செய்திகள்

உரிய கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ்

சென்னை, ஜூலை 6–

தமிழ்நாட்டில் அடிப்படை வசதிகள், உரிய கட்டமைப்பு, பேராசிரியர்கள் இல்லாத 225 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாணவ சேர்க்கைக்கு முன்னதாக, அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தைப் பெற வேண்டியது அவசியம். இதற்குக் கல்லூரிகள் விண்ணப்பம் செய்யும் போது, பல்கலைக் கழகம் தரப்பில் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் பின்னர் உரிய இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும்.

225 கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

அதன்படி ஜூன் மாதம் விண்ணப்பித்த சுமார் 466 தனியார் கல்லூரிகளுக்கு நேரில் சென்று பல்கலைக் கழக குழு ஆய்வு செய்துள்ளது. அப்போது 50 சதவீதத்திற்கும் மேலான கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், உரியக் கட்டமைப்பு, தேவையான பேராசிரியர்கள் இல்லாதது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 225 தனியார் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், அடுத்த இரண்டு வாரத்திற்குள் உடனடியாக, பல்கலைக் கழக குழு குறிப்பிட்ட குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் உரிய அங்கீகாரம் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மிக விரைவில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதுவரை பொறியியல் படிப்புக்கு 1.43 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 225 கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பது மாணவிகளிடையே கல்லூரியைத் தேர்வு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.