வாழ்வியல்

உறக்கம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன–1

நம்முடைய இயற்கையின் அமைப்பில் சூரியனும் சந்திரனும் பகல்-இரவு என்ற சுழற்சியை சீராக செயல்படுத்துவது போல, நம்முடைய உடலிலும் செயல்களை சீராக்கும் ‘Circadian Clock’ என்ற ஒரு கடிகாரம் மூளையில் செயல்படுகிறது. அந்த அக சுழற்சி, சரியாக இயங்குவதற்கு ஆரோக்கியமான ஆழமான உறக்கம் மிக முக்கியம். நம் உடலில் உள்ள பல்வேறு ஹார்மோன்கள் சரியாக சுரப்பதற்கு, அதுவே அடிப்படை. சரியாக தூங்கவில்லை என்றால் அந்த நாளில் நம்முடைய செயல்திறன் குறைவதை நாம் உணர்ந்திருப்போம்.

இரவில் தூங்காமல், அதை ஈடுகட்ட பகலில் தூங்குவது இன்று சகஜமாக காணும் சூழலே. எத்தனை மணி நேரம் பகலில் தூங்கினாலும் அது இரவு தூக்கத்திற்கு ஈடாகாது. கால் சென்டர்களில் இரவு நேரம் வேலை செய்பவர்கள் பொழுது போக்கிற்காக இரவு கண் விழிப்பவர்கள் என அனைவருக்கும், ‘Circadian Rythm” சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்தியாவில் ஒரு ஆண்டில் 10 மில்லியன் மக்கள் தூக்கமின்மையால் பாதிப்படைகிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. தூக்கமின்மை என்பது, பல வகையில் இருக்கலாம். படுத்த பின் தூங்கமுடியாமல் மெத்தையில் புரண்டு கொண்டு இருப்பது, சில மணிநேரம் தூக்கத்திற்கு பிறகு முழிப்பு வந்து விட்டால், அதன் பிறகு தூங்க முடியாமல் போவது, இல்லையேல் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகும் அசதியாக உணர்வது என, எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தூக்கமின்மை என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக கருதப்பட்டாலும், அது பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுடன் நெருங்கிய தொடர்புடையது.

உடல்வலி ஆஸ்துமா, மூட்டு சம்மந்தமான கோளாறுகள், தைராய்ட் சுரப்பி அளவிற்கு அதிகமாக செயல்படுவது (Hyper thyrodism) இரத்த சோகை போன்ற பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறியாக தூக்கமின்மை இருக்கலாம். பொதுவாக பதற்றம் சார்ந்த கோளாறுகள் உடையவர்களுக்கு, தூக்கத்தின் தொடக்கம் கடினமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *