நாடும் நடப்பும்

உலக அரசியல் குழப்பத்தில் மீன் பிடிக்கும் அமெரிக்கா

ஆப்கானில் இருந்து வெளியேறி விட்டது; உக்ரைனில் பதட்டத்தை உருவாக்கியது


ஆர். முத்துக்குமார்


2022 விடைபெறும் முன் இவ்வாண்டு கண்ட நடப்புகள் பற்றி திரும்பிப் பார்க்கும்போது 2023ல் நிலைமை எப்படி இருக்கப்போகிறது? என்பது பற்றி ஓரளவு கணிக்க முடியும் அல்லவா!

உக்ரைனில் ஏற்பட்ட பதட்டத்தின் காரணமாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய போர் சிக்கலாக மாறி இன்றும் தீர்வு காண வழியின்றி உலக நாடுகள் திணறி வருகிறது.

ஆப்கானில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்வதாக அறிவித்த நாளில் ஆப்கானில் பலர் கொண்டாடினாலும் ஆப்கான் பெண்களின் நிலை பரிதாபமானதாக மாறும் அபாயம் இருந்தது.

அமெரிக்கா ஆப்கானில் மூக்கை நுழைக்க அதிமுக்கிய காரணம் ரஷ்யாவை குறி வைத்து தான் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆப்கானின் எல்லைப் பகுதியில் சோவியத் ரஷ்யாவில் நாடுகள் பல இருந்தது. ஆகவே ஆப்கானில் தீவிரவாதமும் கலவரங்களும் காட்டுத்தீயாய் பரவ ஆரம்பிக்கையில் ஆப்கானின் அரசு ரஷ்யாவின் உதவியை நாடியது.

பின்னர் நிலைமை கட்டுக்குள் வர சோவியத் பின்வாங்கியது. கால சுழற்சியில் சோவியத் தனித்தனியாக பிரிய, ரஷ்யா ஆப்கானில் நுழைய தேவை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகவே தெரிந்தது.

இதைக் கண்ட அமெரிக்கா ஆப்கானில் தங்களது படையை நிறுத்தினால் எண்ணை வள வளைகுடாவில் இருந்தபடி ரஷ்யாவின் வளர்ச்சிகளையும் கண்காணிக்கலாம் என்ற குறிக்கோளுடன் நல்ல நாளுக்காக காத்திருந்தது.

தாலிபான் தீவிரவாதத்தால் அமெரிக்காவின் நுழைவு மிக எளிதாக அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்த கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானில் ராணுவ தளம் அமைத்து, ஆசிய பகுதியில் ஆதிக்கம் செலுத்த ஆலோசிக்க ஆரம்பித்தது.

ரஷ்யாவின் மிக அருகாமையில் அமெரிக்க கூட்டணி நாடுகளால் தங்களது ராணுவ நடமாட்டங்களை உறுதிபடுத்திக்கொண்டது.

கடந்த ஆண்டு ஆப்கானில் இருந்து அமெரிக்கா ஒருவழியாக விடைபெறுகிறோம் என்று அறிவித்து ஒரு சில நாட்களில் ஆப்கானில் நல்ல தலைவரை ஆட்சியிலும் அமர்த்தாமல் வெளியேறியது.

ஆப்கானில் என்ன நடந்தால் நமக்கென்ன? என்ற போக்கில் வெளியேற ஐ.நா. உட்பட உலக அமைப்புகள் செய்வது அறியாது கையை பிசைந்து கொண்டிருந்தது.

இன்று ஆப்கானில் நிலைமை என்ன தெரியுமா? ஆப்கானில் பெண்களுக்கு கல்வி பயில தடையையும் ஆடை விவகாரங்களில் முழுமையாக மறைத்திடும் பர்தாவும் விளையாட்டு போட்டியில் மகளிர் உடலை மறைக்கும் விதமான ஆடைகள் அணிந்து தான் விளையாட வேண்டும். மேலும் சாலைகளில் சுதந்திரமாக நடமாட முடியாது, கார் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆட்சியை பிடித்த ஆப்கான் தாலிபன் அமைப்பு பெண்கள் கல்வி பெற அனுமதிப்போம் என்று கூறியதுடன் ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது என்று கூறியது.

ஒரே ஆண்டில் அந்த விதியை மாற்றி விட்டோம் என்று கல்வித்துறை அமைச்சகம் எல்லா கல்லூரிகளுக்கும் சுற்று அறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி இனி மகளிரால் அந்நாட்டில் கல்லூரி படிப்புக்கு வழியே இல்லா நிலைமை உருவாகி விட்டது.

காபூலில் உள்ள கல்லூரி மாணவிகள் கதறிக் கதறி அழும் காட்சிகள் போர்கால அழுகுரலையும் விட மிகப்பெரிய சோக கீதமாக அல்லவா ஒலிக்கிறது.

அது மட்டுமா, ஆப்கானை விட்டு வெளியேறிய சில நாட்களில், நாட்டோ அணி உக்ரைனில் நுழைந்து, நாச சக்தி ஆயுதங்களையும் தந்து ரஷ்யாவிற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி, அவர்களால் வளர முடியாத நிலையை உருவாக்கி விட்டனர்.

ரஷ்யாவோ இதுவரை நட்பு நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளின் உதவியால் இதுவரை சமாளித்து விட்டது.

* 2023–ல் ஆப்கான் கொந்தளிப்பு இருக்கப்போகிறது.

* உக்ரைனில் ரஷ்யாவின் முழு போர் தாக்குதல் ஏற்பட களம் தயாராகிவிட்டது.

* நாட்டோ நாடுகள் உணவு, எரிபொருள் சிக்கலால் தவிக்க, பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கும்.

* உலக நடப்புகளில் ரஷ்யாவை பங்கேற்க விடாது தடை செய்வதை எதிர்த்து ரஷ்யாவிற்கு அங்கீகாரம் தந்தால் அமெரிக்காவுக்கும் நாட்டோ அமைப்புக்கும் எதிரி நாடாக கருதப்படும் நாள் வர இருக்கிறது.

உதாரணத்துக்கு ஜி-20 மாநாட்டை நாம் டெல்லியில் நடத்தும்போது ரஷ்யாவை அழைக்காமல் விட்டு விடவா முடியும்?

கத்தார் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் ரஷ்யாவை தடைசெய்தது அல்லவா? நாளை ஆசிய கோப்பை ஆட்டங்களில் ரஷ்யாவை சேர்த்துக் கொள்ள முற்பட்டால் அமெரிக்கா அதை அனுமதிக்குமா?

மொத்தத்தில் அமெரிக்காவின் எதேச்சதிகார போக்கு காரணமாக பல குழப்பங்கள் 2023–ல் உருவாகி, உலகமே சிக்கித் தவிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *