நல்வாழ்வுச் சிந்தனை
பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேல்பற்றாகப் போடுவதால் தோல் மேல் இருக்கும் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியவை குணமாகும்.
பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.
பச்சை உருளைக் இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப் பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகின்ற தலைவலி தணியும்.
உருளைக் கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணமற் போகும்.
பாலுள்ள, பிசுபிசுப்பான காய்கறிகளைக் கையாள்வதாலோ வேறு ஏதேனும் காரணங்களால் கைகளில் பிசுபிசுப்பு ஏற்பட்ட நிலையில் உருளைக் கிழங்கு பசையை கைகளில் இட்டுத் தேய்த்துக் கழுவ பிசுபிசுப்புத் தன்மை பறந்து போகும்.