செய்திகள் முழு தகவல்

உலகம் இயற்கையாய் தோன்றியதை கூறிய தொல்காப்பியத் தமிழன்

விஜிபி காணொலி நிகழ்ச்சியில் அமெரிக்க நூலாய்வாளர் ஆய்வுரை

சென்னை, மே 24–

உலகம் யாராலும் படைக்கப்பட்டதல்ல; இயற்கையாய் தோன்றியது என்று, 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் கூறியுள்ளது என்று அமெரிக்க நூலாய்வாளர் அனிதா ராஜேஷ் தனது ஆய்வுரையில் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது, இந்தியா முழுக்க முழு அடைப்பு செய்யப்பட்டது. அந்த கால கட்டத்தில், இணையம் மூலமான செயல்பாடுகள் பெருமளவில் நடைபெற்றது. அதனைப் பயன்படுத்தி, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம், தனது இலக்கிய விழாக்களை, இணைய வழியில் ஒருங்கிணைத்து நடத்தத்தொடங்கியது. கடந்த ஆண்டில் மட்டும், சராசரியாக வாரத்துக்கு இரண்டு விழாக்கள் என 50 க்கும் மேற்பட்ட இலக்கிய விழாக்களை நடத்தியது.

இந்நிலையில், மீண்டும் தளர்வுகள் ஏற்பட்ட பிறகு, தற்காலிகமாக காணொலி இலக்கிய நிகழ்வுகளை விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் நிறுத்தி இருந்தது. கடந்த 2 மாதமாக மீண்டும் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலை வேகமெடுத்ததால், தமிழகத்தில் கடந்த 3 வாரமாக மீண்டும் முழு அடைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இலக்கிய நிகழ்ச்சிகளை விஜிபி தமிழ்ச்சங்கம் இணைய வழியில் தொடங்கியது.

59 வது இலக்கிய நிகழ்வு

அதன்படி, நேற்று 59 வது இலக்கிய நிகழ்வாக, தொல்காப்பிய தமிழன் என்ற தலைப்பில், அமெரிக்க நூலாய்வாளரும் எழுத்தாளருமான அனிதா ராஜேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விஜிபி குழுமங்களின் தலைவர் வி.ஜி.சந்தோசம் பேசும்போது, உலகம் எங்கும் தமிழர்களின் பெருமை சென்று சேர வேண்டும் என்று, விஜிபி குழுமம் திருவள்ளுவர் சிலைகளை நிறுவி வருகிறது. அதேபோல், இது போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளையும் விஜிபி உலகத்தமிழ் சங்கத்துடன் இணைந்து, தமிழ் அமெரிக்கா, வணக்கம் மலேசியா, தமெரிக்கா டிவி உள்ளிட்ட செய்தி சேனல்கள் உலக தமிழர்களிடம் இந்த நிகழ்ச்சியை எடுத்து செல்கிறது.

இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனிதா ராஜேஷ், மதுரையை சேர்ந்தவர். அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவையின் கிழக்கு வட்டார ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். உலகை தமிழால் உயர்த்துவோம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அனிதா ராஜேஷ் பேசியதாவது:–

வி.ஜி. சந்தோசம் 100 க்கும் மேற்பட்ட நூல்களையும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியவர் என்பது அறிந்து பெருமையும் வியப்பும் அடைந்தேன். இந்த நிகழ்ச்சியில் தொல்காப்பிய தமிழன் என்ற தலைப்பில் பேச உள்ளோம். யார் தமிழர் என்றால், தமிழை பேசுபவர்கள் தமிழர்கள். இன்று உலகில் கிடைத்துள்ள நூல்களில் பழமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் என்ற இலக்கண நூலே, வழிநூல் என்றும் அகத்தியம் அதற்கு முன்னதாக இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

தொல்காப்பியம், முதல் சங்க காலத்தின் இறுதியிலும் இடைச்சங்க காலத்தின் தொடக்கத்துக்கும் இடையில் எழுதப்பட்டது என்பது நூலோர் கணிப்பு. அதன்படி பார்த்தால், 3 சங்கங்களில், கடைச்சங்கம் கி.பி. 2 ஆண்டு நூற்றாண்டு வரையில் மொத்தம் 1850 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றுள்ளது என்றும் இலக்கிய சான்றுகள் மூலம் கணிக்கப்படுகிறது. எனவே, தொல்காப்பியம் 7 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறலாம்.

உலகம் படைப்பல்ல!

உலகம் எப்படி தோன்றியது என்பதற்கு,உலகம் யாராலும் படைக்கப்பட்டதல்ல, உலகம் இயற்கையாய் தோன்றியது என்று தொல்காப்பியம் கூறியுள்ளது. “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு, ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்” என்று தீர்மானமாக கூறுகிறார். உலகம் கடவுள் படைப்பல்ல, தானே தோன்றியது, மண், நெருப்பு, தண்ணீர், காற்று, வானம் என்ற ஐந்து இயற்கையும் கலந்து உருவானதே உலகம், என்ற அறிவியல் உண்மையை, தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் அப்போதே தெளிவாக கூறுகிறார்.

மேலும் தமிழர்கள் வாழ்ந்த நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நாநிலங்களாக பகுத்து கூறி உள்ளார். 5 வதாக கூறப்படும் பாலை என்பது தனி நிலமல்ல. மேற்கூறிய நான்கு நிலங்களில் ஏற்படும் திரிபால், அவை பயனற்றதாக மாறும்போது, அதனை பாலை நிலம் என்று வரையறுக்கிறார். மேலும் அவர்களுடைய வாழ்க்கை நிலையை களவு நிலை, கற்பு நிலை என்று பகுத்து கூறி உள்ளார்.

தலைவனும் தலைவியும் என்று இப்போது நாம் கூறுகிறோம். தொல்காப்பியத்தில் கிழவன் கிழத்தி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அதன்படி, தலைவனும் தலைவியும் கருத்தொருமித்து சந்தித்து அன்பை பரிமாறி வாழ்வது களவு நிலையாகவும் அது ஊராருக்கு தெரிந்து, அதன்படி இணைந்து வாழ்வது கற்பு நிலை என்றும் வகுக்கப்பட்டு உள்ளது.

ஆண் உயர்ந்தது ஏன்?

நிலம் என்பது மனித சமூக வாழ்வுக்கு மிகவும் தேவையானதாக இருந்ததால் நிலத்தை காப்பவன் உயர்ந்தவனாக போற்றப்பட்டான். அதனால், ஆண் உயர்வாக பார்க்கப்பட்டான். மேலும் மனிதர்களில் அவர்களுடைய பணியின் அடிப்படையில் மட்டுமே பகுக்கப்பட்டுள்ளான். பிறப்பின் அடிப்படையில், மனிதனை தொல்காப்பியம் வகைப்படுத்தவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் அன்றைய தமிழன் பாறைகளில், கற்களில் சிற்பங்கள் வடிக்க தெரிந்தவர்களாகவும், வாள், வேல், அம்பு போன்ற இரும்பால் ஆன போர் கருவிகளை பயன்படுத்தியதும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆடை நெய்யும் கலையை கற்றிருந்தான் என்றும், இசைக் கருவிகளாக, யாழ், குழல், பறை, முரசு, முழவு என்று ஏராளமான இசைக்கருவிகளை பயன்படுத்தி உள்ளதும் பாடல்களில் சான்றுகளாக உள்ளது. அதுமட்டுமின்றி, தனது நிலத்தை காக்க, வேந்தர்கள் தேர் படை, யானைப் படை, குதிரைப்படை, காலாட் படை போன்றவற்றை வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இதிலிருந்து, மொழியும், பண்பாடும் அறிவியலும் மேன்மையடைந்த அறிவுச் செழுமை கொண்ட இனமாக, தொல்காப்பியத் தமிழன் வாழ்ந்துள்ளான் என்பது தெரிகிறது என்று பல்வேறு தொல்காப்பிய ஆதார சான்றுகளுடன் விளக்கி பேசினார். நிறைவாக, விஜிபி உலகத் தமிழ்ச்சங்க இணைச் செயலாளர் ராஜாதாஸ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *