சிறுகதை

உறவுக்குடில் | கரூர் அ. செல்வராஜ்

வாடகை வீட்டில் 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர் ரமேஷ்குமார் – ராதிகா தம்பதியினர். அவர்களுடன் ரமேஷ்குமாரின் அம்மா சரஸ்வதி அம்மாவும் துணையாக வாழ்ந்து வந்தார்.

தாய் சொல்லைத் தட்டாத தனயனாகவும் தாய்க்குப் பின் தாரம் என்பதை அறிந்தவனாகவும் வாழ்க்கையை நடத்தி வந்த ரமேஷ்குமாருக்கு சொந்த வீடு கட்டி சுதந்திரமாக வாழ்ந்திட வேண்டுமென்ற கனவு இருந்தது.

தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த அவன் தனது சேமிப்பிலிருந்து வாங்கிப் போட்டிருந்த புறநகர்ப் பகுதி வீட்டு மனையில் வங்கிக் கடன் மூலம் தனது கனவு இல்லைத்தைக் கட்ட ஆரம்பித்தான். வீடு கட்டும் நேரத்தில் தோன்றிய பணத் தட்டுப்பாடுகளைச் சமாளித்து வீடு கட்டும் வேலையை முடித்து புதுமனை புகுவிழாவுக்கு ஒரு நல்ல நாளையும் தேர்வு செய்தான்.

புதுமனை புகுவிழாவுக்கான அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அழைப்பிதழை யார் யாருக்கு கொடுக்கலாம் என்பதை ஒரு பட்டியல் மூலம் தயார்செய்து வைத்திருந்தான். அந்தப் பெயர்ப் பட்டியலை மனைவி ராதிகாவிடம் கொடுத்து பேசினான்.

‘‘ராதிகா!’’

‘என்னங்க’..?

‘நம்ம வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு யார், யாருக்கு அழைப்புக் கொடுக்கலாம்னு ஒரு லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன். அந்த லிஸ்டிலே இருக்கிற பெயர்களை நீயும் ஒரு தடவை நல்லாப் படிச்சுப் பாத்திடு, அப்புறம் அவுங்க பேரு இல்லே… இவுங்க பேரு இல்லேன்னு எம் மேலே குறை சொல்லாதே’’… என்று சொல்லி லிஸ்டை மனைவி ராதிகாவிடம் கொடுத்தான் ரமேஷ்குமார்.

கணவனின் கையிலிருந்து வாங்கிய பெயர் பட்டியலை மனதிற்குள் ஒரு முறை படித்து முடித்து ராதிகா தன் கணவனுடன் பேசினாள்.

‘என்னங்க?’

‘சொல்லு ராதிகா’

‘நீங்க எழுதியிருக்கிற லிஸ்டிலே எனக்குப் பிடிக்காத மனுசங்களுடைய பேர்களை எல்லாம் எழுதி வைச்சிருக்கீங்க. அது எனக்குப் புடிக்கலே. அந்த மனுசங்க எல்லாம் நம்ம வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வரவே கூடாதுங்க’ என்று கோபப்பட்டாள் ராதிகா.

மனைவி ராதிகாவின் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில் இறங்கிய ரமேஷ்குமார் தனது மனைவியிடம் காரணம் கேட்கும் வகையில் கனிவாய்ப் பேசினான்.

‘ராதிகா!’

‘சொல்லுங்க’

‘நம்ம வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வரவே கூடாதுன்னு நீ நினைக்கிறவங்க யாருன்னு சொன்னா அதுக்குப் பதில் சொல்ல எனக்கு வசதியாக இருக்கும்மா என்றான்’ ரமேஷ்குமார்.

கணவன் கேட்ட கேள்விக்கு விரிவான பதிலைச் சொல்ல ஆரம்பித்தாள் ராதிகா. ‘நமக்கு வீட்டு மனையை கிரையம் செய்து தராமல் ஒரு வருஷத்துக்கு மேலே தாமதம் செய்தவரு விழாவுக்கு வரணுமா? வங்கிக் கடனைத் தரமுடியாதுன்னு சொன்ன தனியார் வங்கி மேனேஜர் நம்ம வீட்டு விழாவுக்கு வரணுமா? பணப் பற்றாக் குறையினாலே உதவி கேட்டு அதைச் செய்ய மறுத்த உங்க சித்தப்பா நம்ம வீட்டு விழாவுக்கு வரணுமா? வீடு கட்டும்போது நமக்குத் தேவையான சின்னச்சின்ன பொருள் உதவிகளைச் செய்ய மறுத்த எதிர் வீட்டுக்காரர் நம்ம வீட்டு விழாவுக்கு வரணுமா? ஜல்லியை இங்கே கொட்டாதே. சிமெண்ட் மூட்டையை இங்க போடாதே, செங்கல்லை இங்கே போடாதே கம்பிகளை இங்கே வளைக்காதேன்னு சொன்ன காலி மனைக்கு சொந்தக்காரர் கந்தசாமி நம்ம வீட்டுக்கு வந்து விருந்துச் சோறு சாப்பிடணுமா? என்று கேட்டாள் ராதிகா.

மனைவி ராதிகாவின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தான். ‘ராதிகா! உன்னைப் பொறுத்த வரைக்கும் உன் கோபம் நியாயமானது. ஆனா, எனக்கு அது சரின்னு தோணலே, விளக்கம் சொல்றேன் கேளும்மா.

‘புது வீடு கட்ட ஆரம்பிச்சது நம்ம முயற்சின்னு சொல்லலாம். அந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு ஆண்டவன் உதவி செஞ்சிருக்காரு. நம்முடைய முயற்சியை, வளர்ச்சியை சில மனிதர்கள் தெரிஞ்சோ, தெரியாமலோ தடை செஞ்சிருக்கலாம். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவதுதான் நமது மனித இனத்துக்குப் பெருமை. அதை சாதனைன்னும் சொல்லலாம். நம்ம வீட்டு விழாவுக்கு நமக்கு உதவி செஞ்சவங்க மட்டும் வந்தாப் போதாது. உதவி செய்ய மறுத்தவங்க, உதவி கிடைக்கத் தடை செஞ்சவங்க, பணமிருந்தும் உதவி செய்ய மனமில்லாத உறவினர்கள் இப்படி எல்லோரும் வரணும், வாழ்த்தணும். பகைக்கிற மக்களையும் நேசித்து வாழறதுக்காக நாம் நம்ம புது வீட்டைக் கட்டி புது மனை விழா நடத்தறோம். அதனாலே நீ உன் மனசை மாத்திக்க ராதிகா. புது வீட்டிலே எல்லா உறவுகளும் ஒன்று சேரணும். உறவுகள் எல்லாம் புதுப்பிக்கப்படணும். இந்த நோக்கம் நிறைவேறத்தான் நம்ம புது வீட்டுக்கு ‘உறவுக்குடில்’ அப்படீங்கிற பேரை வச்சிருக்கேன்’ என்றான் ரமேஷ்குமார்.

கணவனின் புதிய சிந்தனையை மதித்து நடந்தாள் ராதிகா.

அன்றிலிருந்து அவளது குடும்பம் உறவுகளை ஒன்றிணைப்பதில் வெற்றி கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *