சிறுகதை

உறுதியான பாசப் பிணைப்பு | டிக்ரோஸ்

தாம்பரம் ரெயில் நிலையத்தை தாண்டும் போது கனகா மனது துள்ளி எழுந்தது.

மெல்ல ரெயிலின் கதவருகே சென்று ‘படக் படக்’ என ஓடிக் கொண்டிருந்த காட்சிகளை ரசித்த வண்ணம் இருந்தாள்.

பட்டப்படிப்பு முடிக்கும் வரை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இதே பாண்டியன் எக்ஸ்பிரசில் மதுரை சென்று பஸ்சில் அருப்புக்கோட்டை சென்று திரும்புவது அவளுக்கு வாடிக்கை.

ஆனால் இன்று ஏன் சென்னை வந்தவுடன் இத்தனை மகிழ்ச்சி? உடன் வந்து இருந்த அப்பா கண்ணனுக்கும் அம்மா லலிதாவுக்கும் ‘இவ இப்படியே ஓடுற ரெயிலில் இருந்து இறங்கி அண்ணா நகருக்கு ஓடிப்போவா பாருங்க’ என்று பேசிக் கொண்டனர்.

ஒரு வழியாக அண்ணா நகரில் கண்ணனின் தங்கை வீட்டிற்குள் நுழைந்தவுடன் அத்தை மாமாவின் வரவேற்பில் திக்குமுக்காடினாள் கனகா.

பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் போது கல்லூரி விடுதி வாழ்க்கை என்பதால் எம்.ஏ. படிக்கும் ஆர்வம் குறைவாகவே இருந்தது. அச்சமயத்தில் அத்தையும் மாமாவும் மும்பையில் இருந்து மாற்றலாகி சென்னையில் தங்க வருவதால் எங்களுடனேயே தங்கிப் படிக்கலாமே என ஆசையாக அழைத்தனர்.

அவர்களுக்கு பிள்ளைகள் கிடையாது. ஆகவே சொந்த மகளைப் போல் பார்த்துக் கொள்வார்கள் என்று உணர்ந்து கனகாவும் சரி என கூறி சில கல்லூரிகளில் விண்ணப்பிக்க, ஒரு கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. அண்ணா நகரில் இருந்து ஷேர் ஆட்டோ, அடிக்கடி பஸ் வசதியும் இருந்ததால் வசதியாக இருக்கும் என்றும் உணர்ந்தாள்.

முதல் நாளில் வீட்டில் இருந்து அப்பா அம்மாவுடன் கல்லூரிக்கு சென்று விபரங்களை தெரிந்து கொண்டு விட்டு, வீடு திரும்பும் முன் பிரியாணிக்கு புகழ் பெற்ற ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டே வீடு திரும்பினர்.

கல்லூரி இரண்டு நாட்களுக்கு பிறகு தான் என்பதால் மறு நாள் ஓய்வாக பெற்றோருடன் சென்னை மால்களை வலம் வந்தனர். புதிய ஆடைகள், கல்லூரிக்கு தேவையான உபகரணங்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அன்று மதியம் விமானத்தில் அத்தை வீட்டிற்கு வந்து இருந்தது அப்பாவின் அண்ணன் சக்தியும் அவர்களது இரண்டாம் மகள் வித்யாவும் தான்!

பெற்றோர்கள் காதல் திருமணம் என்பதால் அருப்புக்கோட்டை அருகே இருந்த அந்த கிராமமான கஞ்சனாயக்கன் பட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.

தாத்தாவும் பெரியப்பா குடும்பத்தாரும் பிரித்து வைத்து விட்டனர். கனகா வளர்ந்தது, பிரிந்த பின் கிடைத்த பூமி, பராமரிக்க வேண்டிய தோட்டத்திலும் அதில் இருந்த ஓட்டு வீட்டிலும் தான்.

வீட்டின் பின்புறமாக சென்று, அடுத்த வீட்டில் நுழைந்தால் முன்புறம் இருக்கும் மூன்று மிஷின்கள் கொண்ட மாவு அரவை மில் இருக்கும். பின்புறத்தில் தான் தாத்தா சிவக்குமார் தனியாக தங்கி இருந்து தோட்டத்தை கவனித்து வந்தார்.

இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் தனக்கு என்று இருந்த அந்த 35 ஏக்கர் நிலம், அது ஊருக்கு வெளிப்புறம் 10 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. தினமும் சைக்கிளில் சென்று, காலை முதல் மதியம் வரை அங்கேயே இருப்பார்.

பள்ளிப்படிப்பு காலத்தில் கனகா மட்டும் தான் அவரை பார்க்க அனுமதி, முதலில் மோர், பிறகு மதிய சாப்பாடு எல்லாம் இவர்கள் வீட்டில் இருந்தே செல்லும்.

அப்பா மில்லில் வேலை பார்க்கும் சத்தம் கேட்டால் உள்ளே போக மாட்டார். எப்போதாவது சென்றால் கண்ணனிடம் ஏதாவது கேட்பார். பிறகு அப்பா வெளியேற, தாத்தாவே வேலையில் இறங்கி விடுவார். இருவரும் இப்படியே முகம் முழுவதும் மாவு படரவும் தோட்ட வேலையில் சேற்றை முழங்கால் அளவிற்கு பதித்து வேலை செய்த அறிகுறிகளும் எப்போதும் இருக்கும்.

ஆனால் பெரியப்பா சக்தியும் பெரியம்மா தமிழ்ச்செல்வியும் படுஒயிலாக தூசி ஏதுமில்லா வாழ்வு! தோட்டத்தின் முன்பகுதியில் அவர்களது பாகத்தில் தான் ஒரு இரண்டு சக்கர வாகன ஷோரூம் வைத்து நடத்திக் கொண்டு இருந்தனர். அவர்களது மூத்த மகள் மல்லிகா, கனகாவிற்கு பள்ளியில் இரண்டு ஆண்டுகள் சீனியர், தற்போது படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்.

இரண்டாவது மகள் வித்யா பிளஸ் டூ முடித்து விட்டு பி.ஏ. ஊடகவியல் படிக்க இப்போது சென்னை வந்துள்ளனர், அவளும் அத்தை வீட்டில் இருந்து தான் படிக்கப் போகிறாளாம்!

அண்ணன் குடும்பத்தார் ஊரில் பிரபலம்.. காரணம் இரு சக்கர வாகன ஷோரூம்! இதுவரை அப்பாவால் பிரிக்கப்படாத நிலத்தினை முன்புறத்தில் வைத்துக் கொண்டது மட்டுமின்றி, அப்பாவிடம் ரொக்கமாக கிட்டதட்ட ரூ.15 லட்சம் வரை பெற்றுத்தான் நடத்தி வருகிறார்கள்.

அப்பாவை கவனிக்க கூட வராத பிள்ளை என்றும் அண்ணனை சொல்ல முடியாது. பலமுறை வீட்டுக்கு வருவான், உடல் பரிசோதனைக்கும் வெளியூருக்கும் அழைத்துச் செல்வான். ஆனால் தம்பிக்கு என்ன செய்யப்ப போகிறீர்கள் என்பது பற்றி பேசவேமாட்டான்.

அம்மா இறக்கும் முன் ‘சொத்தையெல்லாம் உங்க காலத்தில் பிரித்துக் கொடுத்து விடாதீர்கள்’ என்று கூறியதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அவரும் அதுபற்றி பேசுவதாகத் தெரியவில்லை.

மொத்தத்தில் அண்ணன் தம்பி குடும்பத்தார் ஒருவரை ஒருவர் எலியும் பூனையுமாகத் தான் பார்த்துக் கொண்டனர்.

வீட்டிற்கு தம்பி வந்தவுடன், எனக்கு சின்ன வேலை இருப்பதாக கூறி விட்டு அண்ணன் வெளியேறி விட்டான். அப்பாவும் அம்மாவும் கனகாவிடம் நாங்க இன்று இங்கே இருந்தால் அத்தைக்குத் தான் சிரமம். ஊருக்கு திரும்பி விடுகிறோம் என்று கூறிவிட்டு அன்று இரவே பஸ்சில் ஊர் திரும்பினர்.

பெரியப்பாவை கண்டால் கனகாவிற்கு சற்று பயம் வரும். பெரியம்மாவை கண்டால் மேலும் நடுங்கி விடுவாள்! அன்று இரவு சாப்பிட உட்கார்ந்த போது அருகே இருந்த வித்யா தட்டில் இருந்த பெரிய சிக்கன் துண்டை எடுத்துக் கொண்ட போது கனகாவின் மனதில் ஏதோ செய்தது. ‘இனி இவளுக்குத் தான் ஸ்பெஷல் கவனிப்பு’ என்று மனம் சொல்லியது.

மறுநாள் காலை பெரியப்பாவும் விமானத்தில் மதுரை சென்று, அருப்புக்கோட்டைக்கு தனது காரில் சென்று விட்டார். அன்று மதியம் சாப்பிட வந்த போது அத்தை தங்களது பள்ளி நாட்கள் கதைகளை சொல்லிய வண்ணம் சாப்பாட்டை பரிமாறி எங்களுடன் சாப்பிட்டாள். கனகாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. இதுவரை தனக்கென உறவு என்று சொல்லிக் கொண்டு மனம் விட்டு பேசியவர் யாரும் இல்லை!

வித்யா வீட்டில் எப்போது உறவினர்கள் கூட்டம் இருக்கும். கூடவே நண்பர்களும் அரட்டை அடிக்க வந்து விடுவார்கள்.

கனகா வீட்டிலே தட்டு முட்டுச் சாமான்கள் இடையே தரையில் தான் உட்கார்ந்து பேச முடியும்! ஆகவே தான் யாரும் வருவது இல்லை.

மறு நாள் காலை இருவருக்கும் கல்லூரி துவக்கம். ஆகவே இருவரும் புத்தகங்களை ஏந்தியபடி பஸ் நிலையம் வந்தனர். பஸ்சில் பெரும் கூட்டம் கனகா அழைப்பின் பேரில் வித்யாவும் ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள். இறங்கும் போது காசை நான் தருகிறேன் என்று கூறியபடி ரூ.100 நோட்டை டிரைவரிடம் நீட்ட ஏம்மா ரூ.20 சில்லறை இல்லையா? என கேட்க கனகா தயாராக வைத்து இருந்த 20 ரூபாயைத் தந்து விட்டாள்.

வித்யாவிற்கோ பரம சந்தோஷம். குறைந்தது ரூ.70 ஆகும் என்று நினைத்தே ரூ.100 நீட்டினால், இப்படி ரூ.20 க்கு சென்னையில் ஆட்டோ சவாரியா? என்று ஆச்சரியப்பட்டாள்.

மெல்ல கல்லூரி வளாகம் நெருங்கியபோது ‘வித்யா மதியம் சேர்ந்த திரும்ப முடியாது என்று நினைக்கிறேன். எப்போ எனக்கு வகுப்புகள் முடியும் என்று தெரியாது’ என்று கூறிவிட்டு, எந்த பஸ்சில் திரும்புவது அல்லது எங்கு சென்று ஷேர் ஆட்டோ ஏறுவது வரை சொல்லிக் கொடுத்து விட்டே பிரிந்து சென்றாள்.

வித்யாவிற்கு முதல் நாள் தனிமை, பழக்கப்படாத கல்லூரி வாழ்க்கை என பல குழப்பங்களுக்கு இடையே தனது அறையை கண்டுபிடித்து நுழைந்தாள்.

அங்கே பல மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். வித்யாவோ உயரமாக இருப்பதால் யாரும் உடனே வந்து பேச தயங்கினர். ஒரு வேளை சீனியராக இருந்து ராகிங் செய்ய வந்து இருந்தால்……? என்ற பயம்.

வித்யா மெல்ல ஒரு ஓரத்தில் இருந்த இருக்கையில் புத்தகங்களை வைத்து விட்டு அருகே இருந்தவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

சில நிமிடத்தில் ஒரு ஆசிரியை வந்து, அறிமுகம் செய்து கொண்ட பின், சுய அறிமுகமும் செய்து கொள்ள வைத்தார். இந்த ஆண்டு முழுவதும் என்ன படிப்பீர்கள் என்பதையும் விவரித்தார்.

இன்று மதியம் வரை தான் கல்லூரி, நீங்க வேண்டுமானால் மாலை வரை வகுப்பில் இருந்து ஒருவருடன் ஒருவர் பேசி அறிமுகமாகிக் கொள்ளலாம். வேண்டுமானால் நூலகம் சென்று ஏதேனும் புத்கக்தை புரட்டலாம் என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார்.

அப்போது தான் வித்யாவிற்கு வந்தது வினை, திடீர் என சில சீனியர் மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைந்தனர். குள்ளமாக இருந்த சிறுமிகளை பாவம் போகட்டும் என்று விட்டு விட்டனர்.

அவளுடன் மேலும் ஒரு சிலரை இதைச் செய், அதைச் செய் என நச்சரித்து விட்டனர்.

ஆட்டம், பாட்டம் என அந்த அறையில் கூச்சல் குழப்பம் இருந்தாலும் ஏனோ கல்லூரி அலுவலர்கள் பாராமுகமாக இருந்து விட்டனர்.

வித்யாவிற்கு அடுத்த அதிர்ச்சி, அங்கு கனகா வந்தது தான்! முன்பே தனது அக்கா, கனகாவை பள்ளியில் செய்த கலாய்ப்பை கேட்டு கேட்டு சிரித்தவள் ஆயிற்றே. நல்லா மாட்டிக் கொண்டோம் என புரிந்து கொண்டாள்.

சில நிமிடங்களில் அவள் நினைத்தது தப்பு என புரிந்த கொண்டாள். கனகாவவோ சற்று குள்ளம், எம்.ஏ., சேர்ந்த பெண்ணாக தெரியவில்லை. பி.ஏ. முதல் ஆண்டில் சேர்ந்துள்ளவர் என்று தான் பார்த்தவர்கள் நினைத்தனர்.

கனகா அந்த அறையில் நுழைந்தபோது நிமிர்ந்த பார்வையும் அஞ்சா நெஞ்சமுமாய் இருந்ததை கண்ட சீனியர்கள், ‘ஏய், எங்கே போய்ட்டு வர, இப்படிவா,’ என அழைக்க நிலைமையை புரிந்து கொண்ட கனகா வித்யாவை உற்றுப் பார்த்தபடி அந்த குழுமத்தை நோக்கி நடந்தாள். அவள் முகத்தில் எப்போதும் இருந்த புன்னகை மறைவதாக இல்லை.

அருகே வந்தவுடன் முதலில் கேட்கப்பட்டது, ‘என்ன புன்னகை அரசி என்று நினைக்கிறாயா’ என கேட்டபடி ஆடச் சொன்னார்கள்; பாடச் சொன்னார்கள். பிறகு கழுதை போல் கத்தவும் வைத்தார்கள். இந்த விண்ணப்பங்களுக்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கனகாவும் செய்து கொண்டு இருந்ததை வித்யா கவனித்தாள்.

சீனியர்கள் கவனம் முழுமையாக கனகா மேல் இருந்தது!

இப்படி பாட்டும் கும்மாளமும் தொடர, திடீர் என ஆசிரியை வந்து மேஜையை தட்ட எல்லோரும் அவர்கள் இடத்தில் அமர்ந்தனர். சீனியர்கள், தங்களுக்குள்ளும் சிரித்துக் கொண்டே, ஆசிரியரிடம் சென்று தங்கள் பாணியில் அறிமுகம் செய்து கொண்டு இருப்பதாக கூறியபடி வெளியேறினர்.

மேஜை மீது ஒரு காலில் நின்றபடி அபிநயம் பிடித்துக் கொண்டு இருந்த கனகாவோ, மெல்ல தரை இறங்கி சேரில் அமர்ந்து செருப்பை போட்டுக் கொண்டே ‘வித்யாவிடம் நல்ல ஜாலி, எங்க கிளாசில் எந்த சீனியரும் வருவதாக தெரியவில்லை. இப்படி ராகிங் இல்லைன்னா, முதல் நாள் வகுப்பே பிற்காலத்தில் மறந்து விடும்’ என்று கூறியபடி வெளியேற புறப்பட்டாள்.

எங்கம்மா போற என்று ஆசிரியை கனகாவை கேட்க அந்த சீனியர்கள் சற்றே நின்று நடப்பதை கவனிக்க ஆரம்பித்தனர்.

‘ஏய், நீ கனகா தானே. சென்ற முறை இந்த கல்லூரியில் நடந்த அனைத்து கல்லூரி போட்டியில் ஆங்கிலத்திலும் தமிழிலும் சூப்பரா திறமையை காட்டி பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் முதல் பரிசை தட்டிச் சென்றவள் ஆயிற்றே என வியந்து பாராட்டினார் ஆசிரியை.

ஆமாம் மிஸ், பாட்டுப் போட்டியிலும் கோலப் போட்டியிலும் கூட பரிசு வாங்கினேன் என கூற சீனியர்கள் அதிர்ந்தனர்.

இப்போது தான் புரிந்தது கனகா பிஜியில் சேர்ந்துள்ள சீனியர் என்று அப்போதே ‘அக்கா நீங்க ரொம்ப நல்லா பாடி காட்டீனிங்க’ என்று வழிந்தனர்.

கனகாவும் சிரித்தபடி வர இருக்கும் அனைத்துக் கல்லூரி போட்டிகளில் நான் பங்கேற்று வெற்றிக் கோப்பைகளை பெறப் போகிறேன். சீனியர்ஸ் நீங்களும் உங்க திறமைகளை மூடி வைத்துக் கொள்ளாமல் வெளியே கொண்டு வர இதுதான் சரியான நேரம் என்று கூற கனகாவை மறக்காம ‘நீட்’ பரீட்சை எழுதி ஆசிரிய பணிக்கு அழைத்தார் ஆசிரியை.

மெல்ல வித்யாவைச் சுட்டிக் காண்பித்து, மிஸ் அவ நல்லா வரைவா, நாங்க படிச்ச பள்ளியில் இவ ஓவியங்கள் மிக பிரபலம் . அவளிடம் நல்ல கேமராவும் இருந்ததால் இவளது புகைப்படங்களும் சூப்பராக இருக்கும் மிஸ். அதனால இனி வரும் போட்டிகளில் அவளது பெயரை வரைகலைக்கும் புகைப்பட போட்டிகளுக்கும் கொடுக்கலாம் என்றவுடன் ஆசிரியைக்கும் மகிழ்ச்சி; தங்கை வித்யாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

வித்யாவுக்கு தனது ஆற்றல்களை குடும்பத்தார் பெரியதாக நினைக்கவேயில்லையே என்று மனதில் பொருமிக் கொண்டு இருக்கையில் கனகாக்கா தன் கையை பிடித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் நிகழ்ச்சியை கல்லூரி வாழ்வின் முதல் நாளில் பெற்றதை பெரும் பாக்கியமாக நினைத்துப் பார்த்தாள்.

இந்த நட்பு அக்குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல்களை இணைக்கும் பாலமாக மாறியதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *