லாகூர், நவ. 5
பாகிஸ்தானிலும் குளிர் காலத்தில் காற்று மாசுபாடு தீவிரம் அடைகிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரம் குறைந்த எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் புகை, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், கட்டுமானப் பணிகள் காரணமாக பரவும் தூசுக்கள் என பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. காற்றின் தரக்குறியீடு (ஏகியூஐ) 0 முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. 51-–100 திருப்தி, 101- – 200 பரவாயில்லை, 201-–300 மோசம், 301-–400 மிக மோசம், 401-–450 தீவிரம், 450-க்கு மேல் மிக தீவிரம் எனவும் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் லாகூரில் ஏகியூஐ நேற்று முன்தினம் 1,900 ஆக உயர்ந்தது. 1.40 கோடி மக்கள் வசிக்கும் லாகூரில் காற்று தரக்குறியீடானது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்ட வரம்பை விட 6 மடங்கு அதிகமாக இருந்தது. இதன்மூலம் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் உள்ளது. டெல்லியில் நேற்று பிற்பகல் ஏகியூஐ 276 ஆக இருந்தது. டெல்லியை விட 6 மடங்கு மாசுபட்ட நகரமாக லாகூர் உள்ளது.
பஞ்சாப் அமைச்சர் மரியம் அவுரங்கசீப், ‘‘மக்கள் வீட்டிலேய இருக்க வேண்டும், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். மேலும் காற்று மாசுபாட்டை குறைக்க ரிக் ஷாக்களை இயக்க அரசு தடை விதித்தது. சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
அண்டை நாடான இந்தியாவில் இருந்து வீசும் மாசுபட்ட காற்றால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர்அன்வர் கூறுகையில், “இந்தியாவில் இருந்து வரும் கிழக்குப்புற காற்றால் லாகூரில் அவதிப்படுகிறோம். யாரையும் குற்றம் சொல்லவில்லை, இது இயற்கையான நிகழ்வு. என்றாலும் இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம் என்றார்.