சிறுகதை

உலகத்தோடு ஒத்து வாழ் | துரை. சக்திவேல்

ஆத்திச்சூடி நீதி கதைகள் –8

––––––––––––––––––––––––––––––––––––––––––––

ஒப்புரவு ஒழுகு

(விளக்கம்: உலகத்தின் நடையை அறிந்து அதனுடன் ஒத்து வாழவேண்டும்)

 

என்னங்க…. என்னங்க.. சீக்கிரம் எந்திரிச்சு, கிளம்பி போங்க. டிரெயின் வந்திட போகுது என்று அதிகாலை 4 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் சந்திரனை எழுப்பினாள் ரேவதி.

அதுக்குள்ள மணியாச்சா… என்று கூறிக்கொண்டே எழுந்த சந்திரன் வேகம் வேகமாக சட்டையை மாட்டிக் கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தனது காரை எடுத்துக் கொண்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு சென்றான் சந்திரன்.

ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்ததில் காரை நிறுத்திவிட்டு வேகம் வேகமாக ரெயில் நிலையத்திற்கு சென்ற அவன், அங்குள்ளவர்களிடம் நெல்லை எக்ஸ்பிரஸ் வந்திருச்சா என்று விசாரித்தான்.

அப்போது அங்குள்ளவர்கள் வண்டி அரை மணி நேரம் தாமதமாக வந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னவுடன் நிம்மதி பெருமூச்சு விட்ட சந்திரன் அங்கிருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்தான்.

சந்திரனின் தந்தை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி. அவரது மனைவி கோமதி.

கருப்பசாமி ஒரு விவசாயி. படிப்பறிவு இல்லாதவர். மிகவும் பழமைவாதியாக வாழ்ந்து வந்தார்.

கால மாற்றத்தை அவர் ஏற்றுக் கொள்வது கிடையாது. வீட்டில் டி.வி., பிரிட்ஜ், போன்ற எந்தவித ஆடம்பர பொருட்களும் வைத்திருப்பது இல்லை. எந்த வித புதுமையையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர் செல்போன் கூட பயன்படுத்துவது கிடையாது.

தனது மகன் நன்றாக படித்து விஞ்ஞானியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார் கருப்பசாமி.

சந்திரனும் தனது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் படிப்பில் முழு கவனம் செலுத்தி எலக்ட்ரானிக்ஸ் துறையில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றார்.

மேலும் படித்து எம்.இ. பட்டம் பெற்ற சந்திரன் தனது திறமையால் சென்னையில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

தனது கனவை மகன் நிறைவேற்றியதால் கருப்பசாமி மிகவும் பெருமை அடைந்தார்.

விஞ்ஞானியாக பணியில் சேர்ந்த சந்திரனுக்கு சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரேவதியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது.

தனது காதல் விபரத்தை சந்திரன் தனது தாய் கோமதியிடம் கூறி ரேவதியை திருமணம் செய்து கொள்ய தந்தையிடம் சம்மதம் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டான்.

கருப்பசாமி சந்திரனின் திருமணத்திற்கு ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பின்னர் சந்திரன் ரேவதியை அழைத்து வந்து தனது தந்தையிடம் நேரில் பேசினான்.

ஒருவழியாக அனைவரும் பேசி முடித்து சந்திரனுக்கும் ரேவதிக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.

திருமணம் முடிந்த பின்னர் சந்திரனும் ரேவதியும் சென்னைக்கு வந்தனர்.

கருப்பசாமியும் கோமதியும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர்.

தனது தாயும் தந்தையும் வயதான காலத்தில் கிராமத்தில் வசிப்பதை சந்திரன் விரும்பவில்லை.

அதனால்ன் தனது தாய் மற்றும் தந்தையை நிரந்தரமாக சென்னைக்கு வந்து தன்னுடம் இருக்குமாறு கேட்டுக் கொண்டே இருந்தான்.

இதற்கு மறுத்து வந்த கருப்பசாமி ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் தனது மகனுடனே இருந்துவிடலாம் என்று முடிவு செய்து கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலங்களை மற்றொருவரிடம் குத்தகைக்கு விட்டு விட்டு சென்னைக்கு கிளம்பினார்.

கருப்பசாமி தனது மனைவி கோமதியை அழைத்துக் கொண்டு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு கிளம்பி வந்தார்.

அவர்களை அழைத்துச் செல்வதற்காக சந்திரன் எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தான்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கி வந்த தனது தந்தை கருப்பசாமியையும் தாய் கோமதியையும் அழைத்துக் கொண்டு சந்திரன் தனது வீட்டுக்கு வந்தான்.

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் சந்திரனும் ரேவதியும் வீட்டிலிருந்து அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

கிராமத்திலேயே இருந்த கருப்பசாமிக்கு நகரத்தில் வளர்ந்த மருமகள் ரேவதியின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மனைவி கோமதி அவரை அமைதிப்படுத்தினார்.

மறுநாள் திங்கள் கிழமை காலை சந்திரன் வேகவேகமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

கருப்பசாமி அவனிடம் நீ எத்தனை மணிக்கு வேலைக்கு போகனும்னு கேட்டார்.

அலுவலகம் அருகில் இருப்பதால் 9.20 மணிக்கு கிளம்பினால் போதும் என்று கூறினார்.

சரி உனது மனைவி எப்ப கிளம்பனும் என்று கருப்பசாமி கேட்டார்.

அவளுக்கு ராத்திரி தான் வேலை. அதனால் இரவு 7 மணிக்கு கிளம்பி போயிட்டு காலையில் 6 மணிக்கு வந்துடவா என்றான்.

கருப்பசாமிக்கு தூக்கி வாரிப்போட்டது.

என்னடா சொல்ற. இரவு 7 மணிக்கு மேல வேலைக்கு போவாளா.

டேய் நீ என்ன பைத்தியக்காரனா.

நானும் உனக்கு கல்யாணம் முடிஞ்சதும் என்ன சொன்னேன். உன் பொண்டாட்டியை வேலைக்கு அனுப்பாத. பொம்பளைங்கள வேலைக்கு அனுப்புவது தப்புன்னு சொன்னேன்.

இப்ப என்னடானா அவள் ரத்திரிதான் வேலைக்கு போவாள்னு சொல்ற.

பொம்பளைங்க 6 மணிக்கு விளக்கு வச்சதுக்கு அப்புறம் வீட்டை விட்டு வெளியவே போகக்கூடாது.

இவ என்னடானா 6 மணிக்கு தான் வேலைக்கு போவாளாம். காலையில் வந்துடவாளாம் என்று கோபமாக பேசினார் கருப்பசாமி.

அப்பா, அவள் வேலைப்பார்க்கிறது ஐ.டி. கம்பெனி. அது வெளிநாட்டு கம்பெனி. அதனால் அவங்க நேரத்திற்கு தான் நாம வேலை பார்க்கனும். நம்ம நேரத்துக்கு அவங்க வேலை பார்க்க மாட்டாங்க என்று சந்திரன் தனது தந்தைக்கு எடுத்துக் கூறினான்.

கருப்பசாமியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தனது மகனை கண்டிக்கத் தொடங்கினார்.

ரேவதி அவர் பேசியதை பொறுமையாக கேட்டுக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவளும் பொறுமையை இழந்தாள்.

மாமா… இது உங்க காலம் மாதிரி கிடையாது. பொம்பளைங்க வேலைக்கு போகக்கூடாது. 6 மணிக்கு மேலே வெளியே போகக்கூடாதுன்னு சொல்ல முடியாது.

இது நவீன காலம். இந்த காலத்திற்கு தகுந்த மாதிரி நாமும் மாறிக் கொள்ள வேண்டும்.

நான் என்ஜினீயரிங் படித்தது நல்ல வேலையில் சேர்ந்து சாதிக்கனும்னு என்பதற்காக.

இப்ப எல்லாம் பெண்கள் எல்லா துறையிலும் சாதித்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் அந்த பெண்களின் உழைப்பு மட்டுமல்ல. அவங்க வீட்டில் அவளுக்கு உற்றதுணையாக இருப்பது தான் முக்கிய காரணம்.

தயவு செய்து உலகத்தின் நடையை அறிந்து அதனுடன் இணைந்து வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று கூறினாள்.

சந்திரனும் தனது தந்தையிடம் இப்ப காலம் மாறிப்போச்சு அப்பா. நம்ம வீட்டில் மட்டும் அல்ல. உலகம் முழுவதும் இப்படி தான் மாறிக்கிட்டு வருது.

அதனால் நீங்க கொஞ்சம் மாறுங்கள் என்று தற்போதை காலத்தின் மாற்றத்தை எடுத்துக் கூறினான்.

மகன் சந்திரன் கூறியதை முதலில் ஏற்க மறுத்த சந்திரன், உலக நடைமுறையை உணர்ந்து அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாவிட்டாலும் அவற்றை சகித்துக் கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையை தொடர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *