ஆர். முத்துக்குமார்
இன்று உலக நீரிழிவு நோய் தினம். உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14–-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
2000–ம் ஆண்டு துவக்கத்தில் வீதிக்கு ஒருவர் என்று இருந்த நிலை மாறி இப்போது வீட்டுக்கொருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மிக வேகமாகப் பரவலாகி மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
கணையத்திலிருந்து (pancrease) இன்சுலின் சுரப்பதில் மந்தமோ, சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டும் சேர்வதால் நீரிழிவு என்கிற சர்க்கரை குறைபாடு வரக்கூடும்.
உடலில் அதிக அளவு இன்சுலின் குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது.
நீரிழிவு நோய் இருப்பவர்களில் ஏறத்தாழ 90 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான் உள்ளது. முதல் வகை நீரிழிவு நோயை தடுக்க முடியாது மற்றும் அரிதாக வரக் கூடியது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலில் அடிபட்டாலோ வேறு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டாலோ விரைவில் குணம் ஆகாது. கொரேனா தொற்று வந்துவிட்டால் கடுமையான சிக்கல்களும் ஏற்பட்டது,
உடல் எடை அதிகரிப்பது, மாறி வரும் உணவுப்பழக்கம், நம் வாழ்க்கை முறைதான் இந்த வகை நீரிழிவு நோய்க்கு காரணம்.
இன்றைய தலைமுறைக்கு உடல் எடையை குறைப்பது நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது என் புரிந்து கொண்டு உணவு மற்றும் உடற்பயிற்சி விவகாரங்களில் அக்கறையுடன் செயல்படுகிறது.
ஆரோக்கியமான உணவு என்பது அதிக நார்சத்து உடைய உணவு வகைகள் தான். நார்சத்துமிக்க காய்கறிகள் உடல் செரிமானத்தை அதிகரிக்கும்; ரத்தத்தில் சர்க்கரை கலப்பதை தடுக்கும்.
அரிசி, கோதுமை உணவுகளே நம் நாட்டில் அதிகம் விரும்பி சாப்பிடும் பழக்கம் இருப்பதால் நம் ரத்தத்தில் சர்க்கரைத் தன்மை அதிகரித்து விடுகிறது. இதற்கு அதிமுக்கிய காரணம் அந்த பதார்த்தங்களை ஜீரணிக்க அதிக இன்சுலின் தேவைப்படுகிறது. ஒரு கட்டத்தில் குறைபாடும் ஏற்படுகிறது.
இந்நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் உடல் உறுப்புகள் பாதிப்படைகிறது. கண்புரை நோய், ரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலை, எதிர்ப்பு சக்திகள் குறையும். நீரிழிவின் அறிகுறிகள் வெளித் தெரிய முன்னதாகவே உடலினுள் நீரிழிவு நோய் ஏற்படலாம்.
நீரிழிவின் அறிகுறிகள் வெளித் தெரிய வரும் முன்பே உடலுக்குள் நீரிழிவு நோய் பாதகங்களை ஏற்படலாம். அதாவது தெரியப்படும் அறிகுறிகள் ஏதும் தென்படாது தாக்கிவிடும்.
சிறு வயது முதலே நாம் பிள்ளைகளை நல்லா சாப்பிடு; பசியை அண்ட விடாதே என்ற நிலைப்பாட்டை வைத்து வளர்க்கிறோம். உண்மையில் அவர்கள் தேவையான அளவு சாப்பிட்டு ஆரோக்கியமான உணவை அதிகமாக சாப்பிட சொல்லித் தந்தாகவேண்டும்.
வெண்டக்காய் நல்லது; அதை ஊற வைத்து அத்தண்ணீரை குடித்தால் நீரிழிவு கொடுமையில் இருந்து தப்பிக்கலாம் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டால் வயதானவர்கள் மட்டும் அதை விரும்பி சாப்பிடலாம்!
அது கண்களை இழந்த பிறகு சூரியனைப் பார்க்க ஆசைப்படுவது போன்றதாகும். சிறுவர்கள் பள்ளிப்பாடத்தில் சுவையை வைத்து சாப்பிடுவதை விட அதாவது மாவு உணவுகள் இன்றி அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை, அதாவது காய்கறிகள், பழங்கள், முட்டை மற்றும் கறி ரகங்களை அதிகமாகவும் கூடவே சிறிய அளவிலோ அல்லது அரிசி, கோதுமை இல்லா உணவுகளையோ சாப்பிட்டால் அதன் நன்மைகளை புரிந்து கொள்ளும் பாட திட்டங்கள், விளம்பரங்கள் அதிகரிக்க வேண்டும்.
வருங்காலங்களில் சுவையான உணவு என்று குறிப்பதை அறவே இல்லாமல் சத்துணவு சார்ந்த விளம்பரங்கள் இருக்க வேண்டும். அதில் புரதம், வைட்டமின் சத்துக்கள், செரிமான தன்மை, சர்க்கரை மற்றும் உப்புகளின் அளவு பிரதானமாக வலியுறுத்தும்படி இருக்கவேண்டும்.
விளம்பர நிறுவனங்களுக்கு பல பண்டகங்களில் இருக்கும் விஷ தன்மையையா விளம்பரப்படுத்திட வேண்டும்? எங்கள் வருமானம் குறையுமே? என அச்சப்படலாம்.
புரிதலுடன் திண்பண்டங்களை வாங்கி உண்டால் ஆரோக்கியம் வலுப்பெற்று சராசரி ஆயுட்காலம் அதிகரிக்கும். அது விளம்பர யுக்திகளை மாற்றி யோசிக்கவும் வைக்கும்.
உணவே மருந்து என்று வாழ்ந்த நாம் மீண்டும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தரும் சமுதாயமாக மாற விழிப்புணர்வு யுக்திகள் அவசியமாகும்.