புறக்கணிப்பு ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்
சென்னை, ஜன.6
தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட விளக்கத்தில், “அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் புத்தாண்டின் முதல் கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அவைக்கு வருகை தந்தனர். சபாநாயகர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவைக்கு வருகை தந்தனர்.
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சட்டசபை மண்டபத்துக்கு வருகை தந்தார். அவரை சபாநாயகர் மு.அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்காமலேயே சட்டசபையிலிருந்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் அங்கிருந்து வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியவுடன் தேசிய கீதம் இசைக்க கவர்னர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதனைவிடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் கவர்னர் அதிருப்தியடைந்து அவையில் இருந்து வெளியேறியது 2வது முறையாகும். கடந்த ஆண்டு உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்காமல் முதல் பக்கத்தையும், கடைசி பக்கத்தையும் மட்டும் வாசித்துவிட்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்னர் மாளிகை விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள விள்ளக்கத்தில், “இந்திய அரசியலமைப்பும், தேசிய கீதமும் மீண்டும் தமிழக சட்டசபையில் இன்று அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் படி தேசிய கீதத்தை மதிப்பது என்பது முதன்மையான அடிப்படையான கடமையாகும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை தொடங்கும் முன்னர் தேசிய கீதமே இசைக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து சட்டசபைகளிலும் தேசிய கீதம் தான் கூட்டத் தொடர் தொடங்கும் போதும், முடியும் போதும் இசைக்கப்படுகிறது.
ஆனால் இன்று கவர்னர் வருகையின்போது அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. கவர்னர் அவைக்கு இதனை சுட்டிக்காட்டி சட்டசபையில் தேசிய கீதத்தை இசைத்து அவை தனது அரசமைப்பு கடமையை செய்யும்படி சபாநாயகருக்கு, முதல்வருக்கும் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இது உற்று கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். அரசமைப்புக்கும், தேசிய கீதத்துக்கும் அப்பட்டமான அவமரியாதை செய்பவர்களுடன் துணை நிற்கக்கூடாது என்பதால் கவர்னர் வருத்தத்துடன் அவையில் இருந்து வெளியேறினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டசபையில் கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, சபாநாயகர் அப்பாவு தமிழில் அந்த உரையை வாசிப்பது வழக்கம். ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலே வெளியேறியதால், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.