‘ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவைப் புகுத்தி வருகிறோம்’
புதுடெல்லி, அக்.21–
‘பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது,’ என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதுடெல்லியில் நடந்த ‘டிவி’ நிகழ்ச்சியில், மோடி பேசியதாவது:–
இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில், சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில், மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் 3வது முறையாக, ஆட்சி அமைத்து, 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. ரூ.9லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.
5 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நிய செலவாணி 700 பில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளது. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, முதலீடு குறித்து உலகம் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பார்த்து உலகம் வியக்கிறது.
2வது பெரிய பொருளாதாரம்…
வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள், வேலையின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது.
உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியா வேகமாக வளர்ந்து வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் பொருளாதாரம் , 1 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.,யை எட்ட 63 ஆண்டு ஆனது. ஆனால் 2 டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆனது. 2020ம் ஆண்டில் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. உலகின் 11வது பொருளாதாரமாக இருந்த இந்தியா, பத்தாண்டுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்துக்கு முன்னேறி உள்ளது.
3 கோடி வீடுகள்
சுமார் 3 கோடி வீடுகள் ஏழைகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. ரூ.9 கோடி மதிப்புக்கு உள்கட்டமைப்பு வசதிகளுக்கான திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ரூ.2 லட்சம் கோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் சுகாதார இன்சூரன்ஸ் துவக்கப்பட்டுள்ளது. இவை எல்லாமே 125 நாட்களில் நடந்துள்ளன.
செயற்கை நுண்ணறிவு
எதிர்கால உலகமே செயற்கை நுண்ணறிவோடு இணைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் ஆசை, அபிலாஷை, லட்சியம். ஒவ்வொரு துறையிலும் செயற்கை நுண்ணறிவை பெருமளவுக்கு புகுத்திக் கொண்டு வருகிறோம்.
பருவ நிலை மாற்றம் என்பது சவாலான ஒரு விஷயம். கார்பன் நச்சு பரவுவதைத் தடுக்கவும், பசுமை சக்தியை அதிகரிக்கவும் இந்தியா செயலில் இறங்கி இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.