செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

உறுப்புகள் தானம் நாட்டின் கட்டாயம்!

Makkal Kural Official

ஆர். முத்துக்குமார்


உலக உறுப்புத் தான தினத்தையொட்டி, ஆகஸ்ட் 13 , அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, இந்தியாவில் உறுப்பு தானத்தின் குறைவான நிலையை சுட்டிக்காட்டி மக்களிடம் வலுவான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மருத்துவத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருந்தாலும், தகுந்த தான உறுப்பு கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்கள் பலியாகி கொண்டு இருப்பது தவிர்க்கக்கூடிய பேரிழப்பாகும் என பதிவிட்டுள்ளார்.

2013-ல் 4,990 உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் நடந்த நிலையில், 2023-ல் அது 18,378-ஆக உயர்ந்துள்ளது. அதில் கவணிக்க வேண்டியது 2023 மரணமடைந்தவர்களிடமிருந்து உறுப்பு தானம் செய்தோர் எண்ணிக்கை வெறும் 1,099 மட்டுமே. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இந்தியாவின் நம் நாட்டில் உறுப்பு தான விகிதம் ஒரு 10 லட்சம் பேரில் 0.8 மட்டுமே. ஆனால் சிறு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவிலோ 45 பேர் என இருக்கிறது.

தவறான நம்பிக்கைகள்

உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு தானம் புதிய வாழ்க்கையை அளிக்கிறது. பல ஆண்டுகளாக மருத்துவ ரீதியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், உறுப்பு தானம் தொடர்பான கட்டுக்கதைகளை வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளன. உறுப்பு தானம் செய்ய ஆர்வம் நம் நாட்டில் பலருக்கு இருந்தாலும் உறுப்பு தானம் செய்தால் உடல் சேதமடையும், இறுதிச்சடங்குகளில் இடையூறு ஏற்படும் எனபன போன்று பல்வேறு தவறான நம்பிக்கைகள், உறுப்பு தானத்தை தடுக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன.

அறுவைச் சிகிச்சை முறைகள் உடல் தோற்றத்தை மேன்மைபடுத்துகிறது என ஏற்றுக்கொள்கின்ற நம்மில், பலர் உறுப்பு தானத்தை கருணையின் செயலாக ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டுவது உரிய விளக்கங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றிய விளம்பரங்கள் சரிவர சென்றடையவில்லை என்பதையே உணர்த்துகிறது.

ஆரோக்கியமானவர்களே தானம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தவறு. வயது முதிர்ந்தவர்களிடமிருந்தும், இயற்கை காரணங்களால் இறந்தவர்களிடமிருந்தும் பல உறுப்புகள், திசுக்கள், எலும்புகள், தோல், இதய வால்வுகள் போன்றவை பெற முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஊடகங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தானம் செய்த குடும்பங்கள் மற்றும் உறுப்புகள் பெற்றவர்களின் கதைகளைப் பகிர்வு செய்தல், சமூக அளவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் உறுப்பு தானம் குறித்த பாடங்களை சேர்த்தல் ஆகியவற்றை டாக்டர் ரெட்டி பரிந்துரைத்துள்ளார்.

மேலும், ஸ்பெயின், குரோஷியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள “முன்கூட்டிய சம்மத” (Presumed Consent) முறை — எல்லா பெரியவர்களும் தானதாரர்களாக கருதப்படுவர், விருப்பமில்லையெனில் பதிவு செய்ய வேண்டும் — இந்தியாவிலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனது அனுபவம்

இதைப் பற்றி எழுதும் போது, எனது சுய அனுபவத்தையும் சொல்லியாக வேண்டும். 2022 ஆகஸ்ட் 9-ஆம் தேதி, எனது தந்தை ராஜமாணிக்கம் அவர்களின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றிய அனுபவத்தைப் பெற்றவன் நான்!

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக தனது முழு உடலை தானம் செய்யத் தீர்மானித்திருந்த என் தந்தையாரின் விருப்பம், அவரது மறைவிற்குப் பின் நிறைவேற்றப்பட்டது. அந்த வித்தியாசமான அனுபவம் எங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வை தந்தது அவர்களையும் இப்படிச் செய்யலாமே என சிந்திக்கவும் வைத்தது.

இது மருத்துவ மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும், அறிவியல் முன்னேற்றத்திற்கு உதவவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், உடல் உறுப்பு தானத்தில் முன்னணியில் இருக்கும் நிலையில், உடல் தானமும் மருத்துவக் கல்விக்கு முக்கியமானதாக உள்ளது.

ஆம் வெறும் சாம்பலாய் மாறாமல் இறப்பிற்குப் பிறகும் சமூக நலனுக்காக பங்களிக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்தியது. ஒவ்வொரு தனி நபரும் உறுப்பு தானம் தர பதிவு செய்ய வேண்டும்; குடும்பத்தாரும் அதை மதிக்க வேண்டும். தவறான நம்பிக்கைகளை ஒழித்து, உறுப்பு தானத்தை நமது கடமையாக உணர்ந்து இந்தியாவில், THOTA சட்டமும் NOTTOவும் நெறிமுறை நடைமுறைகளை உறுதி செய்கின்றன, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ஒழுங்குபடுத்துகின்றன. பழமையான எண்ணங்களில் சிறைபட்டு இருக்கும் நமது சமுதாய பார்வையை விரிவாக்கி இந்த உயரிய கொடை தரும் வள்ளல்களாக மாற, உயர ஒவ்வொருவரும் உறுதியேற்போம்.

உறுப்பு மாற்று அறுவை

ரொனால்ட் லீ ஹெரிக் தான் முதன்முதலில் தனது உறுப்பு தானம் செய்தவர். 1954 ஆம் ஆண்டில், அவர் தனது சிறுநீரகத்தை தனது இரட்டை சகோதரருக்கு வழங்கினார், மேலும் இந்த வெற்றிகரமான உறுப்பு மாற்று செயல்முறையை மேற்கொண்ட மருத்துவர் டாக்டர் ஜோசப் முர்ரே ஆவார். பின்னர் 1990 ஆம் ஆண்டில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்ததற்காக அவருக்கு உடலியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உறுப்பு தான முயற்சிகளைப் பொறுத்தவரை, உலகின் பல்வேறு பகுதிகளும் அவற்றின் நிலைமைகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் உறுப்பு தானத்தின் விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவத்தை எதிர்கொள்கின்றன. உறுப்பு தானம் என்பது மரணத்திற்கு பின் கூட உயிர் வழங்கும் அற்புதமான செயல். நம்மால் செய்யக்கூடிய மிக உயர்ந்த கருணையான முடிவுகளில் இது முத்தாய்பானது.

உடல் தானம் செய்பவர்கள் மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்திற்கு பங்களித்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் ஒரு உயர்ந்த செயலைச் செய்கின்றனர். இந்தியாவில் ஜோதி பாசு, நானாஜி தேஷ்முக் போன்ற பிரபலங்கள் தங்கள் உடலை தானம் செய்து முன்மாதிரியாக உள்ளனர்.


தானம் ..! – ராஜா செல்லமுத்து

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம்


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *