ஆர்.முத்துக்குமார்
உக்ரைனின் ஆயுத தாக்குதல்களை குறிப்பாக ‘டிரோன்’ (drone) கொண்டு நடத்திடும் ஆகாய மார்க்க தாக்குதல்களை மிக லாவகமாக ரஷியா தடுத்து விடுவதன் பின்னணியில் ரஷியாவின் டிஜிட்டல் ராணுவ தளவாடங்களின் நவீனம் புரிகிறது.
அமெரிக்கா தந்து உதவுவதுடன் நாட்டோ நாடுகள் உக்ரைனுக்கு தந்து கொண்டு இருக்கும் பல நவீன ஆயுதங்களை ரஷியா தவிடு பொடியாக்கும் வல்லமையின் பின்னணியில் உள்ள டிஜிட்டல் தொழில் நுட்பம் மேன்மை அமெரிக்காவின் ராணுவ துறைக்கு பெரிய அதிர்ச்சியையும் புதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு சவாலாக இருக்கும் கிழக்கு எல்லையில் பாகிஸ்தான், சீன நவீன ராணுவ தளவாடங்களின் தாக்குதலை நம்மால் சமாளிக்க முடியுமா? நம்மிடம் இருக்கும் ஆயுதங்கள் நவீனமானதா? என்பதை மறுபரிசீலனை செய்யும் தருணம் வந்துவிட்டது.
இந்தக் கேள்விக்கு நல்ல பதிலாய் இந்திய விமானப்படை சென்ற வாரம் தங்களது ராணுவ தளவாடங்களில் புதிதாய் சேர்த்துக் கொண்டு இருக்கும் ‘ஹெரான் மார்க் –2’ ரக டிரோன்கள் அமைந்து இருக்கிறது.
நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் 4 புதிய ‘ஹெரான் மார்க் 2’ டிரோன்களை கண்காணிப்பு பணிகளுக்காக இந்திய விமானப்படை சேர்த்துள்ளது.
இஸ்ரேல் தயாரிப்பான இவை, வானில் கண்ணுக்கு எட்டாத தொலைவில் 36 மணி நேரம் தொடர்ந்து பறந்து கண்காணிப்பு மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கும் திறன் வாய்ந்தவை. இந்த புதிய டிரோன்கள் குறித்து, டிரோன் படைப்பிரிவு தலைமை அதிகாரி விங் கமாண்டர் பங்கஜ் ராணா, டிரோன் பைலட் ஸ்குவார்டன் லீடர் அர்பித் டாண்டன் ஆகியோர் கூறியதாவது:–
விமானப்படையில் சேர்க்கப்பட்ட புதிய ‘ஹெரான் மார்க் 2’ டிரோன்கள்.சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளை கண்காணிப்பதற்காக ஹெரான் மார்க்–-2 ட்ரோன்கள் வடக்கு எல்லை விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மூலம் செயல்படும் இந்த டிரோன்கள் வெகு தொலைவில் பறந்தபடி எதிரிகளின் இலக்குகளை கண்டுபிடித்து தகவல் தெரிவிக்கும். இந்தத் தகவலை வைத்து போர் விமானங்கள் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் இலக்கு மீது எளிதாக தாக்குதல் நடத்த முடியும்.
இந்த டிரோன்கள் மூலம் ஒரே இடத்திலிருந்து நாடு முழுவதையும் கண்காணிக்க முடியும். நீண்ட நேரம் பறக்கும் திறன் வாய்ந்ததால், இந்த டிரோன்கள் மூலம் பல பணிகளை மேற்கொள்ளலாம். இந்த டிரோன்கள் விமானப்படையின் உளவுப் பணி, கண்காணிப்புப் பணியை ஒருங்கிணைக்கிறது. இவற்றின் மூலம் எதிரி இலக்குகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
எந்த காலநிலையிலும் எந்தப் பகுதியிலும் இந்த டிரோன்களை இயக்க முடியும். இதில் உள்ள ஏவியானிக்ஸ் கருவிகள் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கு கீழும் செயல்படும் திறன் வாய்ந்தவை. ஒரே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க முடியும். வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளையும் குண்டுகளையும் இதன் மூலம் வீச முடியும்.
ஆக தாக்குதல்கள் ஏற்படும் முன்பே கண்காணித்து தகவல் தந்து விடும் வல்லமை பெற்று இருப்பதால் ‘வருமுன் காப்போம்’ என்று நாம் பாதுகாப்பு வளையத்தை பலமாக வைத்து இருப்பது நல்லது தான்.