டெல்லி, ஆக. 29–
ஓணம் பண்டிகையையொட்டி கேரளா மற்றும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகையானது, இந்தியாவின் தென் மாநிலங்களான கேரள மாநிலத்திலும், தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். புராண பழங்கதைகளின் அடிப்படையில், மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், கேரளாவின் புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர்.
மோடி வாழ்த்து
இந்த நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி கேரளா மற்றும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை நல்ல ஆரோக்கியம், இணையற்ற மகிழ்ச்சி மற்றும் மகத்தான செழிப்புடன் விளங்கட்டும். கடந்த பல ஆண்டுகளாக, கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்தும் ஒரு உலகளாவிய பண்டிகையாக ஓணம் மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி மலையாள மொழியில் குறிப்பிட்டுள்ளார்.