சிறுகதை

உறவும் மரமும் | மு.வெ.சம்பத்

நம்பி தான் வேலை பார்த்து வந்த கிராமப் பள்ளியிலிருந்து தன்னை விடுவிடுத்துக் கொண்டான்.

டவுன் பள்ளியில் வேலை பார்த்தால் கௌரவம் எனக் கருதி மிகவும் பிரயத்தனப்பட்டு டவுன் பள்ளியில் வேலையில் சேர்ந்தான். அப்பள்ளியில் நடக்கவிருக்கும் பல பள்ளிகள் மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் பேச்சுப் போட்டியின் ஏற்பாடுகளை நம்பியிடம் தலைமையாசிரியர் ஒப்படைத்தார்.

நம்பி சுற்றியுள்ள பள்ளிகளைத் தொடர்பு கொண்டு பேச்சுப் பற்றிய சுற்றறிக்கையை அனுப்பி பங்கேற்கும் பள்ளியின் பெயர், பங்கேற்கும் மாணவ மாணவியர் பெயர்கள் அடங்கிய பட்டியலை சேகரித்துத் தலைமையாசிரியரிடம் சமர்ப்பித்தான்.

போட்டி நடக்கும் நாளன்று நம்பி காலை 7 மணிக்கு பள்ளிக்கு வந்து தனது சக ஊழியர்களுடன் சேர்ந்து காலை 9 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செவ்வனே செய்து முடித்து, தனது கைக்கடியாரத்தைப் பார்த்தபோது மணி 8 என்று காட்டியது. அதைக் கண்டு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் சக ஊழியர்களை அழைத்து நம்பி சிற்றுண்டியை சாப்பிட வைத்தான்.

சரியாக 8.30 மணியளவில் நிறைய மாணவ மாணவியர்கள் அவர்கள் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உடன் வந்த வண்ணம் இருந்தனர். மற்ற பள்ளியாசிரியர், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியைகளையும் நம்பி அழைத்து சிற்றுண்டி சாப்பிட வைத்தான். பிறகு எல்லோரையும் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தான்.

விழா நேரமான காலை 9 மணியளவில் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த முக்கிய மானவர்கள் வந்து சேர்ந்தனர். அவரவர் இருக்கையில் அமர்த்தப்பட்டனர். தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. தலைமையாசிரியர் மற்றும் முக்கியமானவர் உரைகள் முடிந்த பின் பேச்சுப் போட்டி தொடங்கியது.

மாணவ மாணவியர்கள் தனது திறமைகளை தனது பேச்சால் வெளிப்படுத்தினர். ஒருவரை ஒருவர் மிஞ்சும் வண்ணம் போட்டி நகர்ந்தது.

உதயா என்ற பெண் தனது பேச்சை சுவாரசியமாகத் தொடங்கினாள். அவளது ஆழமான கருத்துக்கள் அரங்கையே அவள் பக்கம் இழுத்தது எனச் சொல்லலாம். மரம் தான் வாழும் வரை வேர், கிளை, இலை இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. வேர்கள் ஆழமாக பூமியின் கீழ் செல்லச் செல்ல மரம் உறுதியாகிறது. இலைகளின் நிழலில், பறவைகள் கூடு கட்டி தனக்கே உரித்தான குரலை அந்த மரத்தில் பரவ விட்டு மகிழ்வுடன் கழிக்கிறது. காய்ந்த இலைகள், உதிர்ந்த பூக்கள், கனிந்த கனிகள் மரத்தினடியிலே விழுந்து சில காலங்களில் அது மரத்திற்கே உரமாகிறது. மரப்பட்டைகள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மரத்தின் தண்டுப் பகுதி பல விதங்களில் மனிதருக்குப் பயன்படுகிறது. நிழல் தரும் மரம் சுற்றியுள்ளவர்கள் நினைவில் இடம் பிடித்து விடுகிறது. மரம் வெட்டப்பட்டால் அந்த இடம் வெற்றிடமாகி விடுவதோடு மட்டுமல்லாமல், மரத்தால் பயனடைந்தோர், பயனடையாதார் எல்லோரது உள்ளமும் பதை பதைப்பதோடு வருந்தவும் செய்கிறது.

நாம் பல வருடங்கள் ஊருக்கு வராமல் இருந்து ஊர் வந்தால் ஊரைச் சுற்றிப் பார்க்கையில் இங்கு அந்தக் காலத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் விழுதுகளை பிடித்துத் தொங்கி அதில் நாங்கள் விளையாடுவோம் என்று பெருமிதமாகக் கூறுவதில்லையா என்று கூறி விட்டு, மரம் இல்லாத இடத்தை நினைத்துக் கூட பார்க்க இயலாது என்று மரத்தின் சார்பான மேலும் சில கருத்துக்களை உதயா முன்வைத்தாள்.

பிறகு உறவுகள் பற்றி பேச ஆரம்பித்தாள். உறவுகள் வளரும் போது சுற்றம் சூழலுடன் சுகமான சூழலில் மலர்கிறது. தாய் தந்தையருடன் வளர்ந்த பிள்ளைகள் பின்னாளில் ஒன்றாக வாழ்வதில்லை. வேலை நிமித்தம், பொருளாதார மேன்மை, சொத்துப் பிரச்னை, விட்டுக் கொடுக்காத மனப் பாங்கு, பொறாமை போன்ற இன்னும் பல காரணங்களால் கூட்டுக் குடும்பம் சிதைந்து விடுகிறது. சுய நலம், சுய பரிசோதனையின்மை, தனது வளர்ச்சி என்ற காரணங்களால் தனது குடும்பமென தன்னிச்சையாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப்படுகிறது. உறவுகளிடையே இயற்கையாக அமைந்திருக்கும் வலைகள் அறுக்கப்பட்டு பிரிந்து வாழ்வதே சொர்க்கமென்று ஆகியுள்ளது. மனிதன் தான் ஈட்டிய பொருள், புகழ் போன்றவைகளாலே மதிப்பிடப் படுகிறான். வளர்ந்த மக்கள் வளர்த்து விட்டவர்களை மறந்து விடுகின்றனர். தனது இசைவு, தகுதிக்கேற்ப நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். தனது சமூகம், தனது மக்கள் இவர்களை சார்ந்து வாழ்வது, அணைத்துச் செல்வது எல்லாம் பழங்கதையாகப் போகிவிட்டது .

குடும்ப விழாவில் குடும்பக் கிளைகள் காண்பது அரிதாகி வருகிறது. அறிமுகம் ஒரு சம்பிரதாயமாகவே நடக்கிறது. வரும் சந்ததியினருக்கு உறவின்முறை அறிமுகம் இல்லாமலே ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே வாழ்க்கை செல்கிறது. பணத்திற்காகவும் குடும்ப உறவுகளை மறந்து வாழும் தனி மனித வாழ்க்கையும் இனிமையானதா என்று யோசிக்க வேண்டும். மனித சமுதாயம் தான் வாழும் வாழ்க்கை நிலை பற்றி யோசித்து மாற்றிக் கொள்ளாவிடில் உறவின் அர்த்தங்கள், வாழ்க்கை நெறிமுறைகள் இன்பமயமாக செல்லாமல் இயந்திரத்தனமாகவே அமைந்து விடுவதோடு மட்டுமல்லாமல் பட்டுப்போன மரம் போல் ஆகி விடும் என்று கூறி பேச்சை முடித்தவுடன் எழுந்த கைத்தட்டல் ஓசை அடங்க வெகு நேரமானது.

பரிசளிப்பு மற்றும் விழா முடிந்தவுடன் நம்பியை அழைத்து தலைமையாசிரியர் நன்றி கூறுயதும் நம்பி தனக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டுமென விண்ணப்பம் செய்தான்.

தலைமையாசிரியர் சரியென்று கூறியதும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பி ஊருக்குச் சென்றான்.

தான் வேலை பார்த்த பழைய பள்ளியின் தலைமையாசிரியரைச் சந்தித்து நான் நமது பள்ளியிலேயே பணியைத் தொடர விரும்புவதாகக் கூறினான். தலைமையாசிரியரும் உனது பணியிடம் காலியாகத்தான் உள்ளது. நீ பணியில் சேரலாம் என்றார்.

இரண்டு நாளில் சேருவதாக் கூறி விட்டு டவுன் பள்ளிக்கு வந்து தான் வேலை செய்யும் பள்ளியின் தலைமையாசிரியரைச் சந்தித்து நான் எனது சமூகம் மற்றும் மக்களுடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன். எங்கள் ஊர்ப் பள்ளியிலேயே பணி செய்வதாக முடிவு செய்துள்ளேன். என்னை விடுவியுங்கள் என்றான்.

ஏன் இந்த மாற்றம் என தலைமையாசிரியர் வினவினார்.

உதயாவின் பேச்சு தான் என்னை மாற்றியது என்று கூறினான்.

சிரித்த தலைமையாசிரியர் விடுப்புக் கடிதத்தைத் தர நன்றி கூறி தனது கிராமத்தை நோக்கி பயணம் மேற்கொண்டான்.

உறவுகள் உன்னதமானது உதாசீனம் செய்யக் கூடாது,

இனி எந்தப் பிறவியில் நாம் சேர்வோம் என்பதற்கு உத்தரவாதமில்லை என்பதை உணர்ந்த நம்பி தனது சொந்தங்களைக் காண விரைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *