செய்திகள் நாடும் நடப்பும்

உறுப்பு மாற்று சிகிச்சையில் சாதனை படைக்கும் தமிழகம்

உடல் உறுப்புகளை தானம் செய்த கொடையாளர் ஸ்டாலின்சென்ற வார இறுதியில், ஆகஸ்ட் 13 அன்று சர்வதேச உடல் உறுப்பு தினம் கொண்டாடப்பட்டது அல்லவா? அன்று பல்வேறு நிகழ்வுகளில் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்ததை கண்டோம்.

கடந்த 16 மாதங்களாக நாடே கொரோனா பீதியில் இருப்பதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தடைப்பட்டு நாடு முழுவதும் 5 லட்சம் பேர் உறுப்புகள் தானத்திற்காக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற முடியாது. மேலும் கொரோனாவில் இருந்து தப்பித்தவர் அடுத்த சில மாதங்களில் இறந்து விட்டாலும் அவரது உடல் உறுப்புகள் தானத்திற்கு ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகவே இருக்கிறது. உரிய சட்டங்கள், வரையறைகள், கோட்பாடுகள் நிலைநிறுத்தப்பட்டும் இருப்பதால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணியில் நாம் இருக்கிறோம்.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சர்வதேச உடல் உறுப்பு தான தின செய்தியில் உடல் உறுப்பு தானத்தை பற்றிய அச்சமின்றி இறப்புக்குப் பின் தம் உடல் உறுப்புகளை கொடையளிக்க முன்வரவேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த முடிவால் பலரது வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவர் மற்றவரை செய்யச் சொல்லிவிட்டு சும்மா இருந்து விடுபவர் இல்லை என்பதையும் செய்து காட்டும் தலைவர் ஆவார்.

2009ல் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதே, மியாட் மருத்துவமனையில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய போதே நல்ல முன்உதாரணமாக இறப்புக்குப் பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக உறுதி தந்து அதற்கான ஆவணங்களிலும் கையெழுத்திட்டார்.

அந்த நிகழ்வில் இவருக்கும் முன்பே அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அந்த உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டவர் ஆவார்.

இவர்கள் இருவரின் உணர்வுகளை புரிந்து கொண்ட அந்நிகழ்வில் மேலும் 2000 பேருக்கும் மேல் அப்படி ஒரு மேன்மையான உறுதியைத் தந்து உடல் உறுப்பு தானம் தந்ததை மறந்து விடக்கூடாது.

இப்படி தலைவர் மட்டுமின்றி அவர்களது குடும்பதாரும் நல்ல முன்உதாரணங்களாக இருந்ததால் தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் முன்னணி மாநிலமாகவே இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து பலர் தங்களது பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் உயிருக்குப் போராடும் நிலையில் இங்கு வந்து மாற்று அறுவை சிகிச்சையால் பயனடைந்து புத்துயிர் பெற்று சொந்த மண்ணுக்கு திரும்புகிறார்கள்.

கொரோனா பெரும்தொற்று தணிந்து சகஜ நிலை திரும்பும்போது வெளிநாட்டு நோயாளிகள் எளிதில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை பெற சட்டத்திருத்தங்களும் வசதிகளும் தேவைப்படுகிறது.

அது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் உரிய நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று தமிழகத்தின் மருத்துவ சிறப்புகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்க வேண்டும்.

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்குட்பட்டு தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும் 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடியும். உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை) தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இருதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 2008-ல் உறுப்பு தானத் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தால் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள் பதிவு செய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும். இதில் மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம் கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 2008 முதல் 2020 வரை 1,393 பேரிடமிருந்து 7,831 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் இது வரை சிறுநீரகத்துக்காக 6,158 பேரும் இதயத்துக்காக 28 பேரும் நுரையீரலுக்காக 39 பேரும் கல்லீரலுக்காக 418 பேரும் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

உடல் உறுப்புகள் இறந்தவரின் நினைவாக மற்றவர் உடலில் இயங்குவதால் மண்ணில் மக்கி கழிவு பொருளாக மாறாமல் உயிர் கொடுத்த தயாளராக உயர்ந்த மனிதனாக மதிக்கப்பட உடல் உறுப்பு தானம் ஓர் உன்னத கடமையாகும்.

உறுப்புகளத் தானம் அளிப்போம் ; மனித உயிர்களைக் காப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *