செய்திகள்

உலகின் சிறந்த டெஸ்ட் தொடராக இந்தியா- – ஆஸ்திரேலியா போட்டி தேர்வு

மும்பை, ஜூன் 9–

உலகின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடராக 2020-–21-ம் ஆண்டில் நடந்த இந்தியா- – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இதுவரை நடந்துள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலேயே உச்சக்கட்டமாக மிகச்சிறந்த டெஸ்ட் தொடர் எது? என்பதை அறிய சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. இதையொட்டி 144 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பரபரப்பாகவும், திரில்லிங்காகவும் அமைந்த 16 தொடர்களை அடையாளம் கண்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் 1882-ம் ஆண்டு, 1932-ம் ஆண்டுகளில் நடந்த போட்டிகளும் இடம் பிடித்தன. இவற்றில் இருந்து இந்தியா-ஆஸ்திரேலியா 2001-ம் ஆண்டு தொடர், இந்தியா-ஆஸ்திரேலியா 2020-21-ம் ஆண்டு தொடர், இந்தியா-பாகிஸ்தான் 1999-ம் ஆண்டு தொடர், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து 2005-ம்ஆண்டு ஆஷஸ் தொடர் ஆகியவை அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் இருந்து நீயா-நானா இறுதிசுற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா (2020-21), இந்தியா-பாகிஸ்தான் (1999) தொடர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

உச்சக்கட்ட டெஸ்ட் தொடரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவிட்டனர். இதன் முடிவில் 2020-21-ம் ஆண்டில் நடந்த முடிந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சிறந்த தொடருக்கான அங்கீகாரத்தை பெற்றது. இதனை ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தியா – -பாகிஸ்தான் போட்டி

1999-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது. இதில் டெல்லியில் நடந்த டெஸ்டில் ஒரு இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே 10 விக்கெட்டுகளையும் சாய்த்து சரித்திரம் படைத்தார். இந்த போட்டியே 2வது இடத்தை பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *