சிறுகதை

உறவுச் சிக்கல் – ராஜா செல்லமுத்து

அப்படி இப்படி என்று ரேணுகா குடும்பமும், கோமதி குடும்பமும் ஒன்றுக்கு இரண்டாய் பேசிப்பேசி ஊர்க்காரர்களும் ஒத்து ஊத நன்றாக இருந்த குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்ததுபோல் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

இரண்டு குடும்பங்களை இணைக்கும் முயற்சியை எத்தனையோ முறை எடுத்துப் பார்த்தும் ஒன்றும் இல்லாமல் போனது. விதி விட்ட வழி என்று இரண்டு குடும்பங்களும் எலியும் பூனையுமாக இருந்தனர். ரேணுகா, வடக்கே போனால் கோமதி, தெற்கே போவாள். திசைகள் கூட எதிரெதிராய் இருப்பதாகவே இருவருக்கும் தோன்றும். இரண்டு பேரும் உடன் பிறந்த சகோதரிகள் தான். என்றாலும், ஆஸ்தி, அந்தஸ்து இதில் வேறுபாடு ஒலித்துக்கொண்டே இருக்கும்.

கோமதி நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்க. ஒட்டிப் பிறந்த உடன் பிறப்புக. ஆனா ரெண்டு பேரும் எலியும் பூனையும் மாதிரி இருக்கிறது நல்லாவா இருக்கு, இப்படி ஈரமுள்ள ஒருத்தி கேட்டபோது, கோமதிக்கு கோபம் வந்தது.

ஏன் அவ பேச மாட்டாளா? நான் எவ்வளவு நாளைக்கு மழும் பட்டையாவே பேசிக்கிட்டிருக்கிறது. அவ பெரிய ராசாமக பேசமாட்டா. அவ பேசினா பேசட்டும்.நான் பேசமாட்டேன் என்று ஒரே முடிவாக சொன்னாள் கோமதி. இதுபற்றி ரேணுகாவிடம் கேட்டபோது,

நான்தான் முதன் முதலாக பிறந்தவ. என்னாேட எச்சிப் பால குடிச்சு வளந்தவ கோமதி. எனக்கு எப்படி இருக்கும்? நான் பேசமாட்டேன் என்று முனைப்பில் ரொம்பவே முறுக்கி பேசினாள் ரேணுகா.

இரண்டு பேரையும் இணைப்பது இந்தியா, பாகிஸ்தான் இணைப்பது போன்றது எனறு உறவினர்கள் விட்டுவிட்டனர்.

இரண்டு குடும்பமும் தெருக்களில் பார்த்தால் முகத்தை திருப்பிக் கொண்டு போவதும், இவர்களின் குழந்தைகள் கூட பேசாமல் இருப்பதும் உறவினர்களுக்கு ரொம்பேவே வருத்தம் வரச் செய்தது.

அந்த நண்டு இருக்காளே ஹர்ஷிதா. அவ கூட எங்க கூட பேசுறதில்லை. அவளுக்கு அஞ்சு வயசு கூட இன்னும் ஆகல அதுக்குள்ள எவ்வளவு கவுரவம். எவ்வளவு மரியாதை எப்படி இருக்காங்க…. அவங்களா பேசுனா பேசட்டும் இல்ல அது பேசமாட்டோம் என்று ரேணுகா சொல்ல

எம்புள்ள மட்டும் தான் அப்படி இருக்கா அவளோட மகன் மித்ரன் அவன் கூட எங்க கூட பேசுறதில்லை.பொடிப்பயலே எங்க கூட பேசமாட்டான், பார்த்தா அந்த பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு போயிர்றான். நாங்க வேணும்னே பேச மாட்டோம் .அவங்க வேணும்னா எங்க கூட பேசட்டும்என்று கோமதியும் முறுக்கிக் கொண்டே பேசினாள்.

இவங்க ரெண்டு பேரையும் சேர்க்கணும்னு நினைச்சா, நாம தான் கிறுக்கு பிடித்து போகனும் போல என்று ஒட்ட வைக்க வந்த கூட்டம் ஒதுங்கி நின்றது. இப்படி எதிரும் புதிருமாய் இருந்த இரண்டு அக்கா தங்கைகளும் ஒரே இடத்தில் சீட்டுப் போட்டிருந்தனர். வழக்கம் போலவே அந்த மாதம் சீட்டு குலுக்க முன்வந்தனர்.

எனக்கு பணம் வேணும்? என்று ஒருத்தி கேட்க

அப்படி எல்லாம் தர முடியாது சீட்டு குலுக்கல்ல தான் தரமுடியும். உன்னோட இஷ்டத்துக்கு எல்லாம் பணம் தரமுடியாது என்று ரொம்பவே கடுமையாகப் பேசினான் சீட்டு சேகரிப்பவர்.

வழக்கம்போல இந்த மாதமும் ஒன்று கூடினர்.

சீட்டு குலுக்கலாமா? என்று சீட்டு பிடித்தவர் கேட்க

சரி குலுக்கலாம் என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்ல ,சேர்ந்து இருந்த அத்தனை பேர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டு சீட்டு எடுக்கச் சொல்லலாம் என்ற யோசனையில் நின்ற போது…..

அங்கே வந்த கோமதியின் மகள் ஹர்ஷிதாவை சீட்டு எடுக்கச் சொன்னார்கள். திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தவள் ஒரு சீட்டை எடுத்து சீட்டை எடுத்து சீட்டுக்கார் இடம் கொடுக்க அதைப் பிரித்துப் பார்த்த சீட்டுக்காரருக்கு ஜிவ்வென்று ஏறியது.

என்னய்யா முழிக்கிற? என்று ஒருவர் கேட்க, நீங்களே பாருங்க என்று சீட்டை ஒருவர் கையில் கொடுக்க

சீட்டு வாங்கி பார்த்தவருக்கும் என்னவோ ஆனது.

என்ன எல்லாரும் திருதிருன்னு முழிக்கிறிங்க ?

என்று கோமதி வாங்கி அந்த சீட்டைப் பார்த்தபாேது,

அவளுக்கும் என்னவோ போலிருந்தது. வாங்கிய சீட்டை கொடுத்துவிட்டு கூட்டத்தை விட்டு விட்டு நகர்ந்தாள். கோமதி, சீட்டு விழுந்திருக்கிறது ரேணுகாவுக்கு .அவங்களோட மகன் மித்ரன் பேரத்தான் கோமதி மகள் எடுத்து கொடுத்துட்டு போயிருக்கிறாள்”என்று சீட்டுக்கார் என்று சொல்ல,

என்னதான் இருந்தாலும் ரத்த சொந்தம் விட்டுப் போகுமா? எவ்வளவு சீட்டில் கரெக்ட்டா அவங்க பெரியம்மா மகன் பேர எடுத்துக் கொடுத்துட்டு போயிருக்கா பாரு, என்று கூட்டம் பேச,

அதுவரையில் கோமதியின் மீதிருந்த வெறுப்பும் வெறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது ரேணுகாவுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *