செய்திகள் நாடும் நடப்பும்

உலகிற்கு இலங்கை மக்கள் போராட்டம் ஓர் எச்சரிக்கை மணி


நாடும் நடப்பும்


இலங்கையில் கடந்த வார நடப்புகள் ஆச்சரியமாகவும் அதிர்ச்சி தருபவையாகவும் இருக்கிறது! ஆச்சரியம் ஆனால் உண்மை என்று தான் சொல்ல வேண்டும்.

காவல்துறை, ராணுவ கட்டுப்பாடுகளை மீறி கொழும்பில் பொதுமக்கள் அந்நாட்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராடி வந்த நிலையில் அவரது இல்லத்தில் புகுந்து அவரைத் தாக்க திரண்டனர்.

அச்சமயத்தில் கையில் கிடைத்தவற்றை உடைத்தனர். தீயிட்டு கருகிட வைத்தனர். அங்கே இருந்து எல்லா கட்டுப்பாடுகளையும் தங்கள் வசமாக்கி கொண்டனர். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்தையும் பிடித்துக் கொண்டு உள்ளனர்.

நம் நாட்டில் இருப்பது போன்று இல்லாமல் இலங்கையில் ஜனாதிபதியே முழு அதிகாரம் பெற்றவர் ஆவார். இரண்டாவது நிலையில் பிரதமரின் அதிகாரம் இருக்கிறது. தற்சமயம் இருவரின் வீடுகளும் பிடிபட்டு விட்டது, காரணம் மக்களின் கொந்தளிப்பு!

பிரதமர் பதவிக்கு ரணில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வந்தார் . மகிந்த ராஜபக்சே மக்கள் கொந்தளிப்பை உணர்ந்து பதவியை ராஜினாமா செய்து தப்பி ஓடிவிட்டார்.

எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி.யைக் கூட அனுப்பி வைக்காத அவரைப் பிரதமராக பதவி ஏற்க வைத்ததற்கு காரணம் ஜனாதிபதிக்கு ‘கைப்பாவை’ பிரதமர் தேவைப்பட்டது.

பதவி ஏற்ற நாள் முதலாய் ரணில் மீது மக்களுக்கு அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்தது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வும் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடும் பொதுமக்களின் பெரும் தலைவலியாக மாற ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி மேலும் உச்சத்தை தொட்டது.

பொருளாதார சீரழிவுக்கு காரணம் என்ன? அரசியல் கலாச்சாரம் இப்படி உச்சக்கட்ட காட்சிகளாக மாற என்ன காரணம்? உண்மை என்னவென்றால் அங்கு ஆட்சிக்கு வந்தவர்கள் இன, மத அரசியல் தவறுகளுக்கு உறுதுணையாக இருந்தனர். தவறான நிலைப்பாட்டை உலக நாடுகளான உறவுகளுக்கு எடுத்தனர். இனத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்களைப் பிளவுபடுத்துவது எளிது. அதன் வாயிலாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் எளிது. ஆனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாத எந்த ஒரு அரசும் அரசதிகாரத்தை வழங்கிய மக்களாலேயே தூக்கி எறியப்படும். இது இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஓர் எச்சரிக்கை. குடும்ப அரசியல், ஊழல் என மக்களாட்சி நாடுகளில் புரையோடத் தொடங்கி உள்ள அனைத்து தீங்குகளுக்கும் இலங்கை நிலவரங்கள் நிச்சயமாக ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இன்று இலங்கை நிலை குலைந்து நிற்கும் சூழலிலும் அந்நாட்டு மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்ற நம்பிக்கை வார்த்தைகளை இந்தியா அளித்துள்ளது. இலங்கையில் ஜனநாயகம் உறுதி செய்யப்பட்டு விரைவில் அங்கு புதிய அரசு பொறுப்பு ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அமைதியான முறையில் உருவாக வேண்டும். பொருளாதார ரீதியில் மற்ற நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வந்தாலும் அரசியல் ரீதியிலான அமைதி மக்களின் கைகளில் தான் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

இதே போன்ற நிலை இங்கிலாந்திலும் உருவாகி இருக்கிறது. தற்போதைய பிரதமர் ஜான் போரீஸ் ராஜினாமா செய்து விட்டார். அவருக்கு பதிலாக புதிய பிரதமரை அக்கட்சியினர் இன்று இரவுக்குள் தேர்வு செய்து விடுவார்கள்.

புதிய பிரதமராக வருபவர் அந்நாட்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கும் அமெரிக்க கெடுபிடி உலக அரசியலுக்கும் நல்ல முயற்சிகளை துவக்கிடும் அதிகாரம் பெற்று இருப்பாரா? ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய போது அதன் பின்விளைவுகளை எதிர்பார்க்காத நிலையில் தற்போது உக்ரைனில் இருந்து வரும் பல ஆயிரம் அகதிகளுக்கும் உதவிட வழி கண்டாக வேண்டுமே .

இச்சவால்களை இங்கிலாந்தின் புதிய பிரதமர் எப்படிச் சமாளிப்பார்?

அதற்கான காலம் வரும் ; காத்திருப்போம்.


Leave a Reply

Your email address will not be published.