சிறுகதை

உறவின் நிழல் | ப.முகமது ஜமிலுதீன்

குணக்குன்று என்ற பலராலும் பாராட்டப்பட்ட ஒழுக்கசீலர் – ஊரின் பிரபல பள்ளியின் தலைமையாசிரியர் – நல்லாசிரியர் விருதும் பெற்றவர் – லோகநாதன். இவர் ஓய்வு பெற்ற சில மாதங்களில் கூடா நட்பினால் சேற்றில் விழுந்த மாதிரி குடிப்பழக்கத்திற்கு மாறிவிட்டார். இதை அறிந்த சுற்றத்தார் வியப்படைந்தார்கள். உறவினர்கள் வேதனை உற்றார்கள். இவரிடம் படித்த மாணவிகளோ எப்.எம். ரேடியோ ரேஞ்சுக்கு ‘எப்படி இருந்த வாத்தியார் இப்படி ஆயிட்டார்’ என்று மாஜி குணக்குன்றின் குடிசெய்தியை ஊர் முழுதும் பரப்பினார்கள்.

லோகநாதன் மனைவி சரஸ்வதியோ கணவரின் குணக்கேட்டினை அறிந்த மறுகணமே அலறிப்போய் பித்து பிடித்தவள் போலாகி விட்டார்.

அண்ணல் காந்தியடிகளின் உண்மை பக்தரான சரஸ்வதியின் தந்தை குணாளன் அந்த நாளில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறையில் வதைப்பட்டவர். அப்பேற்பட்ட மது எதிர்ப்பாளரின் மருமகன் மதுவாதியாகி விட்டாரே என்று நினைக்க நினைக்க துயரத்தின் உயரத்துக்கே சென்று விட்டார் சரஸ்வதி. மது அருந்துபவர் வீட்டில் தம்மால் ஒரு கணமும் இருக்க முடியாதென்று புரட்சி முடிவெடுத்து உறவை உதறித்தள்ளி, தனக்கென ஒரு எதிர்கால திட்டத்தோடு தன் தம்பி விசுவநாதன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கல்யாணத்திற்கு முன் சரஸ்வதி வக்கீலாக ஊரார் மெச்ச பிரகாசித்தவர். திருமணமானபின் ஆஸ்துமா வந்துவிட்டதால் வக்கீல் பணியை நிறுத்திவிட்டார். இப்போது உடல் உபாதையை பொருட்படுத்தாமல் அப்பணியினை தொடர்ந்து தனி வீடெடுத்து சுயமாக வாழ ஆரம்பித்து விட்டார். மருமகள் பூங்கோதையும் பேத்தி வர்ஷாவும் வந்து வீடு திரும்பும்படி கெஞ்சியும் சரஸ்வதி கேட்கவில்லை.

மகன் ஈஸ்வரன் பேருக்குக் கூட தாயை பார்க்க போகவில்லை. ஏனெனில் அம்மா வீட்டில் இல்லாமல் இருப்பதையே அவன் உள்ளூர பெரிதும் விரும்பினான். அதற்கு காரணமும் உண்டு.

வக்கீலாக முன்பு இருந்த போது சரஸ்வதி ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் தலைவியாக இருந்து தீவிரமாக செயல்பட்டவர். அதனால் அரசுப்பணியில் தாறுமாறாக லஞ்சம் கிடைக்கும் இலாகாவில் இருக்கும் தன் மகன் ஈஸ்வரன் லஞ்சம் வாங்கவே கூடாது என்று தினம் தினம் அவனை தவறாமல் கடுமையாக கண்டிப்பார். தப்பு செய்கிறானா என்று ரகசியமாக கண்காணிக்கவும் செய்தார். அம்மாவுக்கு பயந்து அவன் இத்தனை நாள் பல்லைக்கடித்துக் கொண்டு லஞ்சம் வாங்காமல் கட்டுப்பாட்டோடு இருந்தான். அவனின் மகள் வர்ஷாவை அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க ஈஸ்வரன் மிக்க ஆசைப்பட்டதால் அவனுக்கு பணம் அதிகமாகவும் அவசியமாகவும் தேவைப்பட்டது. அம்மாவின் கண்காணிப்பால் லஞ்சம் வாங்க விரும்பியும் வாங்காமல் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது அவனுக்கு. கண்டிக்கும் அம்மா இப்போது வீட்டில் இல்லாததால் பஞ்சமில்லாமல் லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டான்.

லோகநாதனுக்கும் மனைவி வீட்டை விட்டுப் போனது ஒரு வகையில் அவமானமாக இருந்தாலும் இன்னொரு வகையில் மகிழ்ச்சி தான். மனைவிக்கு பயந்து பயந்து குடிக்கும் சிரமம் இப்போது அவனுக்கு இல்லை. எந்தவித மனஉளச்சலும் இல்லாமல் வீட்டிலேயே ஹாயாக உட்கார்ந்து ஊத்திக்குடிக்க ஆரம்பித்துவிட்டார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அப்பா விஸ்கி பாட்டிலில் விட்டு வைத்த பாக்கியை எடுத்து ஒரே மடக்கில் ஈஸ்வரனும் குடிக்க ஆரம்பித்தான். அவன் மனைவி எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. மாமியாரிடம் போய் முறையிட்டாள். வீட்டில் இல்லாத அவளால் என்ன செய்ய முடியும்? இரவு முழுவதும் அழத்தான் முடிந்தது. அதோடு மகன் லஞ்சம் வாங்கத் தொடங்கி விட்டான் என்று தெரிந்ததும் அவளின் வேதனை இன்னமும் கூர்மையானது.

ஒருநாள் இரவு அளவுக்கு மீறிக் குடித்து சாக்கடையில் தவறி விழுந்து லோகநாதன் இறந்துவிட்டார்.

கணவன் இறந்து விட்டார் என்று அறிந்ததும் அழுது புரண்ட சரஸ்வதி அந்நிலையிலும் லஞ்சத்தில் மூழ்கிவிட்ட குடிகார மகன் வீட்டிற்கு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். லோகநாதன் உடலை தன் தம்பியின் வீட்டிற்கே கொண்டு வரச்சொல்லி இறுதி காரியங்களை முடித்து விட்டார்.

அப்பா இறந்த சாக்கில் எங்கே அம்மா மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவாளோ என்று அஞ்சிக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு அவள் வராதது அளவு கடந்த ஆறுதலை அளித்தது.

அவன் கண்மூடித்தனமாக வாங்கிய லஞ்சப்பணம் ஈஸ்வரன் வீட்டின் எல்லா அலமாரிகளையும் நிரப்பிவிட்டது. பணம் கொட்டும் மகிழ்ச்சியில் அதனை கொண்டாட தினசரி இரவு வீட்டின் மொட்டை மாடியில் மது பார்ட்டி வைத்து நண்பர்களுடன் கூத்தடிக்க ஆரம்பித்து விட்டான் ஈஸ்வரன்.

அவன் முதலில் குடிக்க ஆரம்பித்து பின் லஞ்சம் வாங்கவும் ஆரம்பித்த போது அவற்றை தவிர்க்குமாறு தினசரி அவனுடன் கடுமையான வாக்குவாதம் புரிந்து சண்டை போடுவாள் மனைவி பூங்கோதை. அவன் திருந்தவே மாட்டான் என்று தெரிந்ததும் முகத்தை கோபமாக்கி கொண்டு அவனுடன் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விட்டாள்.

அவனோ அவள் எதிர்ப்பு நடவடிக்கைகள் எதையுமே கண்டு கொள்ளவில்லை. பணம், மது என்ற குறிக்கோள்களுடன் வெறிபிடித்து அலைந்தான். சில சமயங்களில் இரவு பார்ட்டி முடிந்ததும் அவன் விபச்சார அழகிகளை தேடி லாட்ஜ்களுக்கு போனது தான் கொடுமையிலும் கொடுமை. அனாமத்துப் பணம் குவிந்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்து குணச் சீரழிவுகளும் கூடிக்கொண்டு தானே இருக்கும்!

வழக்கத்திற்கு மாறாக ஒருநாள் காலை எட்டு மணிக்கு ஒரு லஞ்ச திட்டத்துடன் ஈஸ்வரன் ஆபீசுக்கு கிளம்பினான். ஒரு வியாபாரியை காலை 8 மணிக்கு 7 ஆயிரம் ரூபாயுடன் ஆபீசுக்கு அவன் வரச்சொல்லி இருந்தான். சரியாக 8 மணிக்கு அங்கு வந்து காத்திருந்த வியாபாரி, ஈஸ்வரன் எதிர்பார்த்ததை விட அதிகமான லஞ்சமாக ரூ. 10 ஆயிரம் கொடுத்து விட்டு அவருக்கு தேவையான உத்திரவை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். லஞ்சப்பணத்தால் ஈஸ்வரன் பேண்ட் பை வீங்கி விட்டதால் அவனுக்கு ஏக ஜாலி. அதே நேரத்தில் அவன் கண்டிப்பாக அப்போது செய்ய வேண்டியதை பேராசை காரணமாக தவிர்த்துவிட்டான். மகிழ்ச்சி மூடில் சீட்டியடித்தவாறே எந்தெந்த கோப்பு மூலம் எவ்வளவு எவ்வளவு லஞ்சம் அதிகம் பெறலாம் என்ற ஆர்வத்துடன் அன்றைய ஆபீஸ் வேலையை சுறுசுறுப்பாக ஆரம்பித்தான்.அவனுக்கு பணம் சேரச்சேர பணத்தின் மீது பேராசையும் கூடியது.

அலுவலக பணியாளர்கள் யாரும் எதிர்பாராதவிதமாக அன்று, சரியாக பதினொரு மணிக்கு விஜிலென்ஸ் பிரிவைச் சேர்ந்த சாதா உடை போலீசார் 6 பேர் ஆபீசுக்குள் நுழைந்தனர். அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பைகளில் இருக்கும் பணம் முழுவதும் எடுத்து அங்கிருந்த ஒரு மேஜை ஒன்றின் மேல் வைக்குமாறு அதட்டலாக சொன்னார். விஜிலென்ஸ் டி.எஸ்.பி. முகுந்தராஜ். பயம் நெஞ்சை அழுத்த ஒவ்வொருவராக பணத்தை எடுத்து மெத்த பணிவுடன் டி.எஸ்.பி. முன் வைத்தனர். அவ்வாறு செய்தும் போலீசார் அலுவலர்களின் பைகளை சோதித்துப் பார்த்த பிறகே அலுவலர்களை இருக்கைகளுக்கு அனுப்பினர். விவரமாக எல்லோரும் 50, 60 ரூபாய்கள் தான் பைகளில் வைத்திருந்தார்கள். அப்பப்போ வருகிற லஞ்சத்தை பக்கத்து கடைகளுக்கு உடனுக்குடன் அனுப்பி விடும் கில்லாடிகள் அவர்கள். ஆயிரம் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தினாலும் அதிலிருந்தும் தப்பிக்க வழி கண்டுபிடித்து விடுவார்களே!

லஞ்சப்பணம் 10 ஆயிரம் ஈஸ்வரனுக்கு வந்ததும் அவன் அதைப் பத்திரப்படுத்த தெரு முனையிலிருக்கும் அலங்கார் ஸ்டோர்சில் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவன் அதை செய்யவில்லை. அதிகப்பணம் வந்த பேராசையால் அந்த கடைக்காரனுக்கு ஏன் 20 சதவிகிதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று அங்கு கொடுக்கவில்லை. அதனால் ஈஸ்வரனிடம் தான் பணம் 10 ஆயிரம் இருந்தது. வசமாக சிக்கிக் கொண்டான்.

எப்படி இந்த பணம் வந்தது என்ற டி.எஸ்.பி.யின் கடுமையான கேள்விக்கு ஈஸ்வரனால் பதில் சொல்ல முடியவில்லை. கோழி திருடிச் சிக்கியவன் போல விழித்தான். பட்டென ஈஸ்வரன் கையை இரும்புப் பிடியாக பிடித்த டி.எஸ்.பி. அவனை இழுத்துச் செல்லாத குறையாக ஆபீசின் மூத்த அதிகாரி முன் நிறுத்தினார். துறைரீதியான கடுமையான நடவடிக்கைகளை ஈஸ்வரன் மீது எடுக்கச்சொல்லி விட்டு அனுசரிக்க வேண்டிய மற்ற நடைமுறைகளை முடித்துவிட்டு டி.எஸ்.பி. முகுந்தராஜ் போலீசார் புடைசூழ சென்றுவிட்டார்.

சம்பவம் நடந்த பத்தே நிமிடத்தில் ஏன் உம்மை டிஸ்மிஸ் செய்யக்கூடாது என்ற விளக்கம் கேட்கும் மெமோ ஒன்று இவனிடம் கொடுக்கப்பட்டு ஈஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டான்.

சோகமாக அவன் வீட்டை அடைந்ததும் வேறொரு பயம் அவன் மனதை கவ்வியது. எங்கே லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டிற்கு ரெய்டு வந்து விடுவார்களோ என்ற பயம். சட்டென மனைவி மற்றும் மகளின் நகைகளையும் வீட்டில் கத்தை கத்தையாக மறைத்து வைத்திருந்த லஞ்சப் பணம் எல்லாவற்றையும் சூட்கேஸ்களில் திணித்து ஆட்டோ பிடித்து ஆத்ம நண்பன் முருகேசனிடம் சேர்ப்பித்து விட்டு வெறுங்கையாக வீட்டிற்கு திரும்பினான் ஈஸ்வரன்.

அவன் பயந்தது போல் போலீசார் யாரும் வரவில்லை. ஆனால், “நீர் கொடுத்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை” என்ற வாசகத்துடன் கூடிய டிஸ்மிஸ் உத்திரவுதான் வந்தது.

நான்கைந்து நாளில் கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட ஆத்ம நண்பன் முருகேசனிடமிருந்து பணம் வாங்கி வரலாம் என்று புறப்பட்டான். முருகேசன் பணம் மற்றும் நகைகள் நிரம்பிய சூட்கேஸ்களோடு மாயமாகிவிட்டான்.

நடைப்பிணம் போல் வீட்டை அடைந்தான் ஈஸ்வரன். சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத நிலை. எங்கும் போய் அவனால் இப்போது கடன் வாங்க முடியாது. மது பார்ட்டி வைத்து இரவெல்லாம் இவன் நண்பர்களோடு கூத்தடித்ததில் தெருக்காரர்கள் எல்லோரும் இவன் மேல் கடுங்கோபத்துடன் இருந்தார்கள். அவர்களிடம் கடன் கேட்டால் நிச்சயம் பணம் கிடைக்காது. அறைதான் கிடைக்கும். உத்தமி தாயை இவன் உதாசீனப்படுத்தியதால் உறவினர்கள் இவனுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். கூட வேலை பார்த்த அலுவலர்களோ விஜிலென்ஸில் சிக்கிய இவனைக் கண்டதும் தலையை கீழே போட்டவாறு வேக நடையில் விரைந்து மறைந்தார்கள்.

ஒரு பாவமும் செய்யாத மகள் வர்ஷாவும் மனைவி பூங்கோதையும் வீட்டுத் தட்டுமுட்டு சாமான்களை விற்றுத்தான் பசியாற வேண்டிய தங்களின் பரிதாப நிலையை பொறுத்துக் கொள்ள முடியாமல் சோகத்தின் மறு உருவங்களாக கண்களில் நீர் மல்க உட்கார்ந்து இருந்தனர். அந்த கண்ணீர் காட்சியை காண சகிக்காத ஈஸ்வரன் திடீரென குடும்பத்துடன் தற்கொலை செய்யும் விபரீத முடிவுக்கு வந்தான். இதை எப்படி அவர்களிடம் சொல்வது என்று அவன் மனம் தவித்தது. வீடெங்கிலும் ஒரு மயான அமைதி.

அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வெளியே இருந்து பூங்கோதையை அழைக்கும் சத்தம் கேட்டது. அந்தக் குரலை உடன் புரிந்த கொண்ட பூங்கோதை கண்களை சேலையால் துடைத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

வக்கீல் உடையில் அம்மா சரஸ்வதி ஒரு மஞ்சள் பையுடன் நின்று கொண்டிருந்தார். “உள்ளே வாங்க அத்தை” என்று பாசத்துடன் மாமியாரை அழைத்தாள் மருமகள்.

“நேர்மைக்கு உதாரணமாக இருந்த என் அப்பா எனக்கு தானமா கொடுத்த இந்த வீட்டில் மதுவும் லஞ்சப் பணமும் ருத்ரதாண்டவமாடியதற்கு பின்னாலே எப்படிமா இந்த வீட்டில் நான் காலடி எடுத்து வைக்கமுடியும்? நீ வெளியே வாம்மா” என்றார் சரஸ்வதி விரக்தியுடன்.

இதைக் கேட்டதும் விருட்டென வீட்டுக்கு வெளியே வந்து மாமியார் முன் அடக்கமாக நின்றாள் பூங்கோதை.

தன் கையில் வைத்திருந்த மஞ்சள் பையை அவளிடம் கொடுத்த சரஸ்வதி, “தலைமை ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்று அவர் இறந்ததால் எனக்கு வரவேண்டிய குடும்ப பென்ஷன் தொகை ஆறு மாசத்துக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் இன்னிக்கு தான் எனக்கு கிடைச்சது. அது இந்தப் பையிலே இருக்கு. இதை வச்சு நீயே செலவு செஞ்சு குடும்பத்தை நடத்து. மாசாமாசம் என் பேத்தியை என் சட்ட ஆபீசுக்கு அனுப்பி குடும்ப பென்சன் தொகையை வாங்கிக்கோ” என்று கூறிவிட்டு விருட்டென புறப்பட்டார் சரஸ்வதி.

தன் தாயின் லட்சியங்களை உதாசீனப்படுத்தியதால் இன்று அவமானப்பட்டு கிடக்கும் ஈஸ்வரன் உத்தமத் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க ஓடினான். ஆனால் அவரோ வேகநடையில் வெகுதூரம் சென்று கூட்டத்தாரோடு ஒன்றிவிட்டார்.

ஏமாற்றத்துடன் திரும்பிய அவன் …..

நேர்மைக்கு உதாரணமாக வாழும் தன் உத்தமத் தாயின் வழியில் அவர் நிழலில் இனி நேர்மையாக புதிய மனிதனாக வாழ்வது என்று முடிவெடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *