செய்திகள் முழு தகவல்

உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மை: பரவுவது எவ்வாறு; அறிகுறிகள் என்ன?

Makkal Kural Official

இந்தியா, தமிழ்நாட்டில் குரங்கம்மையின் நிலை?

ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை (MPox) உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எம்பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் 1970 ஆம் ஆண்டுகளில் காங்கோ ஜனநாயக குடியரசில் கண்டறியப்பட்ட நிலையில், அதுகுறித்த அலட்சியத்தால் 2022 ஆம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் 99,178 பேருக்கு பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

குரங்கம்மை அறிகுறி; சிகிச்சை ஏற்பாடுகள்! தமிழ்நாட்டில் யாருக்கும் இதுவரையில் பாதிப்பு இல்லை. தீவிர காய்ச்சல், உடல் வலி மற்றும் கொப்பளங்கள் ஆகியன குரங்கம்மை நோயின் அறிகுறியாகும். குரங்கம்மை பாதிப்பின் அறிகுறியானது ஒரு வாரத்தில் தெரிய வரும். இதுபோன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக 104 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டால், ஆம்பலன்ஸ் மூலம் இருக்கும் இடத்தில் இருந்து அழைத்து செல்லப்படுவார்கள். சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவனத்தில் அவர்களுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆகியவற்றில் தலா 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் குரங்கம்மை (MPox) அதிகமாகப் பரவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 15,600 பேருக்கு ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை பாதிக்கப்பட்டு 537 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 30 பேருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்ட நிலையில், நடப்பாண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு கண்டறியப்பட்டது.

குரங்கம்மை (MPox), அறிகுறிகள்

இந்நிலையில், இந்தத் தொற்றுநோய் எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்றால், சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தில் உள்ள மற்றொரு வகை திரிபு வைரஸே குரங்கம்மையைத் தோற்றுவிக்கிறது. தொடக்கத்தில் விலங்குகளிடம் இருந்து இந்தத் தொற்று மனிதர்களிடம் பரவியது. தற்போது இது மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை தொடக்கநிலை நோய் அறிகுறிகளாக வெளிப்படும் நிலையில், காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும்.

உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த குரங்கம்மை பரவும். வாய், கண்கள் மற்றும் பிறப்புறுப்புகளிலும் இந்தப் புண்கள் ஏற்படும். இந்தத் தடிப்புகள் அரிப்பையும் வலியையும் ஏற்படுத்தும். இந்தத் தொற்று 14 முதல் 21 நாட்களில் அம்மை கொப்புளங்களாக உருமாறி, இறுதியில் உதிர்ந்துவிடும். பின்னர் இவை வடுக்களாக மாறிவிடும். ஆனால் சில நேரங்களில் இவை உயிரைக் கொல்லும் தொற்றாகவும் மாறிவிடும்.

குரங்கம்மையில் கிளாட் 1 மற்றும் கிளாட் 2 இரண்டு வகைகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கிளாட் 1 வகை ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது. கிளாட்-1 வைரஸின் சில வகைகள் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளை அதிகமாகத் தாக்குகிறது. கடந்த 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நோய்த் தொற்று 160 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, இறப்பு விகிதமும் 19 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

பரவலை தடுப்பது எப்படி?

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, தொட்டுப் பேசுதல், அருகே அமர்ந்து பேசுதல் மற்றும் சுவாசித்தலால் இந்தத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. காயங்கள் வழியாகவும், மூச்சுக்குழல் வழியாகவும், கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகவும் இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் செல்கிறது. இந்த வைரஸ் ஒட்டியிருக்கும் படுக்கைகள், ஆடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றைத் தொடுவதன் மூலமும் இந்தத் தொற்று ஏற்படுகிறது. பாதிப்புக்கு ஆளான குரங்கு, எலி, அணில் போன்றவற்றைத் தொடுவதாலும் இந்தத் தொற்று பரவுகிறது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்று பெரும்பாலும் உடலுறவால் ஏற்பட்டது.

புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் எச்ஐவி பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்தத் தொற்று எளிதில் ஏற்படக்கூடும். இதனால் ஆபத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பைத் தவிர்ப்பதுடன் உங்கள் பகுதியில் நோய்த் தொற்று இருக்கும் பட்சத்தில் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

பரவுவது எப்படி? குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர் தும்மும் போது, வெளியாகும் எச்சில் துளிகள் மூலம் இந்த நோய் மற்றவர்களுக்கு பரவுகிறது. மேலும் உடலில் சிரங்கு, காயங்களை தொடுவதின் மூலமாகவோ, பாதிக்கப்பட்ட நபரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றியுள்ள துணிகள், படுக்கைகள் போன்றவற்றை தொடுவதின் மூலமும் குரங்கம்மை பரவுகிறது. உடலுறவு மூலம் இந்த நோய் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. சில வேளைகளில் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் மனிதனுக்கு பரவ வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும். அவர்களை பராமரிப்பவர்கள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

உடலிலுள்ள புண்கள் ஆறும் வரை நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். தொற்றில் இருந்து மீண்ட பிறகும் 12 வாரங்களுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்நிலையில், இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு பரவல் குறித்த கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், குரங்கம்மை பாதிப்பை கண்டறிய இந்தியா முழுவதும் 32 ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, டெல்லியிலுள்ள ராம்மனோகர் லோகியா மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் குரங்கம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலங்கள் அளவிலும் முக்கியமான மருத்துவமனைகளில் இதற்கான ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளது. ஐசிஎம்ஆர் நிறுவனத்துடன் இணைந்து, சீரம் இன்ஸ்டிடியூட் குரங்கம்மைக்கு தடுப்பூசி கண்டறிய முற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாதிப்பில்லை

தமிழ்நாட்டில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்திலுள்ள அண்ணா பன்னாட்டு முனையத்தில், குரங்கம்மை நோய் பரவல் தடுப்புக்கான கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு, அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் குரங்கம்மை பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தனி வார்டுகள் கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் இதுவரையில் குரங்கம்மை தொற்று ஏற்பட்ட யாரும் கண்டறியப்படவில்லை என்றும், உலக அளவில் 5 நாடுகளில்தான் குரங்கம்மை பாதிப்பு அதிகமுள்ளது என்றும் கூறினார். இதில் காங்கோ நாட்டில் 1754 பேருக்கும் அமெரிக்காவில் 1399 பேருக்கும் சீனாவில் 333 பேருக்கும் ஸ்பெயினில் 332 பேருக்கும் தாய்லாந்தில் 120 பேருக்கும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *