காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இணைக்கும் ரெயில் பாதை
ஒரே நாடு, ஒரே தேர்தல்: மத்திய அரசு நடவடிக்கை
புதுடெல்லி, ஜன. 31–
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், வக்ப் திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் இருந்து சாரட் வண்டியில் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தார். அவரை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது. நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:–
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சாசனத்தை உருவாக்கிய அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.
கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் ஆகியோருக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் மிகப் பெரிய முடிவுகள் மிகவும் வேகமாக எடுக்கப்பட்டு வருவதை இன்று நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகளைக் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. பழங்குடி சமூகத்தின் 5 கோடி மக்களுக்காக ‘பழங்குடி கிராம மேம்பாட்டு திட்டத்தை’ தொடங்கியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சட்டம், வக்ப் திருத்த சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவதை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 அல்லது அதற்கு மேற்பட்டவயதுடைய 6 கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ.41,000 கோடி மத்திய அரசு வழங்கி உள்ளது. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் இந்த அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இன்று பெண்கள் போர் விமானங்களை இயக்குவது, காவல்துறையில் சேருவது, நாட்டில் பல்வேறு நிறுவனங்களை வழிநடத்துவது என பெருமை சேர்த்துள்ளனர். இந்தியாவின் மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று உலகளவில் இந்தியாவை பெருமைப்படுத்துகிறார்கள்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏழைகளின் கனவுகளை நனவாக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நாட்டில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். 2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் 25 கோடி ஏழைகள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர். சிறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் முத்ரா கடன் தொகை ரூ.20 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகும் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையிலேயே உள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது. உலகின் கண்டுபிடிப்பு சக்தியாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் நோக்கம். செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய ஏஐ மிஷன் தொடங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் உள்ளது.சிறு மற்றும் குறு தொழில்களில் ஈடுபட்டு உள்ளவருக்கு சுலபமாக கடன் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறு வியாபாரிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பலன் அடைந்துள்ளது சமூக நீதி அம்சம். சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு உள்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்கள் 1,700 புதிய விமானங்கள் வாங்கவுள்ளதன் மூலமாக நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக முன்னேறி வருகிறது. உதம்பூர்–ஸ்ரீநகர்–பாரமுல்லா ரெயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரெயில் பாதை மூலம் விரைவில் இணைக்கப்படும். இந்தியாவின் மெட்ரோ ரயில் இணைப்பு இப்போது 1,000 கிலோ மீட்டர் மைல்கல்லை கடந்துவிட்டது. உலகின் 3வது பெரிய மெட்ரோ இணைப்பைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
சூரிய ஒளி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்த அரசு.நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கவும், உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு பல வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாதுகாப்புத் துறையில் தன்னம்பிக்கையுடன் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதில் இருந்து, உலகுக்காக தயாரிப்போம் என்பதை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம். வளர்ச்சி அடைந்த பாரதமாக மாறுவதுதான் நமது ஒரே ஒரு குறிக்கோள். உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்” என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.