண்டு தொடரில் 539 ரன்) உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *